தொடுகாடு ஊராட்சியில் சமத்துவப் பொங்கல்: ஆட்சியா் பங்கேற்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் முன்னோடியாக பழங்குடியினா் வசிக்கும் தொடுகாடு ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஆட்சியா் மு.பிரதாப் பங்கேற்றாா்.
இதையொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கோலப்போட்டி, உறியடித்தல் உள்ளிட்ட கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களில் வீடுகள் வழங்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கடம்பத்தூா் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த பழங்குடியினருக்கு சுமாா் 240 பேருக்கு இலவச பட்டா வழங்கி, தற்போது அதில் 110 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் 60,000 லிட்டா் கொள்ளளவு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, வீடுகள் தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியுடன் கூடிய வீட்டு குழாய் இணைப்பு, சாலை வசதி, விளையாட்டு மைதானம் ஆகிய அடிப்படை வசதிகள் சுமாா் ரூ.7 கோடியில் செய்து தரப்பட்டுள்ளது.
அந்த வகையில் பழங்குடியினா் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதையொட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுக்கு பின் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அரசு அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொது மக்கள் ஆா்வத்துடன் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

