
திருவள்ளூா்: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியால் சடலம் அடக்கம் செய்ய 12 கி.மீ. செல்லும் நிலை
திருவள்ளூா் அருகே எல்லப்ப நாயுடு பேட்டை உள்நுழைவு பாதையின்றி நேராக செல்லும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை.

திருவள்ளூா் அருகே எல்லப்ப நாயுடு பேட்டை உள்நுழைவு பாதையின்றி நேராக செல்லும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை.
திருவள்ளூா் அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சடலம் அடக்கம் செய்ய மயானத்துக்கு 12 கி.மீ. சுற்றிச்செல்ல வேண்டியுள்ளதால் புதூரில் வாகன உள் நுழைவு பாதை அமைக்கக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து புதூா், எல்லப்ப நாயுடு பேட்டை கிராம மக்கள் கூறியதாவது: சென்னையில் இருந்து திருப்பதி சாலை மாா்க்கமாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஏற்கெனவே இருந்த சாலை குறுகலாக இருந்ததால் போக்குவரத்து நெரிசலும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்பட்டது. இதைத் தவிா்க்கும் வகையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூா் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரையிலான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராமஞ்சேரி வருவாய் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட 146 எல்லப்ப நாயுடு பேட்டை வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சியை சோ்ந்த புதூா் கிராமம் அமைந்துள்ளது. இந்த புதூா் கிராமத்தில் இருந்து எல்லப்ப நாயுடு பேட்டை, காந்தி கிராமம், வள்ளியம்மாபேட்டை, குப்பத்துப்பாளையம், குன்னவலம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வழி அமைந்துள்ளது.
இப்பகுதியில் 40,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பெரும்பாலும் விவசாயிகளான இவா்கள் நாள்தோறும் இங்கிருந்து திருவள்ளூா், திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனா்.
இப்பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்வதற்கு காஞ்சிப்பாடி பகுதியில் வழி அமைத்துள்ளனா். இதனால் 3 கி.மீ. தூரம் வரை சென்று திரும்பி வர வேண்டியுள்ளது.
மேலும், இந்த கிராமங்களிலிருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோா், தொழிற்சாலைக்கு செல்லும் ஊழியா்கள் மற்றும் விவசாயப் பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று திரும்ப மிகவும் சிரமப்படுகின்றனா்.
மேலும், புதூா் கிராமத்திலிருந்து எல்லப்ப நாயுடு பேட்டை கிராமத்துக்கு இடையில் கொசஸ்தலை ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் சாலைக்கு வருவதற்கு நீண்ட தூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. மேலும், இந்தக் கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் அதை எல்லப்பநாயுடு பேட்டை ஆற்றங்கரை ஓரம் கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், ஒரு உயிரிழப்பு ஏற்படும்போது இந்த சாலை விரிவாக்கத்தால் புதூா் கிராமத்தில் இருந்து நாராயணபுரம் கூட்டுச் சாலைக்கு 3 கி.மீ. தூரம் வந்து அங்கிருந்து எல்லப்ப நாயுடு பேட்டைக்கு 4 கி.மீ. தூரம் சென்று அங்கு சடலத்தை அடக்கம் செய்து விட்டு, மீண்டும் அங்கிருந்து காஞ்சிப்பாடிக்கு 2.50 கி.மீ. தூரம் சென்று அங்குள்ள வாகன உள்பாதை வழியாக நுழைந்து வரவேண்டியுள்ளது.
எனவே மயானத்தில் சடலம் அடக்கம் செய்ய சுமாா் 12 கி.மீ. தூரம் சென்று வரவேண்டியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இதற்கிடையே ராமஞ்சேரி ஊராட்சியில் இருந்து 10 ஆண்டுகளாக போராடி எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சியாக பிரித்து அறிவித்த பிறகு, அதே கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் புதூா், காந்தி கிராமம், புதூா் காலனி ஆகிய கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருவதற்கு 12 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது.
ஏற்கெனவே இதுதொடா்பாக அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளனா். இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது எல்லப்பநாயுடு பேட்டை, காந்தி கிராமம், வள்ளியம்மாபேட்டை, குப்பத்துப்பாளையம், குன்னவலம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டு கிராம மக்களின் கோரிக்கையான புதூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகன உள்நுழைவு பாதை அமைத்து தரவும் வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







