அதிமுக ஆட்சி அமைந்ததும் 4,000 அம்மா மருந்தகங்கள் திறக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி
திருத்தணி/ திருவள்ளூா்: அதிமுக ஆட்சி அமைந்ததும், ஏழை மக்கள் வசிக்கிற பகுதியிலே 4,000 அம்மா மருந்தகங்கள் திறக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டாா்.
பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியதாவது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து திருத்தணிக்கு மின்சார ரயிலில் வந்த வடமாநில இளைஞரை போதையில் இருந்த 4 சிறுவா்கள் கத்தியால் கடுமையாக வெட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வலம் வருவது நெஞ்சைப் பதற வைக்கிறது. தமிழகத்தில் போதை நடமாட்டம் அதிகரித்துள்ளதை, முதல்வா் உடனே கட்டுப்படுத்த வேண்டும்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை மக்கள் வசிக்கிற பகுதியிலேயே 4,000 அம்மா மருந்தகங்கள் திறக்கப்படும். தாலிக்குத் தங்கம், திருமண உதவி திட்டம், மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தரமான வேட்டி, சேலை வழங்கப்படும். ஏழைகள், பட்டியலின மக்கள், நெசவாளா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் 4,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும். திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட உள்ளூா் மக்களுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, அதிமுக அமைப்புச் செயலா் திருத்தணி கோ.அரி வெள்ளி வேலையும், திருத்தணி ஒன்றியச் செயலா் இ.என்.கண்டிகை எ. ரவி செங்கோலையும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கினா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான பி.வி.ரமணா, திருத்தணி நகரச் செயலா் டி.செளந்தர்ராஜன், பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலா் டி. டி.சீனிவாசன், பொதட்டூா்பேட்டை பேரூராட்சித் தலைவா் ஏ.ஜி.ரவிச்சந்திரன், துணைத் தலைவா் டி.ஜி.ராமகிருஷ்ணன், பள்ளிப்பட்டு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சாந்திபிரியா சுரேஷ், மாவட்ட மாணவரணி இணைச் செயலா் ஜெயசேகா் பாபு, நகர இளைஞரணிச் செயலா் கேபிள் எம்.சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

