தில்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் திரும்பியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக இரு நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வர் விஜய் புதன்கிழமை காலை புறப்பட்டுத் தில்லி சென்றார்.
தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற விஜய்யை தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தில்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் பேசினார். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம், நிதி ஒதுக்கீடு, மீனவர்கள் கைது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி மனு அளித்திருந்தார்.
தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர் சந்திக்க நேரம் ஒதுக்காததால் சந்திப்பு நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், நேற்று அமித் ஷாவைக் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்தித்திருந்தார்.
தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதல்வர் விஜய், தமிழ்நாடு இல்லத்தில் நேற்றிரவு தங்கியிருந்தார்.
இன்று காலை காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
சோனியா காந்தியின் இல்லமான ’10 ஜன்பத்’துக்கு வெளியே முதல்வர் விஜய்யை வரவேற்கும் வகையில், அவரும் ராகுல் காந்தியும் இருக்கும் புகைப்படத்துடன் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தனது பயணத்தை முடித்துவிட்டு தில்லியிலிருந்து முதல்வர் விஜய் சென்னை புறப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பானது தில்லி பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
இத்தனைக்கும் தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸும் இடம் பெற்றிருக்கிறது.
மேலும், இன்று தில்லி திரும்பும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவையும் முதல்வர் விஜய் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அவரையும் சந்திக்காதது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தில்லியில் பிரதமரைச் சந்தித்தால், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, பிரதமரிடம் என்ன பேசினார்கள்? என்னென்ன கோரிக்கை வைத்தார்கள்? என்பது குறித்து விளக்கம் அளிப்பதை மரபாக வைத்திருந்தனர்.
இந்த மரபின்படி, முதல்வர் விஜய்யும் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களைச் சந்திக்காமலே தில்லியில் இருந்து புறப்பட்டுவிட்டார்.
இதனிடையே, தில்லியில் ஜூன் 11-ல் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும்போது காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் விஜய் சந்திப்பார் என காங்கிரஸ் எம்.பி.யான கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.
Summary
Why Was the Chief Minister Vijay – Rahul gandhi Meeting Cancelled?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுலை விஜய் சந்திக்காதது ஏன்? காங்கிரஸ் எம்.பி. விளக்கம்

ராகுலைச் சந்தித்த பிறகு 16 ஆண்டுகளுக்கு முன் என்ன சொன்னார் விஜய்? காலம் செய்தது என்ன?
அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி







