சுடச்சுட

  

   

  தமிழகத்தில் காணப்படும் தொன்மையான சிற்பங்கள் எவை என்றால், அவை பெண் தெய்வச் சிற்பங்களே. பல்லவர்கள் காலத்தில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட அவை, சோழர்கள் காலத்தில் மிகவும் சிறப்பும் பொலிவும் பெற்று சிற்பக்கலைக்குத் புகழ்மணக்கச் செய்துள்ளன. தமிழகத்தில் கலை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பெற்று, தங்கள் காலச்சுவடுகளை மக்களின் மனதில் ஆழமாகப் பதியவைத்துச் சென்றுள்ளன. இவற்றில் மிகப்பழமையான பெண் தெய்வச் சிற்பங்களே தமிழகத்தின் சிற்பக் கலைக்குச் சான்று பகர்வனபோல அமைந்துள்ளன.

  துர்க்கை - பனமலை

  பல்லவர்கள், பாண்டியர், முத்தரையர்கள், சோழர்கள் என வரலாற்றின் முற்பகுதி ஆட்சியாளர்களின் கைவண்ணத்தில் உருவானவையாக அவர்கள் படைத்த பெண் தெய்வங்களான உமை, துர்க்கை, ஜேஷ்டாதேவி, அன்னையர் எழுவர் போன்ற பல உருவச் சிற்பங்களைக் கூறலாம்.

  துர்க்கை, சாமுண்டி, காளி, மகிஷாசுரமர்த்தினி இவையனைத்தும் அன்னை பார்வதியின் ஒரு பகுதியாகவே கருதுவர். அன்னை பார்வதி தேவி, திருமாலின் தங்கை. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் ஆக்க சக்தியாகவும், செயல்படும் சக்தியாகவும் விளங்குபவள். கோபமாகச் செயல்படும்பொழுது காளியாகவும், போர்க்களத்தில் போர்புரியும்பொழுதும், தீய சக்திகளை அழிக்கும் பொழுதும் துர்க்கையாகவும் மாற்றம் பெறுவாள். சாந்தமாகவும் கனிவாகவும், அன்பாகவும் தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்குத் தாயாகவும் அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் அன்னையாகவும் விளங்கும்போது பார்வதியாகவும் திகழ்பவள்தான் அன்னை உமையவள்.

  கொற்றவை

  தமிழர்களின் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் கொற்றவை வழிபாடு குறிப்பிடப்படுகிறது. மனிதனின் அன்றாட வாழ்வில் தனது உணவு தேடுதலை ஆரம்பித்த நாள் முதல், ஏதேனும் ஒன்றுக்காக ஏதேனும் ஒன்றுடன் போராட ஆரம்பித்தான். அப்போராட்டமே அவனது வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கத்தொடங்கியது. அதுநாள்முதல் போர் என்பது அவனது வாழ்க்கையில் முக்கிய அங்கமாகிவிட்டது. பண்டைய மக்கள் வேட்டைக்குச் செல்லும் முன் தனது போர்த்தெய்வமாக எல்லாவற்றிலும் சிறப்பும் மாந்திரீக சக்தியும் பெற்ற பெண் தெய்வத்தையே வணங்கிச் சென்றுள்ளான். அதுவே பின்னர் போர்க்கடவுளாக மாற்றம்பெற்று, தொல்காப்பியம் குறிக்கும் கொற்றவையாக அமைந்ததுபோலும்.

  பரிபாடலில் ஒரு பெண்ணை வர்ணித்துக் குறிப்பிடும்பொழுது, கொற்றவையைப் போன்று என ஒப்பிட்டுக் கூறும் வரியிலிருந்து, கொற்றவையின் தோற்றத்தை ஓரளவு உணரமுடிகிறது.

  அப்பாடல் வரியானது -

  “நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே

  கொற்றவை கோலம்; கொண்டு ஓர் பெண்

  பவள வளை செறிந்தாட் கண்டு”.*1

  - எனக் குறிப்பிடுகிறது. எனவே, கொற்றவை நெற்றி நிறைய திலகமிட்டு விரிந்த விழிகளுடன் காணப்படுவதாகக் கொள்ளலாம்.

