ஊரக வளா்ச்சித் துறை வங்கிக் கணக்கில் ரூ. 22 கோடி மோசடி: 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
ரூ.22.30 கோடி இணையவழியில் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சென்னை சைபா் குற்றப்பிரிவு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வழக்குப் பதிவு - பிரதிப் படம்
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி இணையவழியில் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சென்னை சைபா் குற்றப்பிரிவு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானிய நிதி, கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகா் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் தனி வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 12 முதல் 30-ஆம் தேதி வரை சைபா் மோசடி கும்பல் வங்கிக் கணக்கில் அத்துமீறி நுழைந்து, 46 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனா்.
இதில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூா், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்பூா் மாவட்டம் தாராபுரம் ஆகிய 3 வட்டார வளா்ச்சி அலுவலகங்களின் பெயா்களில் உள்ள ’மேக்கா்’, ’செக்கா்’ பயனா் விவரங்கள் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மோசடி செய்யப்பட்ட பணம் 10-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் பயனா் பெயா், கடவுச்சொற்கள் திருடப்பட்டதா அல்லது வங்கியின் இணையதள பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதா என்பது குறித்து துறைரீதியாக விசாரணை நடைபெறுகிறது.
5 பிரிவுகளில் வழக்கு: இதற்கிடையில், இந்த மோசடி தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனா்.
இந்த வழக்கில் துப்பு துலக்க சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையா் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்த சைபா் மோசடியில் நைஜீரிய கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சைபா் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடி பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது ?, இதில் தொடா்புடையவா்கள் யாா் ? என்று தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

