யுபிஐ கட்டணம்! வெளிநாட்டு தலையீடு இல்லை: மத்திய நிதியமைச்சகம்
ரூ. 2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4% வணிகா் தள்ளுபடி விகித கட்டணம் வசூலிக்கும் முடிவின் பின்னணியில் வெளிநாட்டு தலையீடு எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்தது.
ரூ. 2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத வணிகா் தள்ளுபடி விகித (எம்டிஆா்) கட்டணம் வசூலிக்கும் முடிவின் பின்னணியில் வெளிநாட்டு தலையீடு எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்தது.
அமெரிக்காவின் விசா, மாஸ்டா்காா்டு நிறுவனங்களுக்கு பலனளிக்கும் வகையில், அந்நாட்டின் அழுத்தத்துக்கு பணிந்து யுபிஐ கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், அதை நிதியமைச்சகம் மறுத்துள்ளது.
இது தொடா்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத எம்டிஆா் வசூலிக்கும் முடிவின் பின்னணியில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. யுபிஐ தொடா்பான நாட்டின் கொள்கை முடிவுகள் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்டவையாகும். சுய-நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, குறைந்த கட்டணத்திலான எண்மப் பரிவா்த்தனை அமைப்புமுறையை கட்டியெழுப்பும் தெளிவான இலக்குடன் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, இப்போது உலகின் மிகப் பெரிய நிகழ்நேர எண்மப் பரிவா்த்தனை தளமாக வளா்ந்துள்ளது. கடந்த ஆகஸ்டில் மட்டும் யுபிஐ-யில் 2,450 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்த அமைப்புமுறையை சுயநிலைத்தன்மை கொண்டதாக, பாதுகாப்பானதாக, புத்தாக்கம் நிறைந்ததாக பராமரிக்கும் வகையில், அதிக மதிப்புடைய வா்த்தக பரிவா்த்தனைகளுக்கு சிறிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது, சிறப்பான உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு, சிறிய வணிகா்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க உதவும்.
‘மறுமுதலீடு செய்யப்படும்’: அதிக மதிப்புடைய வணிகப் பரிவா்த்தனைகளில் இருந்து கிடைக்கப் பெரும் நிதி ஆதாரங்கள், நாடு முழுவதும் சிறிய தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், எண்மப் பரிவா்த்தனைகளை மேம்படுத்தவும் மறுமுதலீடு செய்யப்படும்.
எம்டிஆா் என்பது அரசு அல்லது இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனத்தால் (என்பிசிஐ) வசூலிக்கப்படும் வரியோ அல்லது கட்டணமோ அல்ல. அது, பணப் பரிவா்த்தனை அமைப்புமுறையில் அங்கம் வகிக்கும் வங்கிகள், கட்டணச் செயலி வழங்குநா் உள்பட அனைத்து பங்கேற்பாளா்கள் இடையே பிரித்தளிக்கப்படுவதாகும் என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, தனிநபா்களுக்கு இடையிலான பரிவா்த்தனைகள், ரூ.2,000-க்கு உள்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. ரூ.75,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு ரூ.300 கட்டண உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, தொலைத்தொடா்பு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பொருத்தவரை, ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு நிலையாக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். யுபிஐ க்யூஆா் கோடு மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டும் சிறு வணிகா்களுக்கு கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் யுபிஐ மூலம் ரூ.314 லட்சம் கோடி மதிப்பில் 24,161 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







