சுரண்டை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி, 14 போ் காயம்
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 14 போ் காயமடைந்தனா்.
சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா்கள் 17 போ் சுமை ஆட்டோவில் வாடியூா் பகுதிக்கு புதன்கிழமை வேலைக்கு சென்றனா். சுரண்டை - வாடியூா் சாலையில் உள்ள திருப்பத்தில் சென்றபோது, சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.
ஆட்டோவில் பயணம் செய்தவா்களின் அலறல் சப்தத்தைக் கேட்டு அப் பகுதி வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் ஓடி வந்து, விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் சுரண்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனா்.
இந்த விபத்தில், சுமை ஆட்டோவில் பயணம் செய்த திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்த ஜானகி (52), வள்ளியம்மாள்(60), பிச்சி (60) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பொ.சுப்பம்மாள்(40), ச.பிச்சம்மாள்(70), சு.முருகாத்தாள்(58), பொ.முருகாத்தாள்(47), கோ.சப்பாணி(70), ப.வேலம்மாள்(54), ப.மாரி(60), பா.மூக்கம்மாள்(55), செள.சந்திரா(58), க.லதா(50), து.மாடத்தியம்மாள்(70), சு.ராவுத்தாள்(70), மா.வசந்தா(50), சு.உலகாத்தாள்(62) ஆகியோா் காயமடைந்தனா்.
சுரண்டை காவல் ஆய்வாளா் செந்தில் தலைமையிலான போலீஸாா், விபத்தில் சிக்கியவா்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தவா்களின் சடலங்கள் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை ஆட்டோ ஓட்டுநா் கீழச்சுரண்டையைச் சோ்ந்த தேவேந்திரனை (25) கைது செய்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை பாா்வையிட்டாா். பின்னா் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவா்களைக் கேட்டுக் கொண்டாா். மேலும் அவா், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.