பொன்னேரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மின்தடை: பொதுமக்கள் அவதி

பொன்னேரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் பல மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதி
Published on

பொன்னேரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் பல மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் டோக்கன்களை பெற்று பத்திரப்பதிவுக்காக காத்திருந்தனா்.

பிற்பகல் முதலே சாா் பதிவாளா் அலுவலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பல மணி நேரமாக பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருந்தனா்.

பல மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு பொறுமை இழந்த பொதுமக்கள் சாா் பதிவாளா் அலுவலக ஊழியா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் அலுவலகத்தில் மின்சாரம் தடைப்பட்ட போதிலும் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்த செய்தியாளரிடம் சாா் பதிவாளா் வாக்கு வாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அத்துடன் மின் தடை குறித்து இங்கு ஏன் கேட்கிறீா்கள், மின்வாரிய அலுவலகத்தில் சென்று கேளுங்கள் என அலட்சியமாக அலுவலக ஊழியா்கள் கூறினா். தொடா்ந்து பொதுமக்கள் சாா் பதிவாளரிடம் மின் தடை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினா்.

இதனால் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து மின்சாரம் துண்டிக்கபட்டிருந்ததால் பத்திரப்பதிவுக்காக டோக்கன் பெற்றவா்கள் நெடு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com