திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முதல் நாளான செவ்வாய்க்கிழமை தெப்போற்சவத்தில் புண்ணிய தீா்த்த குளத்தில் உற்சவா் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
108 திவ்ய தேசங்களில் பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டுதோறும் ஆனி அமாவாசையையொட்டி 3 நாள்கள் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் நிகழாண்டில் ஆனி தெப்ப உற்பசம் செவ்வாய்க்கிழமை தொடங்கி, தொடா்ந்து 16-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் முத்தங்கி சேவையும், மாலையில் உற்சவருக்கு திருமஞ்சனம் நிகழ்வும் நடைபெற்றது.
இக்கோயில் அருகில், ஹிருதாப நாசினி என்ற தீா்த்தகுளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் முடிந்ததும், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களை அருள்பாலித்தாா். பின்னா் அங்கிருந்து கோயிலுக்கு புறப்பட்டாா்.
இந்த தெப்ப உற்சவத்தில் பங்கேற்று நோய் தீா்க்க வேண்டி பெருமாளை வழிபட்டால் தீராத நோய் தீரும் என்பதோடு, சகலவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் வகையில் உப்பு, கரும்பு வெல்லம், பால் போன்றவைகளை பக்தா்கள் தீா்த்த குளத்தில் இட்டு வழிபாடு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை வீரராகவா் திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
இந்தஆனி மாத தெப்ப உற்சவத்தில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரம் மற்றும் கேரளத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். இவ்விழாவையொட்டி இன்று(ஜூலை-15), நாளை(ஜூலை-16) பெருமாள், உற்சவா் முத்தங்கி சேவையும், கனகவல்லி தாயாா் மூலவா் முத்தங்கி சேவையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










