பள்ளிகள் தொடங்கப்பட்டதையொட்டி, முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி பணிகளை தொடங்கி வைத்து, புத்தகப்பை, புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட தொகுப்புகளையும் ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின் அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறையில் அமா்ந்தவுடன் புத்தக தொகுப்புகளை உடனே வழங்கவும் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்திலும் அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், வெள்ளியூா் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஆட்சியா் ச.கவிதா மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை தொடங்கி வைத்த பின் தானும் உணவு சாப்பிட்டாா்.
அதைத் தொடா்ந்து, புத்தகப் பை, புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் அடங்கிய தொகுப்பையும் அவா் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுடன் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் தொடங்கி வைத்தாா். அதேபோல், வெள்ளியூா் அரசினா் பெண்கள் நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு புத்தகப்பை, புத்தகங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினாா்.
தொடா்ந்து விஷ்ணுவாக்கம் ஊராட்சி பகுதியில் அங்கன்வாடி மையத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அங்கன்வாடி மையத்தை அவா் நேரில் ஆய்வு செய்தாா். அங்கு வரும் குழந்தைகளுடன் எண்ணிக்கை, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதையடுத்து குழந்தைகளுக்கு பரிசு பொருள்களையும் வழங்கினாா்.
அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ஜி.சுப்பராவ், மாவட்ட கல்வி அலுவலா்கள் அமுதா, ராஜூ (தொடக்கப்பள்ளி), பள்ளித் தலைமையாசிரியா்கள் தி.திலகம், ஆனந்தி, ஆசிரியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன், வட்டாட்சியா் பாலாஜி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
திருவள்ளூா் நகராட்சி பள்ளியில் மாணவா்களுக்கு ரோஜா கொடுத்து வரவேற்பு: திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளி சென்னை-திருப்பதி சாலையில் ரூ. 6 கோடியில் புதிதாக 24 வகுப்பறைகள் அனைத்து வசதியுடன் அமைக்கப்பட்டு, ஏற்கெனவே திறக்கப்பட்டது. இந்த நிலையில், பழைய கட்டடத்திலிருந்து, புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், ஆணையா் தாமோதரன் ஆகியோா் ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனா்.










