சோழர்களும் மகிஷாசுரமர்த்தினியும் (தொடர்ச்சி)

முதலாம் ராஜேந்திர சோழன் பன்மடங்கு வெற்றிகளைக் குவித்தான். அண்டை நாடுகளுடன் போரிட்டு வெற்றிபெற்றது மட்டுமின்றி, கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தனது படைபலத்தை நிரூபித்தான்.

இடைக்காலச் சோழர்களின் காலத்தில் துர்க்கை

இடைக்காலச் சோழர்கள் என்பது முதலாம் ராஜராஜன் முதல் முதலாம் அதிராஜேந்திரன் காலம் வரை கணக்கில் கொள்வர் (பொ.ஆ. 985-1070). அவ்வாறு காணும்பொழுது, முதலாம் ராஜராஜன் காலத்தில் இருந்து துர்க்கை அம்மன் சிற்பத்தை மகிஷாசுரமர்த்தினியாகவும், மாகாகாளியாகவும் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளையும் செய்து போற்றியுள்ளதைக் காணலாம். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில்தான் சோழ நாட்டு மக்கள் பல மாற்றங்களைப் பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை.

சோழர்களின் முதலாவது தலைநகரை தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினான். அடுத்து, தலைநகரில் மாபெரும் சோழமாளிகையை உட்கோட்டைப் பகுதியில் நிறுவி, கங்கைகொண்டசோழன் மாளிகை எனப் பெயரும் சூட்டி மகிழ்ந்தான். சோழ நாட்டுக்கே நீராதாரமாகத் திகழக்கூடிய அளவுக்கு சோழகங்கம் எனும் ஏரியை வெட்டி நீர்நிலை ஆதாரத்தைப் பெருக்கினான். முறையான மதகுகளை அமைத்து, மண்டலம் முழுவதும் நிறைவாக நீர் சென்றடைய வழிவகுத்தான். முதலாம் ராஜராஜன் கண்ட வெற்றிகளைப்போல முதலாம் ராஜேந்திர சோழன் பன்மடங்கு வெற்றிகளைக் குவித்தான். அண்டை நாடுகளுடன் போரிட்டு வெற்றிபெற்றது மட்டுமின்றி, கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தனது படைபலத்தை நிரூபித்து, சோழ நாட்டின் எல்லையை அதிகரித்த பெருமையும் இவனுக்கு உண்டு. இத்தனை பெருமைக்கும் உரியவன் தனது வெற்றிக்கனிகளை கொண்டுவந்து காலடியில் வைத்து வணங்கும் பெண் தெய்வம் என்றும், போர்க்கடவுள் என்றும் பெருமிதத்தோடு வணங்கியது துர்க்கை அம்மன்தான் என்றால், அது அவனது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.

முதலாம் ராஜராஜ சோழன் - தஞ்சாவூர் - பிரகதீஸ்வரர் - துர்க்கை

இடைக்கட்டு நிசும்பசுதனி - துர்க்கை

கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றம் செய்து அங்கு கங்கைகொண்ட சோழீஸ்வரத்தை எழுப்பி அதற்கு அருகிலே சோழ மாளிகையையும் கட்டி, இவற்றுக்கு அரண்போல வானுயர் கோட்டையையும் எழுப்பினான். அடுத்து தன் மக்களையும், தன் நாட்டையும், கோட்டையையும் காப்பதற்காக கோட்டையின் எண் திசைகளிலும் துர்க்கை அம்மன் சிற்பத்தை அமைத்து கோயில் எழுப்பி அதனைப் பாதுகாவல் தெய்வமாகவும், வெற்றியைக் கொண்டாட அனைத்து துர்க்கை அம்மன் சிற்பங்களுக்கும் நேரில் வந்து வணங்கி அன்னையின் ஆசி பெற்ற பின்னரே போருக்குச் செல்லும் பழக்கத்தையும் கொண்டிருந்திருக்கின்றான். எனவேதான், தான் வெற்றிபெற்ற நாடுகளிலிருந்து பொன்னோ, பொருளோ எடுத்து வராமல், அந்நாட்டு பெண் தெய்வங்களான மகிஷாசுரமர்த்தினி சிற்பங்களை எடுத்துவந்து அச்சிற்பங்களுக்கு உரிய இடம் அளித்து கோயில் அமைத்து வழிபடச் செய்து, தன்னையும், தன் நாட்டையும் காக்க வேண்டும் என வேண்டி நின்ற பெருமை வேறு எந்த சோழ மன்னனுக்கும் கிடைக்காத ஒன்று.

