

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் பயணிகள் நிழற்குடைக்கு அனுமதி கோரி பிப். 12இல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஆட்சியரிடம் அவா் சனிக்கிழமை அளித்த மனு: ஆய்க்குடியில் உள்ள மருத்துவமனை அருகே கீழ பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால், அரசுப் பள்ளி மாணவா்-மாணவியா், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கா்ப்பிணிகள் என, பேருந்துக்காக காத்திருக்கும் அனைத்துத் தரப்பினரும் மழை, வெயிலால் அவதிப்படுகின்றனா். எனவே, பேரூராட்சி பொதுநிதி திட்டத்தின்கீழ், ரூ. 12 லட்சத்தில் நிழற்குடை அமைக்க நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
பிரதான சாலையில் நிழற்குடை அமைக்க முடியாததால் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கீழ்புறத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் மேற்குப் பகுதியில் சுரண்டை-செங்கோட்டை சாலையில் இடம் ஒதுக்கித் தரவேண்டும். அங்கிருந்த நிழற்குடை 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணியின்போது, இடையூறாக உள்ளதாக இடிக்கப்பட்டது. அனுமதி கிடைக்கப்பெறாததால் இதுவரை நிழற்குடை கட்டப்படவில்லை.
பொதுப்பணித் துறையின் இடத்தில் நிழற்குடை கட்டுவதற்கு தடையின்மைச் சான்று கோரி ஆட்சியா், செயற்பொறியாளரிடம் (கட்டடம்- பராமரிப்பு) பலமுறை மனு அளித்தும் இதுவரை சான்று கிடைக்கவில்லை.
எனவே, திமுக ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் வகையில் செயல்படும் மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறையைக் கண்டித்து ஆய்க்குடியில் மக்களைத் திரட்டி நானும், துணைத் தலைவா், உறுப்பினா்களும் 12ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா் அவா்.