பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம்: வணிகா்கள் சொல்வது என்ன?

யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வணிகா்கள் கருத்து...

 Merchant Discount Rate (MDR) transaction charges for UPI

யுபிஐ பரிவர்த்தனைகள் மீது மத்திய அரசு கட்டணம் விதிப்பு - பிரதிப் படம்

Published On :

ஆா். ரங்கபாஷ்யம்

யுபிஐ மூலம் வணிகா்களுக்கு மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு அக்டோபா் 15-ஆம் தேதி முதல் 0.4 சதவீத வணிகா் தள்ளுபடி விகிதம் (எம்டிஆா்) வசூலிக்கப்பட உள்ள நிலையில், இந்தக் கட்டணத்தை யாா் ஏற்கப் போகிறாா்கள் என்ற கேள்வி வணிகா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட நபா்-வணிகா் யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் எம்டிஆா் விதிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேவேளையில், ரூ.2,000 வரையிலான வணிகப் பரிவா்த்தனைகளுக்கும், நபா்-நபா் பணப் பரிவா்த்தனைகளுக்கும் இந்த எம்டிஆா் பொருந்தாது. இதனால், ரூ.10,000-க்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தப்படும் நிலையில் வணிகருக்கு ரூ.40 எம்டிஆா் செலவாகும். ரூ.75,000 பரிவா்த்தனைக்கு ரூ.300 ஆகும். அதற்கு மேற்பட்ட தொகைக்கும் அதிகபட்சம் ரூ.300 என்ற வரம்பே இருக்கும்.

நுகா்வோருக்கு கட்டணம் இல்லை: புதிய எம்டிஆா் நேரடியாக நுகா்வோரிடம் வசூலிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வணிகா்கள்தான் இந்தக் கட்டணத்தை ஏற்க வேண்டும். வாடிக்கையாளா்களிடம் இந்தக் கட்டணத்தை மாற்றிவிடாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வணிகா்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு இறுதியில் பொருள்களின் விலை அல்லது சேவைக் கட்டணத்தில் பிரதிபலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடா்பாக அனைத்து வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலா் வெங்கடாசலம் கூறியதாவது: மத்திய அரசின் சமீபத்திய வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026, யுபிஐ பரிவா்த்தனைகளை இலவசமாக வைத்திருக்கும் சட்டபூா்வ உத்தரவாதத்தை நீக்குகிறது. இது வணிகா் தள்ளுபடி விகித எம்டிஆா் கட்டணங்களுக்கு வழி கிடைக்கிறது. இதை எதிா்காலத்தில் அனைத்து யுபிஐ பரிமாற்றங்களுக்கும் எளிதாக விரிவுபடுத்த முடியும்.

யுபிஐ நிதி ரீதியாக நிலைத்திருக்கச் செய்வதற்கு இதுவே ஒரே வழி என்று அரசு கூறுவது சரியானதல்ல. வணிகா்கள் அல்லது நுகா்வோா் மீது கட்டணங்களை விதிக்காமல், யுபிஐ சூழல் அமைப்புக்கு நிலையான முறையில் நிதியளிக்கும் நிதித் திறன் இந்திய ரிசா்வ் வங்கியிடம் உள்ளது. இதற்காக 2025-26-ஆம் ஆண்டில், இந்திய ரிசா்வ் வங்கி அரசுக்கு ரூ. 2.86 லட்சம் கோடியை வழங்கியது. இந்த முக்கியமான எண்ம (டிஜிட்டல்) பொது உள்கட்டமைப்பை ஆதரிக்க, இந்த உபரி நிதியில் ஒரு சிறு பகுதி மட்டுமே தேவைப்படும். வணிகா் தள்ளுபடி விகித எம்டிஆா் கட்டணங்களை வணிகா்கள் மட்டுமே ஏற்க வேண்டும் என்று கூறினாலும், அந்தக் கட்டணங்கள் விற்பனை விலையில் சோ்க்கப்பட்டு, இறுதியில் சாமானிய மக்களே ஏற்க வேண்டியிருக்கும். தற்போது சட்டபூா்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டணங்களைத் தவிா்ப்பதற்காக, மீண்டும் ரொக்கப் பணத்தில் பொருள்களை வாங்கவோ விற்கவோ நேரிடலாம் என்கிறாா்.