கங்கைகொண்ட சோழபுரம் - இடைக்கட்டு - நிசும்பசுதனி கோயில்

கங்கைகொண்ட சோழபுரத்தில் எண் திசைகளிலும் துர்க்கை அம்மனைப் பிரதிஷ்டை செய்த ராஜேந்திர சோழன், நிசும்பசூதனி எனும் துர்க்கை அம்மனையும் படைத்திட்டான். இச்சிற்பம் எட்டு கரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் தலையலங்காரம் விரிசடையாகக் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், சிசும்பனை சும்பன் தனது கைகளால் வதம் செய்வதுபோல செதுக்கப்பட்டுள்ளதால், விஜயாலயன் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட நிசும்பசுதனியை ஒத்ததுபோல செய்திகள் இருந்தாலும், காலத்தால் சற்று பிற்பட்டதாகவே தோன்றுகிறது.

கங்கைகொண்ட சோழீஸ்வரம் - துர்க்கை, மெய்க்காவல்புத்தூர் - துர்க்கை

முதலாம் ராஜேந்திர சோழன், தான் எழுப்பிய திருக்கற்றளியான கங்கைகொண்ட சோழீஸ்வரம் திருக்கோயிலில் அம்மனுக்கு, அதாவது துர்க்கை அம்மனுக்கு என தனிக் கோயில் எடுத்துச் சிற்பித்துள்ளான். இக்கோயில் கருவரையிலும் இக்கோட்டையைச் சுற்றிலும் பல துர்க்கை அம்மன் சிற்பங்களை அயல் நாடுகளிலிருந்தும் கொண்டுவந்து அமைத்து கோயில் எழுப்பி வழிபாடுகள் செய்யவும் முறைப்படுத்தினான். கங்கைகொண்ட சோழபுரம் முறையாக திட்டமிடப்பட்ட நகரமாக மாற்றி அமைத்த பெருமையை உடையவன் முதலாம் ராஜேந்திர சோழன். இங்குதான் ஆயுதக்களம் அமைத்து போர் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூடமும் அமைத்துள்ளான். போருக்குச் செல்லும் முன் இத்துர்க்கை அம்மனை வழிபட்டுச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இப் போர் தெய்வம் சோழ வம்சத்தினர் குலதெய்வமாகப் போற்றி வணங்கினர் என்ற கருத்தும் உளது. எனவே, இச்சிற்பம் மேலும் பல பொழிவுகளைப் பெற்றுள்ளது என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இச்சிற்பம் இருபது கரங்களைக் கொண்டது. இவள் இருபது கரங்களிலும் ஆயுதங்களைத் தாங்கி போரிடும் சக்தி பெற்றவளாவாள். சோழர்கள் காலத்தில் முதலாம் ராஜேந்திர சோழன்தான் முதன்முதலாக அம்மனுக்குத் தனிச் சந்நதியை அமைத்துச் சிறப்பித்துள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கங்கைகொண்ட சோழபுரம் - கலிங்க நாட்டுச் சிற்பங்கள் - மகிஷாசுரமர்த்தினி

