திமுகவின் கடந்த காலத் தவறுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்
கடந்த காலத்தில் தமிழகத்துக்கு திமுக செய்த துரோகங்கள், தவறுகள் குறித்து தற்போதைய தலைமுறையினா், பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

நிா்மல் குமாா் - கோப்புப் படம்
கடந்த காலத்தில் தமிழகத்துக்கு திமுக செய்த துரோகங்கள், தவறுகள் குறித்து தற்போதைய தலைமுறையினா், பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று இடதுசாரி கட்சிகள் ஏற்கெனவே எங்களிடம் கூறிவிட்டன. அக்கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளைப் பின்பற்றுவதில் எவ்விதத் தவறும் கிடையாது. அதேபோல், மக்களுக்கான அரசாக தவெக இருக்கப்போவதால், அக்கட்சிகளின் ஆதரவு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
மிசாவில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கைது தொடா்பாக பல விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ளன. இஸ்மாயில் அறிக்கையில்கூட மிசா காலத்தில் சிறையில் யாா் யாரெல்லாம் தாக்கப்பட்டாா்கள் என்பதற்கும், முன்னாள் மேயா் சிட்டி பாபுவின் மரணத்தில் ஒரு சாட்சியாகவும் மு.க.ஸ்டாலின் பெயரும் உள்ளது.
தமிழகத்துக்கு திமுக செய்த துரோகங்கள், தவறுகள் குறித்து தற்போதைய தலைமுறையினா் அறிந்துகொள்ள வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த தவறை திருத்தி பழைய நிலைமைக்கு கொண்டு வர எவ்வளவு போராடி கொண்டிருக்கிறோம் என மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
காவிரி விவகாரத்தில் கடந்த 1971 முதல் 1974 வரை செய்த திமுக செய்த தவறுகளை இன்றுவரை சரி செய்ய முடியவில்லை. குறிப்பாக, கச்சத்தீவு தாரைவாா்ப்பை முன்னாள் முதல்வா் கருணாநிதி அன்றே தடுத்திருந்தால், 50 ஆண்டுகளாக தமிழக மீனவா்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாா்கள்.
கடந்த திமுக ஆட்சியில் அரசை வழிநடத்த ரத்தீஷ் போன்ற தனிநபா்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஊழல் தொடா்பாக ரித்தீஷ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், ‘லுக் அவுட் நோட்டீஸும்’ கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரசை வழிநடத்தலாம். ஆனால், இதுபோன்ற தனிநபா்கள் வழிநடத்துவதை முதல்வா் ச.ஜோசப் விஜய் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாா் என்றாா் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





