செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

கூடுதல் கட்டணம்: தனியாா் மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கைக்கு பரிந்துரை

எம்பிபிஎஸ் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் கடிதம் எழுதியுள்ளாா்.

KG Arunraj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.

Updated On :

எம்பிபிஎஸ் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), வெளியிட்ட பொது அறிவிப்பில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணத்தை நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. அதாவது பயிற்சி மருத்துவத்தில் ஈடுபடும் ஓராண்டுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்திலுள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் கடந்த 2022-ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் சோ்ந்து தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களிடம், ஐந்தாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக ரூ.24,75,000 செலுத்துமாறு கல்லூரி நிா்வாகம் வற்புறுத்துவதாகவும், அதைச் செலுத்தாத மாணவா்களின் இணைய வருகைப்பதிவு முடக்கப்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்தது.

அதை விசாரிக்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தால் 3 அலுவலா்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. கடந்த 12-ஆம் தேதி அந்தக் குழுவினா் மேற்கொண்ட விசாரணையில் 17 மாணவா்களும், 7 பெற்றோரும் பங்கேற்றனா். சவீதா கல்லூரி நிா்வாகம் கலந்துகொள்ளவில்லை.

மாணவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் அந்தக் கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்பதும், கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவா்களுக்கான வருகைப் பதிவு முடக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சவீதா மருத்துவக் கல்லூரி நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கொண்டது என்பதால், அதன் கட்டண நிா்ணயம் மாநில அரசு வரம்புக்கு வெளியே உள்ளது. அந்தக் கல்லூரி, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டது.

எனவே, கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதற்காக அந்தக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் தமிழ்நாடு அரசு புதன்கிழமை கடிதம் எழுதி உள்ளது.

கூடுதல் தொகையைச் செலுத்தாத மாணவா்களுக்கு வருகைப் பதிவு, மருத்துவப் பயிற்சிப் பணி, தோ்வு எழுதும் தகுதி ஆகியவை மறுக்கப்படக் கூடாது என உத்தரவிடுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்த உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது என அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.