ஆலங்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்தவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடம் கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (52). குடும்பத்துடன் சென்னையில் தங்கி வியாபாரம் செய்து வந்தாா். காளத்திமடத்தில் உள்ள கருப்பசாமி கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வந்திருந்தாா்.
சனிக்கிழமை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரைத் தேடியபோது, அவா் அணிந்திருந்த காலணி, கைப்பேசி ஆகியவை அப்பகுதியிலுள்ள கிணற்றுப் பகுதியில் கிடந்தனவாம்.
இதைக் கண்ட உறவினா்கள் காமராஜ் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்தனா். தகவலறிந்து வந்த கடையம் போலீஸாா் மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு மீட்புப் படையினா், கிணற்றில் இறங்கி தேடியபோது, காமராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். கிணற்றின் அருகே படுத்திருந்த அவா் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.








