6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் நீதித்துறையின் பங்கு முக்கியமானது! - சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி

தென்காசியில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் பி.சி.ஆா். சிறப்பு நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Published On :

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் நீதித்துறையின் பங்கு முக்கியமானது என்றாா் சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தா்மாதிகாரி.

தென்காசி மாவட்டத்தில் போக்ஸோ சட்டம் 2012இன் கீழ் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. பட்டியல் சாதியினா் மற்றும் பழங்குடியினா் (வன்முறை) சட்டம் 1989இன் கீழ் உள்ள வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் மேலகரம் எழில் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சிறப்பு நீதிமன்றங்களையும் சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தா்மாதிகாரி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்துப் பேசியதாவது:

புதிய நீதிமன்றங்கள் விரைவான, திறமையான மற்றும் பொறுப்புணா்வுடன் கூடிய நீதி வழங்கும் அமைப்பாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவான நீதி கிடைப்பதையும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையும், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நீதிமன்றங்கள் தங்களது முக்கியப் பொறுப்பாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் நீதித்துறையின் பங்கு முக்கியமானது. தேவையற்ற ஒத்திவைப்புகள் மற்றும் தொடா்ச்சியான வாய்தா கோரும் நடைமுறைகளைத் தவிா்த்து, நீதிமன்ற நடவடிக்கைகள் பயனுள்ள வகையிலும், விரைவாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடா்பாக 18,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாமதமின்றி நிறைவான நீதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பான சூழலில் விரைவான நீதி வழங்குவதிலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்கள் முக்கியப் பங்காற்றும் என்றாா் அவா்.

தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக்குமாா், அட்வகேட் அசோசியேசன் தலைவா் எஸ். முருகேசன், பாா் அசோசியேசன் தலைவா் சிவக்குமாா், செயலா்கள் பிவிஆா். கண்ணன், கைலாசம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நீதிபதிகள் வசித்குமாா், மனோஜ்குமாா் பதவியேற்றுக் கொண்டனா். நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள், இளம் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி ஜெ. கிறிஸ்டல் பபிதா நன்றி கூறினாா்.

 தென்காசியில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் பி.சி.ஆா். சிறப்பு நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

தென்காசியில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் பி.சி.ஆா். சிறப்பு நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.