Enable Javscript for better performance
அம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - தொடர்ச்சி- Dinamani

சுடச்சுட

  

  அம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - தொடர்ச்சி

  By ச. செல்வராஜ்.  |   Published on : 17th November 2017 04:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  காரைக்கால் அம்மையாரும் குலசேகரப்பட்டினமும்

  காரைக்கால் அம்மையாரின் கணவர் பரமதத்தன், சோழ நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதாகக் கூறி, பாண்டி நாட்டில் வணிக நகரமான குலசேகரப்பட்டினத்துக்கு வந்து தங்கி, அங்கு ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்துவந்தார். அவர்களுக்கு அங்கேயே ஒரு மகளும் பிறந்தாள். அவளுக்கு, அம்மையாரின் பெயரையே சூட்டி வாழ்ந்துவந்தான். இத்தகவல்களை அறிந்த புனிதவதி, தனது உறவினர்களுடன் சென்று, கணவனோடு சேர்ந்து வாழ முயற்சி செய்தார். பரமதத்தனோ, புனிதவதியாரை குடும்பத்தாருடன் வணங்கி தனது நிலையை எடுத்துக் கூறினான்.*1

  குலசேகரப்பட்டினம் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காணப்படும் காரைக்கால் அம்மையார் திருவுருவம்

  கணவன் தன்னை ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில், இந்த அழகிய உடல் எனக்குத் தேவையில்லை. இறைவா எனக்கு பேய் உடம்பை வழங்கு. அத்துடன், நான் என்றும் தங்களைப் பாடி மகிழ்ந்து, தாங்கள் நாட்டியம் ஆடுவதை உங்கள் காலடியில் நின்று தரிசிக்கவும் அருள வேண்டும் என்று புனிதவதியார் கேட்க, இறைவனும் அவ்வாறே அருளினார்

  புனிதவதியார் தனது அழகிய உடலை பேய் உருவமாக மாற்றிக்கொண்டு இறைவனது பாதச்சுவடுகளின் அடியில் அமர்ந்திருக்கும் வாய்ப்பையும் பெற்ற இடம் என்று, குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் குறிப்பிடப்படுகிறது.

  கணவன் பொருட்டே இவ்வுலகில் இந்த ஊண் உடம்பைப் பெற்று வாழ்ந்துவந்தேன். கணவன் விரும்பாத இவ்வுடல் எனக்குத் தேவையில்லை. பேய் உடம்பே எனக்கு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி பேய் உடம்பைப் பெற்றாள். பின்பு கயிலைக்குச் சென்று சிவனது வாயால் ‘அம்மையே’ என்று அழைக்கும் பேறும் பெற்றார்.

  காரைக்கால் அம்மையாருக்கு ‘காரைக்கால் பேய்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பர். ஸ்ரீசிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள தூணில் காரைக்கால் அம்மையாரின் பேய் உரு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

  ஆடவல்லான் - கரந்தை – தஞ்சாவூர். பேயுருவில் காரைக்கால் அம்மையார்

  அவர், கயிலையில் இறைவனிடம்,

  ‘பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேலுன்னையென்றும்

  மறவாமை வேண்டும் மீண்டும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி

  இறைவா நீ யாடும்போதுன்னடியின் கீழிருக்கவேண்டும்’

  என்று காரைக்கால் அம்மையார் வேண்டுவதாக சேக்கிழார் கூறுகின்றார். சிவபெருமானும், திருவாலங்காட்டில் தான் ஆடும் நடனத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டு, அவர் அடியிலிருந்து பாடிக்களித்திருக்கும் பேற்றையும் அளித்தார் என்பர். இக்கூற்றுக்குச் சான்றாக, தமிழகத்தில் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டில் இருந்து காரைக்கால் அம்மையார் சிற்பம், நடராஜர் திருமேனிகளின் அடியில் பேய்க்கோலத்தில் அமர்ந்த நிலையில் பாடிக்கொண்டு இருப்தைப்போல் வடித்துச் சிறப்பித்துள்ளனர்.

  தமிழகத்தில் கோனேரிராஜபுரம், இராஜராசேச்சுரம், கங்கைகொண்டசோழபுரம் போன்ற இடங்களில் காணப்படும் நடராஜர் சிற்பங்களில், பாதத்துக்கு அருகே பேய் உருவில் காரைக்கால் அம்மையார் தோற்றமும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

  கம்போடியாவில் காரைக்கால் அம்மையார்

  பொ.ஆ. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்த காரைக்கால் அம்மையார் அவர்களின் மிகப்பழமையான சிற்பம், கம்போடியாவில் பண்டேசகிரி என்ற இடத்தில், நடனமிடும் சிவனது வலது பக்கத்தில் இரு கரங்களுடன் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில், இரு கரங்களைத் தூக்கி உணர்ச்சிப் பரவசத்தடன் விரல்களை இறுக மடித்து எலும்பு உடல் கொண்ட பேய் வடிவில் காணப்படுகின்றது.*2

  இதற்கு அடுத்த நிலையில், சோழர்கள் காலத்தில் மிகவும் சிறப்பு பெற்ற சோழ மன்னர்களான முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திர சோழன் தொடங்கி, அவர்களது வழிமுறை மன்னர்களும் தாங்கள் எடுப்பித்த ஆலயங்களில் காரைக்கால் அம்மையாரை வடித்துள்ளனர். குறிப்பாக, கங்கைகொண்டசோழபுரத்துக் கோயிலில் தனித்தன்மையுடன் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  கங்கைகொண்டசோழபுரம் - நடராஜர், காரைக்கால் அம்மையார்