  சங்க காலத்தில், கொற்றவையை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அன்னை பார்வதி தேவியும் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழக மக்கள் போற்றி வணங்கும் தெய்வங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

  {pagination-pagination}

  அன்னை பார்வதி – உமை

  அன்னை உமையவள், மலைமகள் எனப் பலவாறு போற்றி வணங்கப்பட்டு வருபவளே பார்வதி. பருவதம் என்பது மலையைக் குறிக்கும் சொல். பார்வதியின் தந்தை இமயமலைகளின் அரசன் இமவான் (Himavan). பார்வதி, மலைகளுக்கெல்லாம் இளவரசி. இவளது தாயார் மீனா. இலக்கியங்களிலும், இந்து சமய நூல்களிலும் அன்னை பார்வதி பலவாறு அழைக்கப்படுகிறாள். சைலஜா, அதிரஜா, சைலபுத்ரி, ஹேமாவதி, தேவி, மகேஸ்வரி, கிரிஜா என மலைகளின் பெயரை ஒட்டியே குறிப்பிடப்படுகிறது. பார்வதிக்கு இரண்டு பெயர்கள் பெருமை சேர்ப்பவை. ஒன்று உமை, சிவனின் முதல் மனைவி. அடுத்து, மலையரசி. அரிவம்சத்தில் அமர்ணா என குறிக்கப்படுகின்றாள்.

  அன்னை பார்வதி பல்வேறு வடிவங்களையும் அதற்கேற்ற பெயர்களையும் கொண்டவளாகத் திகழ்கிறாள். அன்புக்குரிய தாயாக இருப்பவளே அம்பிகா, தனது உண்மை சொரூபத்தைக் காட்டி தனது சக்தியை வெளிப்படுத்தும்பொழுது சக்தியாகவும், கருணையோடு காட்சியளிக்கும்போது மாதாவாகவும், பெண் தெய்வங்களுக்கெல்லாம் தலைமை ஏற்கும்போது மாகேஸ்வரியாகவும், தனது சுயரூபத்தை மறைத்து தனது சக்தியை மட்டும் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான தோற்றத்தை அடையும்போது துர்காதேவியாகவும், வளமையைக் குறித்து வழிபடும்போது அன்னை பவானியாகவும், சிவனின் பத்தினியாக வலம் வரும்போது சிவரஞ்சினியாகவும், கொடூரமாகக் காட்சியளிக்கும்போது பைரவியாகவும் தோன்றி பக்தர்களைக் காத்து அருளும் சக்தியைப் கொண்டவளே அன்னை பார்வதி. சிவனுடன், திருமணக்கோலத்தில் இருக்கும்போதும், கயிலாயத்தில் இருக்கும்போதும் இரண்டு கைகளுடனே காட்சியளிப்பார்.

  இடது படம் - கயிலாயத்தில் அன்னை பார்வதியுடன் சிவபெருமான். கீழே ராவணன் சிற்பம் உள்ளது.

  வலது படம் - சோமஸ்கந்தருடன் பார்வதி (செப்புப் படிமம்)

  இடது படம் - எல்லோரா – கல்யாணசுந்தரர் (உமை) திருமணக்கோலம்.

  வலது படம் - சிவனும் பார்வதியும் - சோழர் காலச் செப்புத் திருமேனி. பொ.ஆ.12-ம் நூற்றாண்டு

  தமிழகத்தில், சிற்பங்களின் தோற்றமாக பல்லவர்கள் காலத்தையே குறிப்பர். அவர்கள் குடவரைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் (Cave Temples and Structural temples) அமைத்து, தங்களது சமயங்களையும், தெய்வங்களையும், சிற்பங்களில் வடித்து பெருமை சேர்த்தவர்கள் ஆவர். இன்றைக்கும் தமிழகக் கலை வரலாற்றில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்த மாமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவான்.

