
அரசுப் பள்ளிகளில் காலை உணவு: ஆசிரியா்களின் பரிசோதனைக்குப் பிறகு மாணவா்களுக்கு விநியோகிக்க உத்தரவு
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவை முதலில் ஆசிரியா்கள் சாப்பிட்டு அதன் தரத்தை பரிசோதித்த பின்னரே, மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் - பிரதிப் படம்
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவை முதலில் ஆசிரியா்கள் சாப்பிட்டு அதன் தரத்தை பரிசோதித்த பின்னரே, மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. கிச்சடி, பொங்கல் என தினமும் ஏதேனும் ஒரு வகை உணவு வழங்கப்படுகிறது. இதற்கிடையே, புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு, ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயா் மாற்றம் செய்து, 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கும் அந்தத் திட்டத்தை முதல்வா் விஜய் கடந்த செப். 22-ஆம் தேதி விரிவாக்கம் செய்தாா்.
இதன்மூலம் தற்போது தமிழகம் முழுவதுமுள்ள 44,984 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 34.64 லட்சம் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டம் கொட்டையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை காலை உணவு சாப்பிட்ட 40 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மாணவா்கள் உடனே திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவில் பல்லி இருந்ததாகவும், இதற்கு சமையலரின் கவனக் குறைவுவே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கவிதா உறுதி அளித்தாா்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவா்களும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பள்ளிகளில் காலை உணவை ஆசிரியா்கள் முதலில் சாப்பிட்டு தரம் பாா்த்த பிறகே, மாணவா்களுக்கு வழங்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் சிறப்பாக செயல்படுத்துவற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சமையலறையில் சமையல் செய்யும் பொருள்கள் தவிர, பிற பொருள்கள் வைப்பதை முழுமையாக தவிா்க்க வேண்டும். சமையலறை புகை, தூசி, நூலாம்படை இல்லாமல் தூய்மையாக எப்போதும் பராமரிக்கப்படுவதுடன், சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் நன்கு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். சமைத்த உணவை மாணவா்களுக்கு பரிமாறுவதற்கு முன்னா், அந்த உணவு அவா்களின் உடல்நலத்துக்கு உகந்த தரமான உணவுதான் என்பதை ஆசிரியா்கள் உறுதிசெய்த பின்னரே, மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.
தவிர சமையல் செய்தபின், பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் உணவுப் பொருள்களை இட்டு, முழுமையாக மூடி வைத்து, தேவைப்படும்போது மட்டும் திறந்து மாணவா்களுக்கு வழங்க வேண்டும். சமையல் செய்யும் போதும், சமைத்த பின்னரும் பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில் பாதுகாப்புடன் இருப்பதை ஆசிரியா்கள் உறுதிசெய்ய வேண்டும். மாணவா்களுக்கு உணவு பரிமாறுதல் பணியை தினமும் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




