
அனுமதியின்றி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து
அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2022 அக்டோபா் மாதம் தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளியேற்றப்பட்டனா். இதைக் கண்டித்து, சென்னை வள்ளுவா் கோட்டத்தில், அக்.19-இல், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இதைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் வள்ளுவா் கோட்டத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். 2022-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. ஜனநாயக ரீதியில் போராடுவோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க முடியாது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக நுங்கம்பாக்கம் போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




