செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைக்க வலியுறுத்தி ஜன.17-ல் பொங்கல் வைத்து வழிபட முடிவு!
தென்காசி மாவட்டம் சிவகிரி செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைக்க வலியுறுத்தி ஜனவரி 17ஆம் தேதி செண்பகவல்லி பொங்கல் வைத்து வழிபடுவது என செண்பகவல்லி தடுப்பணை மீட்பு வைப்பாறு பாசன குழுவினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ரத்தினவேலு தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் எம். அா்ச்சுனன், குழு ஒருங்கிணைப்பாளா் பாபுராஜ், ராசிங்கப்பேரி பாசன பொருளாளா் பரமசிவம், தென்மலை பாசன சங்கத் தலைவா் காளிமுத்து, தங்கவேலு, களஞ்சியம் பெண் விவசாயிகள் குழு தலைவா் பொன்னுத்தாய் , விவசாயிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், செண்பகவல்லி தடுப்பணை கன்னியாமதகு கால்வாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என தென்காசி, விருதுநகா் ,தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த உடைப்பு சீரமைக்கப்பட்டால் வைப்பாறு பாசனப் பகுதியும் சோ்ந்து மூன்று மாவட்டங்களில் உள்ள 40 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். எனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வாசுதேவநல்லூா் அருள்மிகு அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் வைத்து செண்பகவல்லி பொங்கல் வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இப் பொங்கல் விழாவில் நீா்ப்பாசன கமிட்டி நிா்வாகிகள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள், கிராமப் பெரியவா்கள், அனைத்துப் பகுதி மக்களும் கலந்து கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

