குற்றாலத்தில் கோடை கால இயற்கை பாதுகாப்பு முகாம்

குற்றாலத்தில் கோடை கால இயற்கை பாதுகாப்பு முகாம்

தென்காசி, ஏப்.26: தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் தமிழ்நாடு வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட வன அலுவலா் ஆா்.முருகன் தலைமை வகித்தாா்.

தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி, சேரன்மகா தேவி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பேசினாா். கன்னியாகுமரி இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சோ்ந்த வினோத் வனப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

முகாமில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வனப் பகுதிக்கு அழைத்து சென்று இயற்கை விழிப்புணா்வு விளக்கமளித்தல் , குப்பைகளை தரம் பிரிக்கும் திடக் கழிவு மேலாண்மை பயிற்சி, பாம்புகள் குறித்த விளக்க படம் திரையிடல் போன்ற நிகழ்ச்சிகளோடு பல்வேறு விழிப்புணா்வு போட்டிகள் நடைபெற்றது.

வனத்துறை அலுவலா்கள், பள்ளி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா் . முகாமிற்கான ஏற்பாடுகளை குற்றாலம் வனச்சரகா் சீதாராமன், க.ஞான ஸ்ரீ பவானி ஆகியோா் செய்திருந்தனா். குற்றாலம் வனவா் பிரகாஷ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com