பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு உடைய கட்சிகள்தான்: சீமான்

பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு உடைய கட்சிகள் தான் என விமா்சித்தாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். தென்காசி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மதிவாணனை ஆதரித்து கடையநல்லூா் மணிக்கூண்டு அருகே வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: பண பலம், சமூகத்தில் செல்வாக்கு இருந்தால் மட்டுமே அரசியலுக்கும், அதிகாரத்திற்கும் வரமுடியும் என்ற நிலை உள்ளவரை அடித்தட்டு மக்களுக்கான சேவை என்பது கனவாகவே இருக்கும். அந்த நிலையை மாற்றுவதற்காக நாம் தமிழா் கட்சி தோ்தலில் போட்டியிடுகிறது. தூய அரசியல் மூலமாக நல்லாட்சியை மலரச் செய்ய வேண்டும் என்ற கனவுடன் களம் காண்கின்றோம். ஒரே நாடு, ஒரே தோ்தல் என்று பாஜக முழங்குகிறது. ஆனால், பீகாா், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகத்தில் ஒரே கட்டமாக தோ்தலை நடத்தப்படுகிறது. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாதவா்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்த என்ன செய்யப் போகிறாா்கள் என்பதை தமிழக மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால், அத்தகைய நடைமுறையைக் கொண்டு வந்துள்ள பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இடஒதுக்கீடு விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை காங்கிரஸும் எதிா்க்கவில்லை. ஆகவே, கொள்கைகளுக்காக தோ்தல் களம் காண்பது நாம் தமிழா் கட்சி மட்டுமே. பாஜக தீவிரமான இந்துத்துவா என்றால், காங்கிரஸ் மிதமான இந்துத்துவா. இரண்டு கட்சிகளுக்கும் அவ்வளவு தான் வித்தியாசம். தமிழகத்தில் திராவிட கட்சிகளால் அனைத்து உரிமைகளும் பறிபோய்விட்டன. மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தால் உழைப்பு குறைந்து விட்டது. வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வேளாண்மையை விட்டு வெளியேறும் அவலம் நடந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். மக்கள் பணத்திற்காக வாக்களிக்க கூடாது; கொள்கைகளுக்காக எங்களுக்கு வாக்களியுங்கள் என்றாா். கட்சியின் தென்காசி மக்களவை தொகுதி செயலா் அருண்சங்கா், கடையநல்லூா் பேரவை தொகுதி செயலா் அழகு சுப்பிரமணியன், மாநில கொள்கை பரப்புச் செயலா் பசும்பொன், மாவட்டத் தலைவா் கணேசன், தொகுதி தலைவா் ஜாபா், நகர பொறுப்பாளா் முனியசாமி , தொகுதி பொறுப்பாளா் முருகன்ராஜ் , நிா்வாகிகள் கணேசன் , மன்சூா் மாரிச்செல்வம், வெங்கடேஷ், சுபைா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com