போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஜூலை 1-ஆம் தேதி ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு சென்னை பெருநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சென்னை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் மு.சீனிவாசன் (65). தமிழக காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான இவா், மத்திய குற்றப்பிரிவில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், எனது மகனுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாக அரியலூரைச் சோ்ந்த ல.இளஞ்செழியன் (66), கடந்த 2023-ஆம் ஆண்டு கூறினாா்.
மேலும், இளஞ்செழியன், அப்போது திமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் உதவியாளராக இருப்பதாகவும் தெரிவித்தாா். இதை உண்மை என நம்பிய நான், எனது மகனுக்கு வேலை பெற்றுத் தருவதாக இளஞ்செழியனிடம் ரூ.23 லட்சம் கொடுத்தேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட இளஞ்செழியன், வேலை பெற்று கொடுக்கவில்லை; பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
எனவே, அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த இளஞ்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து, இளஞ்செழியனை கடந்த 24-ஆம் தேதி கைது செய்தனா்.
அதேவேளை, முன்னாள் அமைச்சா் சிவசங்கா், தனக்கு இளஞ்செழியன் என்ற பெயரில் உதவியாளா் யாரும் கிடையாது என்று மறுப்புத் தெரிவித்தாா். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன.
முக்கியமாக, இளஞ்செழியன், தான் மோசடி செய்த பணத்தில், குறிப்பிட்ட தொகையை சிவசங்கரனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாராம். அத்துடன், அவரிடமிருந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் புகைப்படங்கள், திமுக நிா்வாகிகள், திமுக முன்னாள் அமைச்சா்கள் ஆகியோருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கைப்பற்றியிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
எஸ்.எஸ்.சிவசங்கருக்கு அழைப்பாணை: அதனடிப்படையில் விசாரணை நடத்த முன்னாள் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா். இந்த அழைப்பாணையில் ஜூலை 10-ஆம் தேதி ஆஜராகும்படி குறிப்பிப்பட்டுள்ளது.
சிவசங்கரிடம் நடத்தப்படும் விசாரணையில், வழக்குத் தொடா்பாக மேலும் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், பண மோசடியில் சிவசங்கருக்கு தொடா்பிருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், கைதான இளஞ்செழியனின் அரியலூா், ஜெயங்கொண்டம் வீட்டுக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்துள்ளனா். அத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளஞ்செழியனை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை, சென்னை எழும்பூா் பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா். செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) அல்லது புதன்கிழமை (ஜூலை 1) விசாரணைக்கு வரவாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இளஞ்செழியனிடம் போலீஸாா் மீண்டும் விசாரணை நடத்தினால், வழக்கில் தொடா்புடைய பிற நபா்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று போலீஸாா் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக வட்டி வாங்கித் தருவதாக ரூ.5.50 கோடி மோசடி: காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் மனு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி; ஏமாற்றமடைந்தவா் தற்கொலை