கங்கைகொண்ட சோழபுரம் சுற்றிலும் எண்திசைகளிலும் மகிஷாசுரமாத்தினியின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இவை கலிங்க நாட்டிலிருந்து வெற்றியின் நினைவாகக் கொண்டுவரப்பட்ட வெற்றிச் சின்னங்கள்தான் இப் பெண் தெய்வமான துர்க்கை அம்மன் ஆகும். முதலாம் ராஜேந்திர சோழன், துர்க்கை அம்மன் மீது மிகுந்த பற்றும் பக்தியும் கொண்டவன். ஆதலால் பொருளாசையின்றி பெண் தெய்வத்தின் மீது கொண்ட பற்றினால் இவை நம் நாட்டு எல்லைகளைக் காத்து மக்களையும் இந்த அரசையும் வாழவைத்தல் வேண்டி அம்மன் சிற்பங்களைக் கொணர்ந்தான்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் நான்கு திசைகளில், அதாவது மெய்க்காவல்புத்தூர் மண்மலைக்கு அருகில் மேற்கு திசையில் வைக்கப்பட்டுள்ள சிற்பம் மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவன் கொண்டுவந்த அனைத்து துர்க்கை அம்மனுக்கும் தனித்தனியாக கோயில் எடுக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து, வடக்கு பக்கம் ஒரு கலிங்க நாட்டு துர்க்கை அம்மன் வைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பத்தின் அமைப்பும் வடிக்கப்பட்டுள்ள விதமும் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளதைக் காணமுடிகிறது.

எட்டு கரங்களுடன் மிகவும் ஆவேசமாகக் காட்டப்பட்டுள்ள இவள் மகிஷனின் தலையைப் பிடித்துக்கொண்டு சூலத்தைப் பாய்ச்சுகின்ற அழகும், ஒரு கையில் தனது அம்பராக்கூட்டுக்குள் உள்ள அம்பை லாகவமாக எடுக்கும் அழகும் பார்த்து வியக்கக்கூடியது. முதலாம் ராஜேந்திர சோழனால் பார்த்து ரசித்து, தன்னை அச்சிற்பம் கவர்ந்ததால் கலிங்க நாட்டிலிருந்து வெற்றியின் நினைவாக எடுத்துவந்து அதனை தம்மக்களும் கண்டுகளிக்கவும், அவளருள் இங்கு அனைவருக்கும் கிட்டவே இது போன்ற மகிஷாசுரமர்த்தினி சிற்பங்களைக் கொண்டுவந்து கோயில் எடுப்பித்துள்ளான்.

கலிங்க நாட்டுத் துர்க்கை (மகிஷாசுரமர்த்தினி, கலிங்க நாட்டுச் சிற்பங்கள் - செங்கமேடு

முதலாம் ராஜேந்திர சோழன் தான் பெற்ற வெற்றியின் நினைவாக கலிங்க நாட்டிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்ட கலைநயம் மிக்க சிற்பங்களை அந்நாட்டு மக்கள் கண்டுகளித்தனர். அத்தகைய பெருமை வாய்ந்த சிற்பங்களை தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை தனது பாதுகாப்பில் வைத்து பாதுகாத்து வருகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மகாகாளி அம்மன், மகிஷாசுரமர்த்தினி, பைரவர், சுப்ரமணியர் சிற்பங்களாகும். பெரும்பாலும் பெண் தெய்வங்களையே அதிக அளவில் கொண்டுவந்துள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நவக்கிரகம் ஒன்றும் கலைநயம் மிக்க படைப்பாகக் கருதி அதனையும் கொண்டுவந்து, தான் நிறுவிய கங்கைகொண்டசோழீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளான்.

இங்கு உக்கரமாக, எட்டு கரங்களுடன் தனது வலது காலை சற்று மடக்கி ஒரு கையில் சூலத்தைப் பிடித்துக்கொண்டு இடது காலால் அரக்கனை மிதித்துக்கொண்டு ஆவேசமாக்க் காட்சியளிக்கிறாள். தலைமுடிகள் விரிந்த சடைமுடி கொண்டு இவள் மாகாளியாக அரக்கனை கொல்ல அவதாரமெடுத்துள்ளாள் என்பதை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிற்பி அதனை வடித்துள்ளான். அடுத்து இங்கு காணப்படுபவற்றில் மிகவும் போற்றக்கூடியது மகிஷாசுரமர்த்தினி சிற்பம் ஆகும். இச்சிற்பத்திலும் எட்டு கரங்களே காட்டப்பட்டுள்ளது. மகிஷனை அழிக்க சூலத்தை ஓங்குவது போல காட்சியளிக்கிறாள். தனது காலடியில் எருமைத் தலை அரக்கனை போட்டு மிதித்துக்கொண்டு ஆவேசமாகக் காட்சியளிப்பது போல சிற்பி செதுக்கியுள்ளான்.

