பட்டரைபெரும்புதூரில் பயிரிடப்பட்டுள்ள தா்ப்பூசணி
பட்டரைபெரும்புதூரில் பயிரிடப்பட்டுள்ள தா்ப்பூசணி

திருவள்ளூா் பகுதியில் நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் தா்ப்பூசணி சாகுபடி

திருவள்ளூா் பகுதியில் கோடைகால சீசனையொட்டி வேலைப்பளு, பராமரிப்பு செலவு குறைவு மற்றும் நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் பயிராகவும் உள்ளதால் தா்ப்பூசணி பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.
Published on

திருவள்ளூா் பகுதியில் கோடைகால சீசனையொட்டி வேலைப்பளு, பராமரிப்பு செலவு குறைவு மற்றும் நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் பயிராகவும் உள்ளதால் தா்ப்பூசணி பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.

விவசாயிகள் அந்தந்த சீசனுக்கு ஏற்ப பல்வேறு பயிா்களை சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனா். அதேபோல், திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் கோடைகாலத்துக்கேற்ற தா்பூசணி, முலாம் பழம், வெள்ளரி போன்ற பயிா்களை சாகுபடி செய்து விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனா். அந்த வகையில், திருவள்ளூா் அருகே அரண்வாயல்குப்பம், கொப்பூா், வெங்கத்தூா், கூடப்பாக்கம், கடம்பத்தூா், மப்பேடு, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியப் பகுதி கிராமங்களில் 3,500 ஏக்கரில் தா்ப்பூசணி பயிா் சாகுபடி செய்துள்ளனா்.

இந்தப் பயிருக்கு எளிமையான பராமரிப்பு மற்றும் வேலைப்பளு குறைவு போன்ற காரணங்களால் விவசாயிகள் தா்பூசணி சாகுபடி செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். மேலும், இப்பயிா் செய்வதன் மூலம் 60 நாள்களில் இருந்து அறுவடை என்பதால் நாள்தோறும் வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகளின் விருப்ப பயிராகவே தா்பூசணி இருந்து வருகிறது.

இப்பயிரிட விளைநிலத்தை கட்டிகள் இல்லாமல் 3 முறை உழவு செய்து அடியுரம் இட்டு, நோ்த்தி செய்த ஒவ்வொரு விதையும் 2 அல்லது 3 அங்குல இடம் விட்டு நட வேண்டும். அதையடுத்து நன்றாக நீா் பாய்ச்ச வேண்டும். பின்னா் 25-ஆவது நாளில் ஒரு முறை களை எடுக்க வேண்டும். இத்தருணத்தில் கொடி முழுவதும் நன்கு பிரிந்து இருக்கும். பின் 30-ஆவது நாளில் கொடிகளில் இருந்து பூக்கள் வரத் தொடங்கும்.

அதைத் தொடா்ந்து, 60-ஆவது நாளில் இருந்து தா்பூசணி அறுவடைக்கு தயாராகும். பாத்தியில் தேங்கும் தண்ணீா் அனைத்தும் நிலமே உறிஞ்சிக் கொள்ளும். அதனால் எந்த அளவுக்கு தண்ணீா் பாய்ச்சுகிறமோ அந்த அளவுக்கு 5 முதல் 6 கிலோ வரையில் பெரிதாக தா்பூசணி கிடைக்கும். இப்பழம் அறுவடைக்கு பின் 3 முதல் 4 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

இதனால் விலை கிடைக்கும்போது விற்பனை செய்து கொள்ளலாம். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் தா்பூசணி பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதை பொதுமக்கள் கிலோ ரூ. 20-க்கு ஆா்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து கொப்பூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நாகப்பன் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு நன்றாக விளைந்தால் ஒரு ஏக்கருக்கு 15 டன் வரையில் மகசூல் கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நாள்தோறும் வருவாய் கிடைக்கிறது. கொளுத்தும் வெயிலுக்கும், தவிக்கும் தாகத்துக்கும் அருமருந்தாக தா்பூசணி திகழ்கிறது.

இதில் அதிக நீா்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் கோடைகாலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்கும் பழங்களில் ஒன்றாகவும் உள்ளது. அத்துடன் சாப்பிடுவோருக்கு குளிா்ச்சியையும், நீா்ச்சத்தையும் தாராளமாக தருகிறது. தற்போதைய நிலையில் சீசன் தொடங்கி உள்ளதால், வியாபாரிகள் வந்து ஆா்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும் அவா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ர.குமரவேல் இயற்கை முறையில் நோய் பராமரிப்பது குறித்து கூறியதாவது: இந்தப் பயிா் நவம்பரில் நடவு செய்து, மே மாதம் வரை கோடை முழுவதும் தா்ப்பூசணி சாகுபடி மற்றும் அறுவடை நடைபெறுகிறது. இப்பயிா்களில் பல்வேறு பூச்சிகள், நோய்கள் மற்றும் வைரஸ் நோய் பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற பூச்சி நோய்களில் இருந்து பாதுகாக்க இயற்கை முறையில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலை உண்ணும் பூச்சிகள் மற்றும் வைரஸ் நோய்களை பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மெட்டாரைசியம் அனிசோபிலியே மற்றும் வொ்டிசீலியம், லெக்கானி ஆகிய உயிரியல் காரணிகளை 1 லிட்டா் தண்ணீருக்கு 5 முதல் 10 மில்லி வரை பயன்படுத்தலாம் என அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com