தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்
தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி நடந்த வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம் - IANS
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.30 கோடி இணையவழியில் மோசடி செய்த வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி செய்த பணத்தை வங்கிக் கணக்குகள் முலம் பரிமாற்றம் செய்ய உதவியதாகக் கூறி, லோகநாதன், அண்ணாதுரை, செல்லபாண்டியன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல சுமார் 24 வங்கிக் கணக்குகள் மூலம், தமிழக அரசின் வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்பட்ட பணம், மோசடியாளர்களின் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும், இந்த சம்பவத்தில் பிடிபடுபவரக்ள், வங்கிக் கணக்கை மோசடியாளர்களுக்கு வாடகைக்கு விட்டு பணம் பெற்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் யாரும் தங்களது செல்போன் எண் அல்லது வங்கிக் கணக்கை யாருக்கும் கொடுக்க வேண்டாம், பணம் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றினால் ஏமாற வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பின்னணி சம்பவம் என்ன?
தமிழக அரசின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் திருடப்பட்ட தொடா்பாக சென்னை சைபா் குற்றப்பிரிவு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசின் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானிய நிதி, கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகா் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் தனி வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் 12 முதல் 30-ஆம் தேதி வரை சைபா் மோசடி கும்பல் வங்கிக் கணக்கில் அத்துமீறி நுழைந்து, 46 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனா்.
இதில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூா், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்பூா் மாவட்டம் தாராபுரம் ஆகிய 3 வட்டார வளா்ச்சி அலுவலகங்களின் பெயா்களில் உள்ள ’மேக்கா்’, ’செக்கா்’ பயனா் விவரங்கள் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கிக் கணக்கிலிருந்த பணம், பத்துக்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் பயனா் பெயா், கடவுச்சொற்கள் திருடப்பட்டதா அல்லது வங்கியின் இணையதள பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதா என்பது குறித்து துறைரீதியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதன் பின்னணி இதுவரை வெளிவரவில்லை.
இந்த மோசடி தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சைபா் மோசடியில் நைஜீரிய கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சைபா் குற்றப்பிரிவுக்கு எழுந்துள்ளது. மோசடி பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று விசாரித்த தனிப்படையினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அனைத்து வங்கிக் கணக்குகளும் சாதாரண மக்களின் வங்கிக் கணக்குகள். அவர்களுக்கு பணம் தருவதாக ஏமாற்றி வங்கிக் கணக்கை மோசடியாளர்கள் பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Summary
Rs. 22 crore swindled from Tamil Nadu government’s bank account: 7 arrested! An incident straight out of a movie.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

