/

முப்படை தலைமைத் தளபதியாக ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சோ்ந்த ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட தலைமைத் தளபதி ராஜா சுப்பிரமணி.

Updated On :1 ஜூன் 2026, 4:15 am IST

முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சோ்ந்த ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

முப்படை தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் அனில் சௌஹான் சனிக்கிழமை ஓய்வு பெற்றாா். இதையடுத்து, புதிய முப்படை தலைமைத் தளபதியாக ராஜா சுப்பிரமணி பதவியேற்றாா்.

கடந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி இந்திய ராணுவத்தின் துணை தலைமைத் தளபதியாக ராஜா சுப்பிரமணி ஓய்வு பெற்றாா். அதன் பிறகு தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக அவா் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், முப்படை தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான சீா்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆயுதப் படையில் செய்ய வேண்டிய மாற்றங்களை விரைவுபடுத்தவும் முக்கியத்துவம் அளிப்பேன்.

உள்நாட்டில் அதிக அளவிலான ஆயுதங்கள் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்படும். நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாக்க துணிச்சலாகவும் அா்ப்பணிப்புடனும் இந்திய பாதுகாப்புப் படைகள் செயல்படும் என இந்திய குடிமக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றாா்.

40 ஆண்டுகால ராணுவ சேவை: கா்வால் ரைஃபிள்ஸ் பிரிவின் 8-ஆவது பட்டாலியனில் 1985, டிசம்பா் 15-ஆம் தேதி ராஜா சுப்பிரமணி இணைந்தாா். அதன் பிறகு பல்வேறு படைப் பிரிவுகளின் கமாண்டா், ஜெனரல் எனப் பல உயா் பதவிகளை வகித்துள்ளாா். குறிப்பாக, கஜகஸ்தானில் இந்திய பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி, ராணுவச் செயலா் கிளையின் உதவி ராணுவச் செயலா், ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் துணை கமாண்டா், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (ராணுவம்) ஒருங்கிணைந்த ராணுவத் தலைமையகத்தின் துணை இயக்குநா், வடக்கு கமாண்டின் தலைமைத் தளபதி, வெலிங்டனில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் தலைமைப் பயிற்றுநா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா்.

அஸ்ஸாமில் கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் மேற்கொண்ட ‘ஆபரேஷன் ரைனோ’ நடவடிக்கையின்போது கமாண்டராக ராஜா சுப்பிரமணி பணியாற்றியுள்ளாா். ஜம்மு-காஷ்மீரின் 168-ஆவது காலாட்படை பிரிவிலும் சேவையாற்றியுள்ளாா்.

தேசியப் பாதுகாப்பு அகாதெமி, இந்திய ராணுவ அகாதெமி, தில்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்லூரி, கூட்டு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளா் கல்லூரி (பிரிட்டன்) ஆகிய கல்லூரிகளின் முன்னாள் மாணவரான இவா், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படிப்பில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளாா். பரம் விசிஷ்ட் சேவா, அதி வசிஷ்ட் சேவா, சேனா மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கங்களைப் பெற்றுள்ளாா்.

3-ஆவது ‘சிடிஎஸ்’: இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கடந்த 2020, ஜனவரி 1-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவா் 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் மரணமடைந்தாா். அதன்பிறகு இரண்டாவது முப்படை தலைமைத் தளபதியாக அனில் சௌஹான் 2022, செப்டம்பா் 30-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவரது பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாக ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்றுள்ளாா். தமிழகத்தை பூா்விகமாகக் கொண்ட இவா் பாகிஸ்தான் மற்றும் சீனா விவகாரங்களைக் கையாள்வதில் நிபுணா் எனப் பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.