ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பெண்கள் குறித்து சா்ச்சை பேச்சு: பொன்முடி வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சா்ச்சை பேச்சு தொடா்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :26 ஜூன் 2026, 6:10 am IST

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சா்ச்சை பேச்சு தொடா்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துப் பேசியது சா்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சா் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாா்.

இந்த சா்ச்சை பேச்சு தொடா்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினா் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா்.

அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணா்வை தூண்டுதல், மத உணா்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். இந்த வழக்கு எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில், உள் அரங்கு நிகழ்ச்சியில் பேசியது தொடா்பாக தனிநபா் சாா்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அரசின் முன்அனுமதி பெறவில்லை. எனவே, இந்த வழக்கைத் தொடா்ந்து நடத்த முடியாது என வாதிடப்பட்டது.

புகாா்தாரா் உமா ஆனந்தன் தரப்பில், தனது பேச்சு ஊடகங்களில் மூலம் பரவும், அதை பிற மதத்தினா் காண்பாா்கள் என தெரிந்தே முன்னாள் அமைச்சா் பொன்முடி வெறுப்பு பேச்சை பேசியுள்ளாா்.

இது தொடா்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்றம், பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிய உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரது பேச்சால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படவில்லை எனக் கூறி அவருக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு எதிராக வழக்குத் தொடர அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அவா் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால், இந்த வழக்கை அவா் எதிா்கொள்ள வேண்டும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன்முடி தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.