
விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? அரசுக்கு அன்புமணி கேள்வி
விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? என தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக...

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, அதன் எல்லையில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ ஆகிய பகுதிகளில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்கள், 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்கு கையகப்படுத்துவதற்கான அரசாணை கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் பட்டியல் கடந்த 27.03.2025 ஆம் நாள் நாளிதழ்களிலும், 09.03.2026 ஆம் நாள் தமிழக அரசிதழிலும் வெளியிடப் பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து நிலங்களின் உரிமையாளர்களை ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் வளாகங்களின் விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்திற்கு அழைத்து முந்தைய திமுக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நிலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்துவதாக இந்த நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அவை விதி எண் 110 இன் கீழ் அறிக்கை அளித்த முதலமைச்சர் விஜய் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்களை தயாரிப்பதற்கான செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் அமைக்கப்படும்; இதற்காக ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவித்தார். அந்தப் பூங்கா அமைப்பதற்காக மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘ஆ’ பகுதியில் 14.25 ஹெக்டேர், அதாவது 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், அதற்காகவே நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரமங்கலம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றில் மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அவை தான் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உழவர்களுக்கு நீடித்த வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகின்றன. அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் அவற்றின் உரிமையாளர்களான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, அந்த நிலங்களில் பணியாற்றி வரும் வேளாண் கூலித் தொழிலாளஎகளும் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். இந்த உண்மைகளை உணர்ந்தும் நிலங்களைப் பறிக்க தவெக அரசு துடிப்பது மனிதாபிமானமற்றது.
செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ள மதுரமங்கலம் கிராமம், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த 12 கிராமங்களுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. விமான நிலையத்தின் மையப்பகுதியாக கருதப்படும் பரந்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரில் சென்ற ஏகனாபுரத்திலிருந்து 5 கி.மீ, விமான நிலையத்தின் கிழக்கு எல்லையான சிங்கிலிப்பாடி கிராமத்தை ஒட்டியும், வடகிழக்கு எல்லையான குணகரம்பாக்கம் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலும் மதுரமங்கலம் கிராமம் அமைத்திருக்கிறது. இந்த உண்மைகள் எதுவும் அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
அவ்வாறு இருக்கும் போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், இப்போது மதுரமங்கலத்தில் மட்டும் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்காக உழவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை துரத்தியடிப்பது எந்த வகையில் நியாயம்? விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் ஏற்படாதா? 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் போது, வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423.35 ஏக்கர் நிலம் தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா? என்று அங்குள்ள மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு முதலமைச்சர் விஜய் விடையளிக்க வேண்டும்.
விவசாயிகள் தான் தமிழ்நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் தான் உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாதிக்கப்படும் உழவர்களுக்கு நீதி வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது. பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே நீதி, அதற்கு மிக அருகில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அதற்காக, மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட சிப்காட் வளாகத்தை ஏற்கனவே அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Summary
The Tamil Nadu government has intensified the process of acquiring 410 acres of agricultural land in Maduramangalam village near Parandur in Kancheepuram district for purposes including setting up a semiconductor park.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





