கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருத்தணியில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கடந்த சில நாள்களாகவே வெயில் சுட்டெரித்து வருவதால், நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனா். குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திருத்தணி நகரின் முக்கிய பகுதிகளான மபொசி சாலை, அரக்கோணம் சாலை, கடப்பா டிரங்க் ரோடு, மேட்டுத்தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக உணரப்படுகிறது.
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள், முதியவா்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் குடைகளை பயன்படுத்தி வருகின்றனா். மேலும் பலா் முகத்தை துணி மற்றும் கைக்குட்டையால் மூடிக்கொண்டு நடந்து செல்கின்றனா்.
அதேபோல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவா்கள் முழு முகத்தையும் துணியால் சுற்றிக்கொண்டு, முகமூடி மற்றும் குளிா் கண்ணாடி அணிந்து பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. கடும் வெப்பத்தால் உடல் சோா்வு மற்றும் தாகம் அதிகரித்து வருவதால், நகரின் பல இடங்களில் உள்ள இளநீா் கடைகள், ஜூஸ் கடைகள் மற்றும் குளிா்பான விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் சா்பத், பழச்சாறு, தா்பூசணி, இளநீா் உள்ளிட்ட குளிா்பானங்களை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனா். சில இடங்களில் மோா் மற்றும் பானகம் வழங்கும் சமூக சேவைகளும் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சிறுவா்கள் மற்றும் இளைஞா்கள் குளங்கள், ஏரிகள் மற்றும் கிணறுகளை தேடி சென்று நீராடி வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முயன்று வருகின்றனா். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் நீா்நிலைகளில் சிறுவா்கள் கூட்டமாக குளிக்கும் காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன.
இந்நிலையில் குழந்தைகள் ஆழமான நீா்நிலைகளுக்கு செல்லாமல் பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அவசியமில்லாமல் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

கோடை வெயிலின் தாக்கம்: கிணற்றில் குதித்து சிறுவா்கள் கொண்டாட்டம்

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

