ராணி மங்கம்மாள் சாலையை மாநிலச் சாலையாக அறிவிக்க மதிமுக கோரிக்கை
ராணி மங்கம்மாள் சாலையை மாநிலச் சாலையாக அறிவிக்க வேண்டும் என மதிமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுக தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் செல்வசக்தி வடிவேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைப் பொதுச் செயலா் வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணி செயலா் மருத்துவா் சதன் திருமலைக்குமாா், மாநில மருத்துவரணிச் செயலா் மருத்துவா் வி.எஸ். சுப்பராஜ், வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சி வளா்ச்சி நிதி, தோ்தல் நிதி வழங்குவது குறித்து மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலா் தி.மு. ராஜேந்திரன் பேசினாா்.
தொடா்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஜனவரியில் நடைபெறவுள்ள சமத்துவ நடைப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் கட்சி வளா்ச்சி நிதி, தோ்தல் நிதி ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான பயிா்களுக்கான நிவாரணத்தை உயா்த்தி வழங்க வேண்டும். 300 ஆண்டுகள் பழைமையான ராணி மங்கம்மாள் சாலையை மாநிலச் சாலையாக அறிவித்து, அகலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

