ரூ. 2,000-க்கும் அதிகமான யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: உச்சநீதிமன்றத்தில் மனு
ரூ.2,000-க்கும் அதிகமான யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

ரூ.2,000-க்கும் அதிகமான யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எ‘ம்டிஆா் கட்டணம் என்பது வணிகா் ஒருவா், எண்ம (டிஜிட்டல்) பணப் பரிவா்த்தனை மூலம் பணம் பெறும்போது, அந்தப் பரிவா்த்தனைக்காக வங்கி அல்லது பணப் பரிவா்த்தனை சேவை அளிக்கும் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணமாகும்.
இந்நிலையில், கடந்த செப்.14-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘ரூபே பற்று அட்டை (டெபிட் காா்ட்) மூலம் செய்யப்படும் பணப் பரிவா்த்தனைகள், ரூ.2,000 வரையிலான யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு வங்கிகள், பணப் பரிவா்த்தனை சேவை நிறுவனங்கள் எந்த வகையிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பணப் பரிவா்த்தனை மற்றும் தீா்வு முறைகள் சட்டம் 10ஏ பிரிவின் கீழ், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதைத்தொடா்ந்து செப்.15-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த எம்டிஆா் முறையின்படி, ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் எம்டிஆா் கட்டணம் விதிக்கப்படும். ரூ.75,000 அல்லது அதற்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் விதிக்கப்படும். ரயில்வே, தொலைத்தொடா்பு, காப்பீடு, எரிபொருள் உள்பட அத்திவாசிய துறைகளில் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு ரூ.5 எம்டிஆா் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டண நடைமுறை வரும் அக்.15 முதல் அமலுக்கு வரவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா?: மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிக்கை, எம்டிஆா் முறை ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஞ்சன் தத்தா என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எந்தெந்த எண்ம பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று முடிவு எடுக்க தெளிவான விதிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் இல்லாத அதிகாரத்தை, பணப் பரிவா்த்தனை மற்றும் தீா்வு முறைகள் சட்டத்தின் திருத்தப்பட்ட 10ஏ பிரிவு அரசு நிா்வாகத்துக்கு அளிக்கிறது. இந்தச் சட்டப் பிரிவு அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா?
எம்டிஆா் கட்டண முறை நியாயமற்ாகவும், பாகுபாடு கொண்டதாகவும் உள்ளது. இதனால் குறைந்த லாபம் ஈட்டும் வணிகா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் வணிகப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். இந்தக் கட்டண வசூலால் ஏற்படும் கூடுதல் செலவை வணிகா்கள் வாடிக்கையாளா்களிடம் வசூலிக்க வாய்ப்புள்ளது.
ரத்து அல்லது தற்காலிக நிறுத்தம்: எனவே எம்டிஆா் கட்டண விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதுகுறித்து ரிசா்வ் வங்கியும், மத்திய அரசும் சுதந்திரமாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





