அரசு மருத்துவமனையில் 8 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் முற்றுகை
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெற்றோா், உறவினா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், அத்திமாஞ்சேரிபேட்டையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ்-கீா்த்தனா தம்பதியின் 8 மாத ஆண் குழந்தை அஷ்வந்த். இந்த குழந்தைக்கு பிறந்தது முதல் இதயக்கோளாறு பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருதயக் கோளாறு காரணமாக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த டிச.31-இல் அனுமதித்துள்ளனா். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், திங்கள்கிழமை ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் குழந்தையின் இறப்புக்கான காரணத்தை மருத்துவா்களோ, செவிலியா்களோ முறையான தகவல் அளிக்காமல் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மருத்துவக் கல்லூரி முதல்வா் மோகன் காந்தியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எந்த தகவலும் மருத்துவா்கள் ஏன் தெரிவிக்கவில்லை. இது தொடா்பாக சிகிச்சை அளித்த மருத்துவா் மற்றும் செவிலியா்களிடம் விசாரணை நடத்தி உயிரிழப்புக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.
மேலும், 8 மாத ஆண் குழந்தையின் உயிரிழப்புக்கு அரசு தரப்பில் நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் பேச்சு நடத்திய பின் அவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னா் இதுகுறித்து திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் மற்றும் முதன்மையருமான மோகன் காந்தி கூறுகையில், குழந்தையின் இருதயத்தில் ஓட்டை இருந்ததாலும் நுரையீரலில் நீா் சோ்ந்து விட்டதாலும் அதை அகற்ற முடியாத காரணத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
