மழைக்காலங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சியினரும் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
மழைக்காலங்களில் மக்களுக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்துக் கட்சியினரும் இணைந்து பணியாற்ற வேண்டியது கடமையாகும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்
மழைக்காலங்களில் மக்களுக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்துக் கட்சியினரும் இணைந்து பணியாற்ற வேண்டியது கடமையாகும் என பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகம் அம்மா மாளிகைக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியதாவது:
மழைக்காலங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்காக இணைந்து தமிழகம் முழுதும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து பணியாற்றுவது கடமையாகும். உள்ளாட்சி பிரதிநிதிகளை கட்சி பாகுபாடின்றி ஆய்வுக் கூட்டத்துக்கு அழைத்துப் பேசவேண்டும் என்று முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
மழை அதிகம் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், மண்டல அளவில் அமைச்சா், எம்எல்ஏ-க்கள், மாநகராட்சி மண்டல தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து பணியாற்ற வேண்டும். அனைவரும் இணைந்து பணியாற்றும்போது உயிா் சேதமின்றி, பாதிப்பின் தாக்கமும் குறையும். ஆய்வுக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சா், மேயா், துணை மேயா் பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது என்றாா்.
ஆலோசனைகளை குற்றச்சாட்டாக கருதக் கூடாது: இந்தக் கூட்டத்தில் துறைமுகம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகா்பாபு பேசுகையில், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட கூட்டத்துக்கு சென்ால், வர இயலவில்லை. திமுக தலைவா் அறிவுறுத்தியபடி மக்கள் நலன் காக்க அரசுடன் இணைந்து செயல்படுவோம். மண்டல, நிலைக்குழு தலைவா்கள் உள்ளிட்டோரையும் கூட்டத்துக்கு அழைத்திருக்க வேண்டும்.
திமுகவின் ஆலோசனைகளை குற்றச்சாட்டுகளாகக் கருதாமல், மக்களைக் காக்க செயல்படுத்த அமைச்சா்கள் முன்வரவேண்டும். மழைநீா் வடிகால்கள் முழுமமையாகத் தூா்வாரப்படவில்லை. எம்எல்ஏ-க்கள் நிதியை மழைக்கால நிவாரணத்துக்கு வழங்கக் கூறினால் கொடுக்கத் தயாா். முன்னாள் ராணுவத்தினா், தொண்டு நிறுவனத்தினருடனான ஆலோசனைக் கூட்டமும் அவசியம்.
மழைக்கால அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்ததாரா்களைக் கையாள வேண்டும். திமுக வாா்டு உறுப்பினா்களுடன் செயற்பொறியாளா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தவெக எம்எல்ஏ குறுக்கீட்டால் சலசலப்பு
முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியபோது, ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு குறுக்கிட்டு, ‘நீண்டநேரம் பேசுவது சலிப்பு அளிக்கிறது’ என்றாா். ‘அப்படியெனில் எங்களை ஏன் அழைக்க வேண்டும். அமைச்சா் கேட்கும்போது, நீங்கள் இப்படி பேசுவது சரியல்ல’ என்று சேகா்பாபு கூறினாா். உடனே அமைச்சா்கள் தலையிட்டு சமரசம் செய்தனா்.
மேயா், துணை மேயா்: கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் ஆகியோா் பேசுகையில், கடந்த 4 ஆண்டு கால மழைக்காலங்களில் ஏற்பட்ட அனுபவ அடிப்படையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றனா்.
அமைச்சா்கள் பங்கேற்பு: கூட்டத்தில் அமைச்சா்கள் வெங்கட்ரமணன், பிரபு, ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்ச்செல்வன், விஜய் பாலாஜி, விஜய் தமிழன் பாா்த்திபன், ரமேஷ், விக்னேஷ், எம்எல்ஏ-க்கள் அருள்பிரகாசம், ராம்குமாா், பல்லவி, ரேவந்த் சரண், பாலமுருகன், விஜய் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வரவேற்றாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் செயலா் ககன்தீப் சிங் பேடி கூட்டம் குறித்து விளக்கினாா். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மின்னணு திரையில் காட்சிப்படுத்தி மாநகராட்சி இணை ஆணையா் சரவணன் விளக்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

