சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

காங்கிரஸ் திமுகவிடம் நாகரிகமாக நடந்திருக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் சந்திப்பது பற்றி கார்த்தி சிதம்பரம் எம்பி பேசியவை...

Congress MP Karti chidambaram

கார்த்தி சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :

தேர்தல் கூட்டணியிலிருந்து விலகுகையில் திமுகவிடம் காங்கிரஸ் நாகரிகமாக நடந்துகொண்டிருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க திமுக முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்து ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், “இந்த மசோதா நிறைவேற்றப்படக்கூடாது என காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன.

அந்த வகையில், கடந்த முறை இந்த மசோதாவுக்கு எதிராகத் தீர்ப்பளித்த திமுக, மீண்டும் இந்த முறையும் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ஒரு முயற்சியாக காங்கிரஸ் கட்சித் தலைமையும், அரசியல் கட்சித் தலைவர்களும் வந்துள்ளனர்.

ஆனால் திமுக தன்னுடைய நிலைப்பாட்டை நேற்றே அவர்களுடைய ஒரு தீர்மானத்தின் மூலமாக வெளிப்படுத்தி, பாஜக தலைமையையும் சந்தித்து விட்டார்கள்.

இனிமேல் அவர்கள் மனது மாற்றுவார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் இந்த முயற்சியில எந்த தொய்வும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சித் தலைமையும் இந்தியா கூட்டணி தலைமையும் ஒரு முயற்சியில ஈடுபட்டிருக்கிறார்கள்” என்றார்.

மேலும் பேசுகையில், “தேர்தலுக்கு முன்பாக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தீர ஆலோசனை செய்து, காங்கிரஸ் கட்சியில இருக்கிற எல்லா முன்னோடி தலைவர்களுடைய கருத்தையும் கேட்டு தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்து திமுகவுடன் தேர்தல் கூட்டணியை தொடர்ந்தோம். தேர்தலில் எங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தேர்தலுக்கு பின்னர் நாங்கள் திமுகவோடு இருந்திருந்தாலும் அவர்களால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.

ஆனால் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொண்டு அணி மாறினோம் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அணி மாறும் பொழுது திமுகவிடமிருந்து விடைபெற்று செல்வதில் சில நடைமுறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும்.

அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, அந்த தேர்தலிலே அவர்கள் எங்களுக்கு செய்த பணி இது எல்லாவற்றிற்கும் நன்றி மரியாதை செலுத்திவிட்டு நாங்கள் வெளியேறி இருக்க வேண்டும். அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

அந்த அணி மாறும் சூழலை இன்னும் கொஞ்சம் கௌரவமாக, இன்னும் கொஞ்சம் ஒரு நாகரிகமாக நாங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அதனால் அவர்களுக்கு எங்கள் மீது ஒரு மனஸ்தாபம் இருக்கிறது என்பதையும் நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அந்த மனஸ்தாபத்துக்காகவே அவர்கள் இன்றைக்கு ஒரு அரசியல் முடிவை எடுக்கிறார்கள் என்றால், அது எங்கள் மீது இருக்கும் வருத்தத்தை விட இந்தியாவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும், தமிழ்நாட்டை என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு எங்கள் மீது ஒரு மனஸ்தாபம் இருக்கிறது; அந்த மனஸ்தாபம் இல்லாமல் நாங்கள் நடந்திருக்க வேண்டும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

நான் கொள்கை ரீதியாக ஒருவரை எதிர்ப்பை தெரிவிப்பேனே தவிர, தனிப்பட்ட முறையில் நான் என்னைக்குமே எந்த அரசியல் கட்சி தலைவரையும் விமர்சித்தது கிடையாது. எல்லா அரசியல் கட்சி தலைவர்களோடும் நல்ல உறவை கொண்டிருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சியான அரசியல் என்று நினைப்பவன் நான்” என்று அவர் பேசியுள்ளார்.

Summary

Karti Chidambaram MP’s remarks regarding the meeting between DMK leader Stalin and representatives from the Congress and other INDIA bloc parties concerning the constituency delimitation bill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.