
மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்
மதுராந்தகத்தில் தவெகவை விட ஒரு வாக்கு கூடுதலாக வாங்கிக்காட்டுங்கள் என ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளது குறித்து...

ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்
மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.
தவெகவை விட ஒரு வாக்கு கூடுதலாக திமுக பெற்றுவிடுமா? எனக் கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, தவெக வெற்றி பெற்றால், உதயநிதி தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்வாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் திமுகவை விமர்சித்துப் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
திமுகவை யாராலும் அழிக்க முடியாது என கனிமொழி கூறுவார். ஆனால், இப்போது ஒருவர் உள்ளார். திமுகவை அழிக்க வந்தவர் உதயநிதி ஸ்டாலின்.
1967-ல் அறிஞர் அண்ணா மக்கள் ஆட்சியைக் கொண்டுவந்தார். அதன் பிறகு கலைஞர் கருணாநிதி குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்து, பிறகு மன்னர் ஆட்சியைக் கொண்டுவந்தார். பின்னர் வந்த மு.க. ஸ்டாலினுக்கு தன் மகனை பெரிய மன்னனாக்க வேண்டும் என்ற கனவு உள்ளது.
நல்ல மன்னன் போருக்குச் சென்று மக்களை பாதுகாப்பார். இன்னும் சில மன்னர்கள் அந்தப்புரத்தில் மட்டுமே இருப்பார்கள். தேர்தல் என்றால் என்ன? அது ஒரு யுத்தம். அந்த யுத்தத்திற்குள் திடீரென வந்த இளவரசருக்கு அந்தப்புரத்தில் கற்றுக்கொண்ட ஆபாசம்தான் வாயில் வரும்.
மன்னராட்சியை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் தலைவன் வந்துள்ளான். அதுதான் முதல்வர் விஜய்.
இளவரசர் உதயநிதி எங்கள் தலைவர் அளவுக்குப் பேச வேண்டாம். எங்களுக்கு முதலில் பதில் கூறுங்கள்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக ஜெயித்துவிட்டால் தவெக பொதுச்செயலாளர் பதவியை நான் ராஜிநாமா செய்கிறேன். உதயநிதிக்கு நான் வெளிப்படையாக சவால் விடுகிறேன்.
இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம் உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு உங்கள் அப்பாவைக் கூட கூட்டிக்கொண்டு வா? திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியில் இருந்து விலக உதயநிதி தயாரா?
நாங்கள் எளிய வீட்டுப் பிள்ளைகள். நீங்கள் 70 ஆண்டு பழமையான கட்சி ஆயிற்றே. மதுராந்தகத்தில் தவெகவை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கிக்காட்டுங்கள் என ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அக். 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
Summary
I will resign from my post if the DMK wins in Maduranthakam Aadhav Arjunas challenge
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