இவ்விரண்டு சிறபங்களும் செங்கமேட்டுப் பகுதியில் உள்ள தொல்லியல் துறையின் பாதுகாப்பில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இவை அனைத்தும் சோழ மன்னர்களும் இடைக்காலச் சோழர்களும் பெண் தெய்வமான துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி எனும் போர் தெய்வத்தின் மீது கொண்ட பற்றையே காட்டுகிறது. இவை நாளடைவில் கிராம மக்களாலும் போற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

நிசும்பசுதனி - கலிங்கம் - செங்கமேடு (கங்கைகொண்ட சோழபுரம்)

(நன்றி - அலமி)

சாளுக்கிய குலோத்துங்கனால் எடுக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி -மேலக்கடம்பூர்

சுங்கம் தவிர்த்திருள் நீக்கி உலகாண்ட ஸ்ரீ குலோத்துங்கசோழதேவர் என்று கல்வெட்டில் புகழப்பெற்றுள்ள இவ்வேந்தர் பெருமான், கீழைச் சாளுக்கிய மன்னனாகிய ராஜராஜ நரேந்திரனுக்கும், தாய் கங்கைகொண்ட சோழன் புதல்வியாகிய அம்மங்கை தேவியாருக்கும் பிறந்தவனாவான். தந்தைவழியில் சோழர் மரபினன் அல்லாதவனாக இருந்தாலும், தாய்வழியில் சோழர் மரபினன் ஆவான். முறைப்படி குலோத்துங்கச் சோழன், கீழைச்சாளுக்கிய மரபினனாக இருப்பதனால் சோழற் கலையையும், சாளுக்கிய நாட்டுக் கலையையும் கலந்து தமிழகத்துக்குப் பல அரிய கலைப் படைப்புகளை வழங்கியுள்ளான். அவற்றில் மேலக்கடம்பூர் கோயிலும் ஒன்று. மாடக்கோயிலாக அமைந்த இத்திருக்கோயிலில் சிற்பங்களின் கலைத்திறம் மிகவும் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. அங்கு காணப்படும் புடைப்புச் சிற்பமான மகிஷாசுரமர்த்தினி சிற்பம் மிகவும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

சுடுமண்ணால் வனைந்த துர்க்கை அம்மன்

மைசூரும் மகிஷாசூரனும்

மைசூர் எனப் பெயர் வரக் காரணம், மகிஷனை சூரசம்காரம் செய்த இடம் என்பதால் மகிஷாசூரன் என்பது மைசூர் என்றானது என்பர். மக்கள் அனைவரும், எருமைத்தலை அரக்கன் எங்கள் இடத்தைப் பிடித்துக்கொண்டு பல தொல்லைகளை அளித்து வருகின்றான்; அவன் யாருக்கும் அடிபணிய மறுக்கின்றான்; அவனது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என துர்க்கையிடம் முறையிடுகின்றனர். மக்கள் இன்னலைப் போக்கி அவர்களைக் காப்பதற்காக துர்க்கை அவதாரமெடுத்து மகிஷாசூரனை வதம் செய்து மக்களை காத்து நிற்கின்றாள் துர்க்கை. மகிஷனை அழித்து மகிஷாசூரமர்த்தினி என்றும் பெயர் பெறுகின்றாள்.

மகிஷாசூரன் - சாமுண்டி மலைப்பகுதி

அதன் பயனாக, இப்பகுதி மக்கள் அன்னையின் பெயரால் மகிஷாசுரமர்த்தினி என்பதையும் அவள் காத்து நிற்கும் ஊர் என்பதையும் இணைத்து மைசூர் எனப் பெயரமைந்தது எனவும் கூறுவர். அதன் பயனாக மைசூரில் நவராத்திரி விழாவும், தசரா விழாவும் இன்றளவும் சிறப்புடன் கொண்டாடுவதற்குக் காரணம், மகிஷனை துர்க்கை வதம் செய்து அழித்ததனால் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலைத்து வருகின்றது. அதற்காக மகிஷனுக்கும் ஒர் சிலை எடுத்து அத்திருநாளில் வழிபாடுகளையும், பூசைகளையும் செய்து வருகின்றனர். சாமுண்டி ஹில்ஸ் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக இன்றளவும் திகழ்கின்றது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com