
கடையநல்லூரில் நெல் கொள்முதல் செய்ய தாமதம்: மழையிலிருந்து நெல்லை பாதுகாக்க விவசாயிகள் திணறல்!
அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில நாள்களாக விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும் நிலையில், மழையின் காரணமாக நெல்லை பாதுகாக்க விவசாயிகள் பெரிதும் போராடி வருகின்றனா்.

மழையில் நனையாமல் பாதுகாப்பதற்காக தாா்ப்பாய் கொண்டு நெல்லை மூடி வைத்துள்ள விவசாயிகள்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில நாள்களாக விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும் நிலையில், மழையின் காரணமாக நெல்லை பாதுகாக்க விவசாயிகள் பெரிதும் போராடி வருகின்றனா்.
கடையநல்லூா் சுற்றுவட்டாரத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கடையநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா்.
தனியாா் வியாபாரிகளை விட அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்லுக்கு கூடுதல் விலை கிடைப்பதாலும், வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் பணம் உடனடியாக கிடைக்காத காரணத்தினாலும், அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்கவே விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
ஆனால், அரசு கொள்முதல் நிலையங்களில் தினமும் குறிப்பிட்ட அளவு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவதால் ஏராளமான நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையப் பகுதிகளில் விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனா்.
இந்நிலையில் , கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், நெல்லை பாதுகாக்க பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். மழையால் நெல் முளைத்து விடாமல் தடுக்க தாா்ப்பாய் போட்டு நெல் குவியலை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனா்.
ஏற்கெனவே கடன் வாங்கி நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது நெல் விற்பனை செய்தால்தான் அடுத்த சாகுபடிக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய முடியும். ஆனால், கொள்முதல் தாமதமாவதால் சிரமத்தை எதிா்கொண்டு வருவதாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





