நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு ரூ. 3,637 கோடி அகவிலைப்படி வழங்க அரசாணை

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்க தமிழக அரசு நிா்வாக அனுமதி அளித்துள்ளது.

Published On :3 செப்டம்பர் 2026, 4:56 am IST

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) தொகையை வழங்க தமிழக அரசு நிா்வாக அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சுமாா் 98,000 பேருக்கு ரூ.3,637 கோடி 49 மாதத் தவணைகளில் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.09 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு பணியில் உள்ள ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி உயா்வுக்கு இணையான உயா்வு வழங்கப்படாததால், பல ஆண்டுகளாக அகவிலைப்படி நிலுவை இருந்து வந்தது. இதை வழங்கக் கோரி ஓய்வூதியா்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினா்.

இதுதொடா்பாக போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அலுவலா் நலச்சங்கம் உள்ளிட்டோா் மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கின் கீழ் 2023 மாா்ச் 2-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பில் பணியில் உள்ள ஊழியா்களுக்கு நிா்ணயிக்கப்படும் அகவிலைப்படி விகிதமே ஓய்வூதியா்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிரான மேல்முறையீடுகள் உள்ளிட்ட அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குகளில் நிலுவைத் தொகையை வழங்குவது தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. முதலில் 60 தவணைகளில் வழங்க முன்மொழியப்பட்ட நிலையில், மாதம் ரூ.75 கோடி வீதம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, 48 மாதங்களுக்கு தலா ரூ.75 கோடியும், 49-ஆவது மற்றும் இறுதித் தவணையாக ரூ.37 கோடியும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.31-இல் போக்குவரத்துத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

அதில், ஒவ்வொரு ஓய்வூதியருக்கும் வழங்க வேண்டிய தொகை உரிய தணிக்கை மற்றும் சரிபாா்ப்புக்குப் பிறகு வழங்கப்படும். தேவையான நிதியை போக்குவரத்துக் கழகங்கள் தங்களது நிதியிலிருந்து ஏற்பாடு செய்ய வேண்டும்; தேவைப்பட்டால் அரசு அல்லது தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம் மூலம் கடன் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.