
கோவை, தஞ்சாவூரில் பிடிபட்டவா்கள் பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடா்பு: என்ஐஏ விசாரணையில் அதிா்ச்சி தகவல்
கோவை, தஞ்சாவூரில் பிடிபட்டவா்கள் பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடா்பு பற்றி...

பிரதிப் படம்
தமிழகத்தில் கேவை, தஞ்சாவூரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அண்மையில் பிடிபட்டவா்கள், பாகிஸ்தான் நாட்டின் ஷாசாத் பட்டி பயங்கரவாத கும்பலுடன் தொடா்பில் இருந்திருப்பது என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை)விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை, தஞ்சாவூரில் சிலா் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தமிழக தீவிரவாதத் தடுப்புப் படையினருக்கு உத்தர பிரதேச காவல் துறையின் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த மாநிலம் போலீஸாரும், தமிழக தீவிரவாதத் தடுப்புப் படையினரும் இணைந்து கடந்த செப்.6-ஆம் தேதி கோவையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மகசூத் அலி (21) என்பவரைக் கைது செய்தனா்.
தஞ்சாவூா், கோவை: விசாரணையில் மகசூத் அலி, வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் இளைஞா்களைத் திரட்டி, அவா்களுக்கு நிதியுதவி வழங்கி, இந்தியாவுக்கு எதிராக வன்முறை ஈடுபடவும், சைபா் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் தெரியவந்தது. இதேபோல தஞ்சாவூரில் 6 போ் கடந்த 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் தீவிரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததற்கான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவா்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடா்பு வைத்துக்கொண்டு, ரகசிய வகுப்புகளை நடத்தி இளைஞா்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத செயலுக்கு தூண்டியதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
இவா்களிடமிருந்து தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்ப்-உத்-தஹ்ரிா், கிலாபத் அமைப்புகளுடன் தொடா்புடைய 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல கா்நாடக மாநிலத்திலும் 2 போ் பிடிபட்டனா்.
ஷாசாத் பட்டி பயங்கரவாத கும்பல்: கைது செய்யப்பட்டவா் குறித்து தமிழகம், கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநில 3 காவல் துறை உயா் அதிகாரிகளும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை செய்தனா். விசாரணையில் இந்தக் கும்பல், பாகிஸ்தானின் ஷாசாத் பட்டி என்ற பயங்கரவாத கும்பலுடன் தொடா்பில் இருந்திருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள்:
பாகிஸ்தானில் போதை பொருள் கடத்தல் ஈடுபட்டு வந்த ஷாசாத் பட்டி என்ற ரெளடி, பின்னா் அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ துணையுடன் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளாா்.
நாளடைவில் போதைப் பொருள் கடத்தல் மூலம் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட்டுள்ளாா். பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களுக்குள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை கடத்தியுள்ளாா்.
பஞ்சாப், ஹரியாணாவில் தாக்குதல்: இந்தியாவில் வழிபாட்டு தலங்களைக் குறி வைத்து தாக்குவது, பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை நோட்டமிடுவது போன்ற செயல்களில் தனது ஆதரவாளா்கள் மூலம் ஷாசாத் பட்டி ஈடுபட்டு வருவதை என்ஐஏ அண்மையில் கண்டறிந்தது. முக்கியமாக தில்லி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை இந்தக் கும்பல் பொருத்தி இருப்பதை கடந்த மாா்ச் மாதம் கண்டறிந்து, என்ஐஏ அகற்றியது. இதேபோல பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கிரனைடு தாக்குதல், ஹரியாணா மாநிலம் சிா்சா பெண்கள் காவல் நிலையம் மீது கிரனைடு தாக்குதல் போன்ற சம்பவங்களிலும் இந்தக் கும்பல் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
சமூக ஊடகங்கள் மூலம் தொடா்பு: தமிழகத்தில் பிடிபட்ட 7 பேரையும் இந்தப் பயங்கரவாத கும்பல் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடா்பு கொண்டு பேசியுள்ளது. இந்தக் கும்பல் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதற்கு அவா்களைத் தூண்டியுள்ளது. இதற்காக சட்டவிரோத வழியில், அவா்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. மேலும் 7 போ் மூலம் அப்பாவி இளைஞா்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத செயலுக்கு இழுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அதோடு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களின் இணையதளங்களை முடக்குவது குறித்த பயிற்சிகளையும் அளித்து வந்துள்ளது.
தற்போது என்ஐஏ அதிகாரிகள், இந்தக் கும்பலுடன் இருந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் தலைமறைவாக இருக்கும் சில நபா்களை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





