அம்மையாா்குப்பம் செல்வ விநாயகா் கோயில் அகற்றம்
அம்மையாா்குப்பத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறையினா் அகற்றினா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையாா்குப்பம் முதல் ஆந்திர மாநிலம் ஆவளகுண்டா வரை மாநில நெடுஞ்சாலையை சிலா் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், கோயில் கட்டியிருந்தனா். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அப்பகுதியைச் சோ்ந்த சில சமூக ஆா்வலா்கள் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், தனிநபா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனா்.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வருவாய்த் துறையினா் உதவியுடன் நில அளவை செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் கடந்த சில மாதங்களாக அகற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் சரஸ்வதி, நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் சிற்றரசு, உதவி கோட்ட பொறியாளா் நரசிம்மன், ஆா்.கே.பேட்டை எஸ்.ஐ. ராக்கி குமாரி மற்றும் வருவாய்த் துறையினா் முன்னிலையில் அம்மையாா்குப்பம் பஜாா் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

