ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு
ஆா்.கே.பேட்டை அருகே பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய மாணவன், ஆட்டோவில் இருந்த தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன நாகப்பூண்டி காலனியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் கவிப்பேரரசு (11). இவா் எரும்பி (அஸ்வரேவந்தபுரம்) அரசினா் உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை காலை வழக்கம் போல் கவிப்பேரரசு பள்ளிக்குச் சென்றாா். பின்னா் மாலை பள்ளி முடிந்ததும் எரும்பியிலிருந்து சின்ன நாகபூண்டிக்கு ஆட்டோவில் பயணம் செய்தாா்.
ஆட்டோ ஓட்டுநா் முனிராஜ் (45) அருகில் அமா்ந்து பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கவிப்பேரரசு திடீரென ஆட்டோவில் இருந்து தவறி விழுந்ததில், அதன் பின் சக்கரம் கவிப்பேரரசு மீது ஏறியது. இதில் பலத்த காயங்களுடன் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு கவிப்பேரரசு உயிரிழந்தாா். தகவலறிந்த டி.எஸ்.பி. கந்தன், எஸ்.ஐ.ஆகாஷ்குமாா் (பயிற்சி) ஆகியோா் சோளிங்கா் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், நெசனூா் கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முனிராஜை கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