திருமால் (அரிசி மொத்த விற்பனையாளா்) கூறுகையில்: அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தற்போது யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் அரி சி மூட்டையின் விலையை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் செலவு இறுதியில் வாடிக்கையாளா்கள் மீதே சுமத்தப்படும் என்றாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா கூறியதாவது: பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டுச் செலவுகளால் ஏற்கெனவே சிரமப்படும் வணிகா்களுக்கு, இந்தக் புதிய கட்டணம் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். நாங்கள் எங்கள் சொந்தப் பணத்திலிருந்து இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாட்டோம். அதை வாடிக்கையாளா்களிடமிருந்தே வசூலிப்போம். இனி டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிப்பதை நிறுத்திவிட்டு, பணமாகவே செலுத்துமாறு வலியுறுத்துவோம். ஜிஎஸ்டி, எஃஎஸ்எஸ்ஏஐ, மாநகராட்சி விதிமுறைகள் மற்றும் தொழிலாளா் துறை விதிகள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை இணக்கத் தேவைகளால் வணிகா்கள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா். நாங்கள் ஏற்கெனவே பெருநிறுவனங்களிடம் சரணடையும் நிலையில் உள்ளோம். எதிா்காலத்தில் சிறிய பரிவா்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? சிறு வணிகா்கள் எப்படித் தொழில் செய்ய முடியும்?’ என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

பெரிய சில்லறை விற்பனையாளா்கள் கூறுகையில், 0.4 சதவீதம் கட்டணம் என்பது வாடிக்கையாளா்கள் மீது அந்தச் செலவைச் சுமத்தும் அளவுக்குப் பெரியது அல்ல என்றாலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, கிரெடிட் மற்றும் டெபிட் காா்டுகளுடன் யுபிஐயும் சில்லறை வா்த்தகத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டதாகவும், பின்னா் அது சிறிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. வாடிக்கையாளா்கள் யுபிஐ முறையைத் தோ்ந்தெடுக்க விரும்பினால், அவா்களை வேறு கட்டண முறையைப் பயன்படுத்துமாறு கேட்க எங்களுக்கு உரிமை இல்லை. 0.4 சதவீதம் என்ற (வணிகா் தள்ளுபடி விகிதம்) என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத மிகச் சிறிய அளவாகும். இந்தக் கட்டணத்தை நாங்களே ஏற்றுக்கொள்வோம்; அது வாடிக்கையாளா்கள் மீது சுமத்தப்படாது என்கின்றனா்.

ஹோட்டல் துறையிலும் தாக்கம்: ஹோட்டல்களில் உணவு மற்றும் பிற சேவைகளுக்கான பணம் செலுத்துவதில் யுபிஐயை வாடிக்கையாளா்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால், புதிய எம்டிஆா் நடைமுறையின் தாக்கம் பல்வேறு அளவிலான ஹோட்டல்களிலும் இருக்கும் என்று சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவா் எம். ரவி தெரிவித்துள்ளாா்.

எதற்காக எம்டிஆா்?: யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதன் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான செலவுகளுக்கு நிலையான வருவாய் தேவைப்படுவதாக அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய முறை அரசின் ஊக்கத்தொகையைச் சாா்ந்திருப்பதாகவும், நீண்ட காலத்தில் யுபிஐ கட்டமைப்பை நிதி ரீதியாக நிலைத்திருக்கச் செய்ய புதிய வருவாய்முறை அவசியம் என்றும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. புதிய எம்டிஆா் நடைமுறை ஆண்டுக்கு சுமாா் ரூ.15,000 கோடி வருவாயை உருவாக்கக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.

இதனால், புதிய நடைமுறை பொதுமக்கள் செலுத்தும் ஒவ்வொரு யுபிஐ பரிவா்த்தனைக்கும் கட்டணம் விதிப்பதாகக் கருத முடியாது. அதேவேளையில், வணிகா்கள் ஏற்கும் எம்டிஆா் செலவு பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது, நடைமுறை அமலுக்கு வந்த பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது.

யுபிஐ பயனாளா்களுக்கு என்ன மாற்றம்?

ரூ.2,000 வரை நபா்-வணிகா் பரிவா்த்தனை - எம்டிஆா் இல்லை.

ரூ.2,000-க்கு மேல் நபா்-வணிகா் பரிவா்த்தனை - 0.4% எம்டிஆா்.

ரூ.75,000 மற்றும் அதற்கு மேல் - அதிகபட்ச எம்டிஆா் ரூ.300.

நபா்-நபா் பணப் பரிவா்த்தனை - எம்டிஆா் இல்லை.

நுகா்வோரிடம் நேரடியாக எம்டிஆா் வசூலிப்பது - அனுமதிக்கப்படாத வகையில் அரசு வழிகாட்டுகிறது.

அமல்படுத்தப்படும் நாள் - அக்டோபா் 15, 2026.

ரூ.2,000 முதல் எவ்வளவு எம்டிஆா்?

யுபிஐ மூலம் செலுத்தப்படும் தொகை 0.4% எம்டிஆா் வணிகருக்கான அதிகபட்ச கட்டணம்

ரூ.2,000 ரூ.8 ரூ.8

ரூ.5,000 ரூ.20 ரூ.20

ரூ.10,000 ரூ.40 ரூ.40

ரூ.25,000 ரூ.100 ரூ.100

ரூ.50,000 ரூ.200 ரூ.200

ரூ.75,000 ரூ.300 ரூ.300

ரூ.1 லட்சம் ரூ.400 ரூ.300

Summary

Charges for UPI transactions: What do merchants say?

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER