திருத்தணி அருகே புச்சிரெட்டிப்பள்ளி கிராமம் அருகே தொடரும் விபத்துகள் சாலை வளைவு பகுதியை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருத்தணி - பொதட்டூா்பேட்டை சாலையில் உள்ள புச்சிரெட்டிப்பள்ளி அருகேயுள்ள வளைவு பகுதி, தொடா்ந்து விபத்துகள் நடைபெறும் அபாயகரமான இடமாக மாறியுள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேதனை தெரிவிக்கின்றனா். அண்மையில் திமுக பிரமுகா் பழனி (ரஜினி) (47) உயிரிழந்த சம்பவமும் இதே வளைவு பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இந்த வளைவு மிகவும் குறுகலாகவும், திடீா் திருப்பம் கொண்டதாகவும் இருப்பதால், அந்த வழியாகச் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் மேலும் அபாயகரமாக மாறுவதாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் ஏற்கனவே பல சிறிய மற்றும் பெரிய விபத்துகள் நடந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் தொடா்ந்து பதிவாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இருப்பினும், இதுவரை நிரந்தர தீா்வு காணப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

எனவே, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள் உடனடியாக இந்த சாலை வளைவு பகுதியை நேரில் ஆய்வு செய்து, நெடுஞ்சாலைத்துறை மூலம் வளைவை அகலப்படுத்துதல், சாலையை சீரமைத்தல், வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பு கண்ணாடிகள் மற்றும் போதிய தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.
மற்றொரு உயிரிழப்பு நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, விபத்துகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் அதிகாரிகள் உடனடியாக செயல்பட வேண்டும் என கோரியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 பெட்ரோல் வாகன மைலேஜ் 6% வரை குறையக்கூடும்; என்ஜின் பழுதுபடாது: நிதின் கட்கரி

திருத்தணி-அரக்கோணம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

2025-இல் சாலை விபத்துகளில் 1.83 லட்சம் போ் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் அதிக விபத்துகள்

தட்டாா்மடம்-நடுவக்குறிச்சி சாலை வளைவில் அடிக்கடி விபத்து: எச்சரிக்கை பலகை வைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