  கங்கைகொண்டசோழபுரம் – காரைக்கால் அம்மையார்

  காரைக்கால் அம்மையார் பேய் வடிவத்தில் பூதகணங்களுடன் நடராசரின் இடதுபுறம் இருகரங்களில் தாளமேந்திப் பாடும் நிலையில் அமைக்கப்பெற்றுள்ளது. தொடர்ந்து, சோழர்கள் காலத்தில், மேலக்கடம்பூர், தாராசுரம் ஆகிய ஊர்களில் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையைச் சித்தரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில், சிற்பங்களிலும், செப்புப் படிமங்களிலும் காரைக்கால் அம்மையாரை எலும்புருவும், பேய் உடம்பும் கொண்டு காட்சி அளிப்பதுபோலவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

  செப்புத் திருமேனிகள்

  காரைக்கால் அம்மையார் செப்புப் படிமங்கள்

  காரைக்கால் அம்மையாரின் செப்புத் திருமேனிகள் பல கிடைத்துள்ளன. அவற்றில் மிகவும் பழமையானது, செம்பியன்மாதேவியில் காணப்படும் திருமேனியாகும். அண்மையில், திருவிந்தலூர் என்ற இடத்தில், இரண்டாம் இராசேந்திரனின் செப்புப் பட்டயத்துடன் காணப்பட்ட செப்புத் திருமேனிகள் சில சேகரிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கதான செப்புப் படிமம், காரைக்கால் அம்மையாருடையதாகும். இப்படிமம் அமர்ந்த நிலையில், தளர்ந்த தனங்களுடன் எலும்புருவாகக் காட்சி அளிப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை வட்டம் குத்தாலத்திலும், இலங்கையில் உள்ள பொலனருவா அருங்காட்சியகத்திலும் இவரது செப்புப் படிமங்கள் காணப்படுகின்றன. மேலும், தமிழகத்தில் செங்கனிக்குப்பம் (விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்), ஆறகளூர் (சேலம் மாவட்டம்) போன்ற இடங்களிலும் செப்புப் படிமங்கள் கிடைத்துள்ளன.*3

  இயக்கி அம்பிகாவும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்)

  இயக்கி அம்பிகாவும் காரைக்கால் அம்மையாரும், தமிழக மக்களால் போற்றி வணங்கப்பட்டவர்கள். அம்பிகா, சமண சமயத்தில் வரம் தரும் ஒரு பெண் தெய்வமாகப் போற்றப் பெற்றவள். காரைக்கால் அம்மையார், சைவ அடியவராக வாழந்து சிவனின் அருள் பெற்று அவனடியில் அமரும் பேறு பெற்றவள். அம்பிகா, பொ.ஆ. 8-ஆம் நூற்றாண்டு முதலே சிறப்புபெற்று வந்துள்ளாள். காரைக்கால் அம்மையார், பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் மக்களிடம் பிரபலமாகிறார். அம்பிகாவுக்குச் சிற்றாலயங்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார், சிவதாண்டவத்தோடு தொடர்புடைய உருவங்களில் ஒன்றாக வைத்து வழிபடும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

  காரைக்கால் அம்மையார் வரலாறு, பிற்காலத்தில் சேக்கிழாரால் இயக்கி அம்பிகாவின் வரலாற்றை அடியொற்றி புனையப்பெற்றதாகவே தோன்றுகிறது. அம்பிகாவின் சிற்பங்கள் காலத்தால் முந்தையவை. அம்பிகாவின் வரலாற்றைக் கூறும் ஸ்ரீபுராணம், திருசஷ்டிசாலக்காபுருச சரித்திரமும் பெரியபுராணத்துக்கு முன்பு எழுந்த நூல்கள். அம்பிகாவின் உருவத்தைப் படைக்கும்போது மூன்று மாங்கனிகள் உள்ள மாங்கொத்தினை அவள் ஏந்தியிருப்பதைப்போல் காட்டுவர். சாஞ்சி தூணிலும் மாமரத்துக் கிளைகளில் தொங்கும் மாங்கனிகளைப் பிடித்தவாறு காட்சி அளிப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. இந்த மாங்கனியையே காரைக்கால் அம்மையாரின் அடையாளமாக சேக்கிழார் எடுத்துக்கொண்டதை ஒப்பிட்டுக் காணலாம்.

  சமணப் பெண் தெய்வமான இயக்கி அம்மனும், சைவ அடியாரான காரைக்கால் அம்மையாரும், பெண் தெய்வங்களாகவும், நற்பண்பு மிக்கவர்களாகவும் தமிழகத்தில் போற்றப்பட்டுள்ளனர் என்பதை அறிவதே இதன் நோக்கமாகும். அடுத்து, சைவத்தையும் வைணவத்தையும் தோற்றிவித்த சிவன், விஷ்ணு இருவரின்  துணைவியர்களாக விளங்கிய உமாமகேஸ்வரி மற்றும் திருமகள் எனும் லட்சுமி தேவியைப் பற்றியும், அத்தாய் தெய்வங்கள் தமிழகத்தில் பெற்ற சிறப்பையும், வழிபாடுகளையும் காண்போம்.

  நன்றி

  முனைவர் வெ. வேதாசலம் அவர்கள், தொல்லியல் ஆய்வுக் கருத்தரங்கு 1-ல் எழுதிய அம்பிகையும் அம்மையாரும் என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

  சான்றெண் விளக்கம்

  1. முனைவர் வெ.வேதாசலம், தொல்லியல் கருத்தரங்கு-1, தமிழக வரலாற்றுப் பேரவை, சென்னை, பக்.41.
  2. மேலது, பக்.43.
  3. Dr K. Kannan & K. Laxminarayanan, Iconograpgy of the Jain images in the Government Museum, Chennai.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai