விஜயநகர, நாயக்கர் காலத்தில் கன்னிமார் எழுவர்

காரணகாரியங்கள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக இல்லாமல், அவை மக்களின் அன்றாட வாழ்க்கையை செம்மையுற நடத்த பெரும் துணையாக அமையும்படி புராணக்கதைகளாக இருந்துள்ளதையும் அறியமுடிகிறது.

மணப்பாறை அருகே அமைந்துள்ளது ஸ்ரீ நல்லாண்டவர் திருக்கோயில். இங்கு, பொ.நூ. 16-17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சப்தமாதர்களின் கோயில் ஒன்று தாய் தெய்வங்களுக்கென்று தனியாக அமைந்து, இன்றும் சிறப்புடன் போற்றப்பட்டு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இக்கோயிலைச் சுற்றி அமைந்துள்ள பதினெட்டு கிராமங்கள் இக்கோயிலுடன் தொடர்புடையதாகும். இக்கோயிலில் அமைந்துள்ள சப்தமாதர்கள் சிற்பம் சுதையால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றது. இப்பகுதியைச் சுற்றிலும் பல்வேறு கோயில்களில் சப்தமாதர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. இது, இப்பகுதியில் சப்தமாதர் வழிபாடு பெற்றுள்ள செல்வாக்கைக் காட்டுகிறது.

சுதையால் வடிக்கப்பட்ட சப்தமாதர்கள் - ஸ்ரீ நல்லாண்டவர் திருக்கோயில்

தமிழகத்தில் திருவலஞ்சுழி, சிதம்பரம், திருத்தணி போன்ற இடங்களிலும் அன்னையர் எழுவர் சிற்பங்களைக் காணலாம். அன்னையர் எழுவர் சிற்பங்கள் அனைத்தும், அமர்ந்த நிலையில் ஒரு காலை மடக்கி ஒரு காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனத்தில் அமர்ந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். விஜயநகரர் ஆட்சிக்காலத்தில் இருந்து இக்கோலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாற்றம் எல்லா இடங்களிலும் போற்றப்படவில்லை. முற்காலச் சோழர் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருக்கோளக்குடி போன்ற பழமையான சப்தமாதர் சிற்பங்களில், அன்னையர் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளவாறு காட்டப்படுவர். விஜயநகரர் காலத்துக்குப் பின்னர் வந்த சிற்பத் தொகுப்பில், வலது காலை தொங்கவிட்ட நிலையிலும், இடது காலை மடக்கி அமர்ந்த நிலையிலும் காட்டப்பட்டுவர். இம்மாற்றத்தை, திருச்சி மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் சிற்பத் தொகுப்பிலும் காணலாம்.

தென்தமிழகத்தில் கன்னியர் எழுவர் சிற்பம்

தென் தமிழகத்தில், குறிப்பாக துவரங்குறிச்சி, வளநாடு, பொய்கைப்பட்டியில், கன்னியர் எழுவர் நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை, நாகக்கன்னிகள் போன்று ஐந்துதலை நாகம் நடுவில் அமைந்த கன்னிமார் சிற்பத்தின் மேல் காட்டப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. ஆடை அலங்காரங்களும், கொண்டை அமைப்பும், காலத்தால் நாயக்கர் காலத்துக் கலைப்பாணியைக் கொண்டதாக உள்ளது. இவர்களை நாகக்கன்னியர் எழுவர் என்றே குறிப்பிடலாம்.

அருள்மிகு நின்ற நிலை கன்னிமார் கோயில் - பொய்கைப்பட்டி

பொதுவில், இங்கு அமைந்துள்ள கன்னியர் எழுவர் சிற்பங்கள் அனைத்தும், ஒரே பலகைக்கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன. விஜயநகரர் காலத்தில், இவ்வாறு ஒரே கல்லால் செதுக்கப்பட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தைப் பின்பற்றியுள்ளதைப் பரவலாகக் காணமுடிகிறது.

பூதநாயகியம்மன் திருக்கோயில் - துவரங்குறிச்சி

தமிழகக் கிராமங்களில், தாய் தெய்வங்களும் கிராம தெய்வங்களும், விஜயநகரர் ஆட்சிக்காலத்தில் மீண்டும் பெருகத் தொடங்கின. பெரும்பான்மையான சிறுதெய்வங்களும், ஒவ்வொரு காரண காரியங்களுக்காகப் பெருமை பெற்று, அதுவே சடங்காகவும் மாற்றம் பெற்று, பின்னர் மீண்டும் நாட்டார் வழக்காக நிலைத்துவிட்டது.

அருள்மிகு பொன்னர்சங்கர் திருக்கோயில் - வளநாடு

திருச்சி மாவட்டம், வளநாடு கிராமத்தில் காணப்படும் இக்கன்னிமார் சிற்பங்கள், கிராம தெய்வங்களாக வைத்து வழிபடும் மரபின் வழிபட்ட ஒன்று. இதன் அமைப்பு, காலத்தால் பிற்பட்டதாக இருப்பினும், வழக்கு மாறாமலல், பண்பாட்டை, மரபை மீறாமல் மக்கள் தொடர்ந்து தாய் தெய்வங்களை வழிபட்டு வந்ததையே இச்சிற்பங்கள் உணர்த்துகின்றன. மக்கள் விரும்பும் சமயங்களையும், வணங்கும் தெய்வங்களையும் ஆட்சிபுரிந்தவர்கள் மதித்து, அதற்குத் தகுந்த உதவிகளையும் செய்து வழிபாட்டிலும் கலந்து போற்றியுள்ளனர் என்பதற்கும் இச்சிற்பங்கள் சான்றாக விளங்குகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கன்னிமார் சிற்பங்களை மழை வேண்டியும், மகப்பேறு வேண்டியும், துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருக்கவும், கிராம மக்கள் வழிபாடு செய்துவந்துள்ளனர்.

மேற்குறித்த கோயில்களில், கன்னிமார்கள் சாமி என்றே குறிப்பிட்டு, இக்கிராமங்களின் மக்கள் வழிபாடுகளும் பூசைகளும் செய்து வருகின்றனர். வருடத்துக்கு ஒருமுறை, இக்கன்னிமார்சாமி பூஜையை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்திவருகின்றனர். அதனால், இவர்களைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களும், மக்களும் எவ்வித தீங்குமில்லாமலும், வளமை குன்றாமலும் இருப்பதாகக் கருதுகின்றனர். இச்சிற்பங்கள் அனைத்தும் நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. இவை, காலத்தால் பிற்பட்டவையாகும்.

பூதலிங்க சுவாமி திருக்கோயில், பூதப்பாண்டி

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, பூதலிங்க சுவாமி கோயில்; தாடகை மலை - இயற்கை எழில் சூழ்ந்த பகுதியின் பின்புற மலையின் தோற்றம்

பூதலிங்க சுவாமி திருக்கோயில், பூதப்பாண்டி, தோவாளை வட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில், பழையாற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. நமது இதிகாசங்களுடன் தொடர்புடையது. ராமாயணத்தில் வரும் தாடகையின் உருவம்போலக் காட்சிதரும் மலையின் அமைப்பை கொண்டு, இம்மலையை தாடகை மலை என அழைத்து மகிழ்கின்றனர். இம்மலையின் அடிவாரத்தில் பூந்தோட்டங்களும், மரங்களும், செடி கொடிகளுர் நிறைந்த இடத்தில் இத்திருக்கோயில் அமைந்து, பக்தர்களுக்கு இயற்கையான சுத்தமான தூய காற்றை வழங்கக்கூடிய தன்மையைக்கொண்ட தனிச்சிறப்பைப் பெற்றதாக இத்திருத்தலம் விளங்குகிறது.

தொலைவிலிருந்து காணும்பொழுது, தாடகை படுத்திருப்பதுபோலவும், அவளின் மூக்கு மிகவும் பிரசித்திபெற்றதால், அம்மூக்கு எடுப்புடன் தோற்றமளிப்பதையும் இம்மலையில் காணலாம். இத்திருக்கோயிலில், இரண்டு கன்னிமார் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை ஒரே கல்லால் செதுக்கப்பட்டவை. சிறிய அளவில் வடித்திருந்தாலும், அதன் கலையழகும் சிற்பத்திறனையும் காணும்பொழுது, இவை காலத்தால் பொ.ஆண்டு 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததுபோலத் தோன்றுகிறது. கன்னிமார் வழிபாடு, கன்னியகுமரி மாவட்டத்திலும் சிறப்புடன் வழிபாட்டில் இருந்துள்ளது என்பதையே இவை சுட்டுகின்றது. மேலும், இப்பழமையான வழிபாடு, இந்தியாவின் ஆரம்பம் முதல் இறுதிப் பகுதியான கன்னியாகுமரி வரை பரவியிருந்துள்ளது என்பதற்கு இவை சான்றாகத் திகழ்கின்றன.

இக்கன்னிமார்கள், வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி சுகாசனத்தில் அமர்ந்த கோலம், தலையலங்காரமும் கொண்டை அமைப்பும் நாயக்கர் கலைப்பாணி என்பதை தெளிவாக எடுத்தியம்புகின்றன.

கன்னிமார் சிற்பங்கள் - பூதலிங்க சுவாமி திருக்கோயில் - பூதப்பாண்டி

புராணம் கூறும் கன்னிமார் எழுவர்

தமிழகத்தில் படைக்கப்பட்ட சக்தி தெய்வங்கள் அனைத்துக்கும் காரணகாரியங்கள் உண்டு. மேலும், இக்காரணகாரியங்கள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக இல்லாமல், அவை மக்களின் அன்றாட வாழ்க்கையை செம்மையுற நடத்த பெரும் துணையாக அமையும்படி புராணக்கதைகளாக இருந்துள்ளதையும் அறியமுடிகிறது. எனவே, இவற்றை புராணம் என்று ஒதுக்கவும் இயலாது. அதனை அப்படியே ஏற்காமல், அதன் அடிப்படை உண்மையை உணர்ந்து, அவை மக்களுக்குச் சொல்லவந்த செய்தி என்ன என்பதை மட்டும் நன்கு கவனித்தால், அக்கதையின் கரு நமக்கு நல்வழிவகுக்க உதவும்.

இறைவனின் முழு அருளையும் பெற்றவன் அந்தகாசூரன் ஆவான். இவனது தொல்லைகள் தேவகுலத்துக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போனது. இதனைக்கண்ட தேவர்கள், தேவியிடம் முறையிட்டனர். இந்த அந்தாகாசூரன் யார்? இந்தக்கதையையும் அறிந்துகொள்ளுங்கள்

அந்தகாசூரன்

அந்தகாசூரனைப் பற்றி கதைகள், பல புராணங்கள் பலவாறு பகர்கின்றன. ஆனால் அவற்றின் உட்கருத்து ஒன்றே. மட்சிய புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம் மற்றும் சிவ புராணம் போன்ற புராணங்கள் அனைத்தும், அந்தகாசூரனைப் பற்றியும் இரண்யாக்ஷன், இரண்யகசிபு பற்றியும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் சுருக்கத்தை மட்டும் சிவ புராணம் கூறுவதிலிருந்து காண்போம். (Mahadev Chakravarthi, Motilal Banarsidas, The concept of Rudrasiva through the ages, Madras - 4,1986)

சிவபெருமானும் பார்வதியும், கயிலாயத்தில் பருவத மலை மீது அமர்ந்திருந்தவேளையில், சிவனின் மீது கொண்ட காதலால் அவரது கண்களைப் பார்வதி விளையாட்டாக தனது இருகரங்களால் மூடுகிறார். அதனால் திடீரென உலகம் முழுவதும் இருள் சூழ்கிறது. சிவனின் உடல் வியர்வையால் நனைகிறது. பாதங்கள் ஈரமாகின்றன. சிவனின் உடலிருந்து வியர்வைத்துளிகள் சிந்துகின்றன. அவை பார்வதியின்மேல் விழுகின்றன. அவற்றில் ஒரு துளி கீழே சென்று பூமியில் விழுகின்றது. செய்வதரியாத பார்வதி, கைகளை எடுக்கிறார். மீண்டும் உலகம் முழுவதும் வெளிச்சம் பரவுகின்றது.

சிவனிடமிருந்து கீழே விழுந்த நீர்த்துளி பூமியில் பட்டதும், அது ஒரு குழந்தையாக மாறுகிறது. நம் அருளாள் பிறந்ததால் இவனும் நம் குழந்தையே என பார்வதியிடம் சிவன் எடுத்துரைக்கிறார். பார்வையற்ற வித்தியாசமான நிலையில் உள்ள அக்குழந்தையைக் காணவோ அதனை எடுக்கவோ பார்வதி அஞ்சுகின்றாள். புத்திர வரம் வேண்டி இரண்யாக்ஷன் கடும் தவம் ஒன்று புரிவதை அறிந்த சிவன், அவரை அழைத்து இக்குழந்தையை பெற்றுக்கொள்வாயாக என்று சொல்லி, அக்குழந்தையைத் தர, அவரும் குழந்தையை இன்முகத்துடன் ஏற்றுச் செல்கிறார். அக் குழந்தைக்கு, அந்தகாசுரன் என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்தார்.

அந்தகாசூரனை சிவன் தனது திரிசூலத்தால் வதை செய்யும் காட்சி

அந்தகாசூரன், யாருக்கும் அடங்காத அசுரனாக வலம் வருகிறான். அவன், அண்டசராசரமும் எனக்கடிமை என்று காண்பவரையெல்லாம் வீழ்த்தியும் அடிமைப்படுத்தியும் அட்டகாசம் செய்து அலைகின்றான். இறுதியாக, தேவலோகத்துக்குச் சென்று இந்திரனைப் பார்த்து, எனக்கு பார்வை வழங்க வேண்டும் என்று கேட்க, அவரும் சிவனால் அழியக்கூடியவனாக இருந்தாலும், அவனது தொல்லை தாங்காமல் அதனையும் அருளினார். ஆனால் அவனோ பிரம்மா, விஷ்ணு என கண்ணில் பட்ட தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தி அடிமைப்படுத்தினான் அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். நீண்ட தபசுவில் இருந்த சிவன், தன் தபசு முடிந்ததும் அவனுக்கு முடிவு நேரும் என்று கூறினார்.

இறுதியாக, தேவலோகக் கன்னிகளிடம் சென்று அனைவரையும் தனது இச்சைக்கு அழைத்து அட்டகாசம் செய்ய, இறைவன் அவனது கொடுமைகளைச் சகிக்காது தேவலோகம் வந்தார். அங்கு பிரம்மா, விஷ்ணு, கார்த்திகேயன், எமன் போன்றோரைக் கண்ட சிவன், அந்தகாசூரன் எனது வியர்வைத் துளி பூமி மீது விழுந்ததால் பிறந்தவன். எனவே, அவனது ரத்தம் நிலத்தில் சிந்தினால், அவனைப் போன்றே பல அந்தகாசூரன்கள் தோன்றுவர். எனவே, அவனை அழிக்கும்போது அவனது ரத்தம் கீழே சிந்தாமல் காணாமல் செய்தல் வேண்டும். ஆகவே, நமது சக்திகளை ஒருங்கிணைத்து பூமியில் அவதாரம் எடுக்கச்செய்து, அவனது குருதியை கபாலங்களில் பிடித்துக் குடித்து அதனைக் காணாமல் செய்தால், அவன் இறப்பது உறுதி என்றார். அதனடிப்படையில்தான், சப்தமாதர்களில் லோகேஸ்வரியை சிவன் படைக்க, அதனைத் தொடர்ந்து வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி, பிரம்மி, வாராகி, சாமுண்டா என தாய் தெய்வங்கள் எழுவரும் அவதரித்து, அவனது குருதியைக் கபாலத்தில் பிடித்துக் குடிக்க, அவன் இறுதியில் காணாமல் போய்விட்டான்.

அசுரர்கள் என்று புராணம் கூறுவது தீயசக்திகளையே. அவர்கள் நாட்டில் தோன்றி மக்களுக்கு இன்னல்களைக் கொடுத்தால், அவர்களை அழிக்க ஏதேனும் ஒரு வடிவில் இறைவன் தோன்றி மக்களைக் காப்பார் என்று புராணம் கூறுகிறது. அந்தவகையில், அடுத்தவர்களுக்குக் கெடுதல் நினைப்பவர்களை உடனடியாகத் தண்டிக்கும் ஆற்றல் பெற்றவர் இந்தக் கன்னிமார் தெய்வங்கள் ஆகும். கன்னிமார்கள் என்று கிராமங்களில் அழைப்பதற்குக் காரணம் என்னவெனில், தாய்மை என்பது புனிதமானது, தாய் தெய்வங்கள் என்று குறிப்பிட்டால், தாய்மைக்குப் பரிவு குணம் உண்டு. எனவே, கெட்டவர்களை அழிப்பதற்கு இளைஞிகள் அதாவது கன்னிகள்தான் தேவை என்பதை உணர்ந்து கன்னிமார்களைப் படைத்துள்ளனர்.

நமது பண்பாட்டில், ஒவ்வொரு செயலுக்கும் காரணகாரியங்கள் அமைத்துள்ளதை இதனைக்கொண்டும் காணமுடிகிறது. மேலும், இளம்கன்று பயம் அறியாது என்பதால், இதுபோன்ற அரக்கர்களை அடக்கும் ஆற்றலை கன்னிமார்களே ஏற்றவர்கள் என்பதால்தான், கன்னியர் எழுவர் அவதரித்தனர். அரக்கனை அழித்த பின்பு அவர்கள் கன்னிமார்களாக இருந்தாலும், மக்களின் துயர்துடைக்க கடுமையாகப் போராடி, தொடர்ந்து மக்களைக் காத்து வருவதால், இவர்களையும் தாய்மார்கள் என அழைத்தும் வழிபாடுகளைச் செய்யத் துவங்கினர் என்பர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com