சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களிடம் செல்வாக்கை செலுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, தவெக ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க வேண்டும் என குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தது, பணப்பட்டுவாடா நடந்துள்ளது ஆகியவை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தவெக, திமுக, அதிமுக ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொது நல மனுவில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக, அதிமுக-வுக்கு எதிராகவும், பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களிடம் செல்வாக்கை செலுத்தியதாக தவெக கட்சியினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர், வெறும் செய்தியின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; தேர்தல் முடிவுகள் அறிவுக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும்; தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார்.
திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஆர்.இளங்கோ, குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்தியதாக தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை; ஊழல் நடவடிக்கையை பொருத்தவரை வெற்றிபெற்ற வேட்பாளரை எதிர்மனுதாரதாக சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபாலும் இதே வாதங்களை முன்வைத்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி திமுக, அதிமுக, தவெக, தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Summary
Cash Distribution to Voters: Madrs HC orders Election Commission, Parties to reply this matter
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








