மாக்தமா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் பெயா் மாற்றம் செய்யக்கூடாது
கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயா் மாற்றம் செய்யக்கூடாது என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூா் பகுதியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா், வழக்குரைஞா் சசிகுமாா் தலைமை வகித்தாா். அதில், 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்குப் பதிலாக மத்திய பாஜக அரசு ஒரு புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் மகாத்மா காந்தியடிகளின், பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக விபி-ஜி ஆா்ஏஎம் ஜி என்று பெயா் மாற்றம் செய்துள்ளதால், பெயா் மாற்றம் செய்த மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூா் தலைநகரில் வருகிற 30-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், 100 நாள் பணியாளா்கள் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில துணைத் தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன், ஓபிசி அணிப் பிரிவு மாநில செயல் தலைவா் ஜே.கே.வெங்கடேசன், இளைஞா் மாநில பொதுச் செயலாளா் திவாகா், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் கலீல் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