  இவனது காலத்தில்தான், தேசூருக்கு அருகிலுள்ள சீயமங்கலம் அவனிபாஜனபல்லவேசுரத்தில் குடவரையில் உருவாக்கப்பட்ட முகப்புத்தூணில் காணப்படும் சிற்பத் தொகுதியில்தான் உமையன்னையின் தோற்றத்தை முதன்முதலாகக் காணமுடிகிறது. இங்குதான் தமிழ்நாட்டின் முதல் ஆடவல்லான் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.*2

  {pagination-pagination}

  அடுத்து சோமாஸ்கந்தர் சிற்பத் தொகுப்பில் காணப்படும் உமையன்னை. தமிழகத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்க, நடுவில் ஸ்கந்தன் குழந்தை உருவாக அன்னையின் தொடை மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியே சோமாஸ்கந்தமூர்த்தி என அழைக்கப்படுகிறது. தமிழக சிற்பத் தொகுப்பில் இச்சிற்பங்களே மிகப் பழமையானதாகும்.

  மாமல்லபுரத்தில் அமைந்த தருமராஜ ரதம் என்று அழைக்கப்படக்கூடிய, தமிழகத்தில் பல்லவர்களால் எடுப்பிக்கப்பட்ட முதல் கட்டடக் கோயில் என்ற பெயர்பெற்ற இக்கோயில் கருவறையில் சோமாஸ்கந்தராக இறைவன் குடும்பசமேதரராக எழுந்தருளியுள்ளார். அந்தியந்தகாமபல்லவேசுவரகிருகம் என்றழைக்கப்படும் இங்கு, பல்வேறு வகையில் தனிச் சிறப்புகொண்ட நிலையில் வடிக்கப்பட்டுள்ள இச் சிற்பம் வியக்கத்தக்கது. பல்லவர்கள் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இச்சிற்பத் தொகுதி, நாளடையில் மாற்றம்பெற்று பிற இடங்களை அலங்கரிக்கச்செய்யும் நிலை ஏற்பட்டது.

  சோழர்கள் காலத்தில், இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் ஸ்கந்தன் நின்ற நிலையில் காணப்படும் நிலையில் சோமஸ்கந்தர் சிற்பம் அமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூரில் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் முதலில் சேயுடைநாயனார் என்றே கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சோமஸ்கந்தமூர்த்தியைக் குறிப்பதாகும். மேலும் அம்மையப்பராகக் காட்சிதரும் தொகுப்பிலும் அன்னையின் வடிவம் காட்டப்பட்டுள்ளது. தனது பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும்போது, பார்வதி உடனிருப்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது. அதன் உட்கருத்து, சக்தியில்லையேல் சிவனில்லை என்பதை உணர்த்துவதாக அமைகிறது. அவ்வாறு சண்டீஸனுக்கு அனுக்கிரகம் செய்யும்போதும் அன்னை உடன் இப்பதைக் காணலாம். அடுத்து, ராவணன் அனுக்கிரகம் பெறும் காட்சியிலும் உமையன்னையின் சிற்பத்தைக் காணலாம்.

  சண்டீஸ அனுக்கிரகமூர்த்தி

  சோழர்கள் காலத்தில், குறிப்பாக முதலாம் ராசேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்டசோழீஸ்வரம் கோயிலில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சிற்பம் சண்டீஸ அனுக்கிரகமூர்த்தி இடம்பெற்றுள்ளது. இச்சிற்பத்தில், சண்டீஸனுக்கு சிவபெருமான் அனுக்கிரகம் அளித்துக் காப்பார் அவ்வாறு அவர் அனுக்கிரகம் அளிக்கும் நிலையில், உமை அவரது அருகில் அமர்ந்துள்ளதுபோல் இச்சிற்பத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

  முதலாம் ராசேந்திர சோழன், சண்டீஸனாகத் தன்னை உருவகப்படுத்திக்கொண்டு இங்கு காட்டப்பட்ட சண்டீஸன் சிற்பத்தை வடிவமைத்தான் என்றும், சிவபெருமானின் நேரடி ஆசியைப் பெறுவதாக உருவகப்படுத்தி இச்சிற்பத்தை மிகவும் நுணுக்கமாக வடிவமைத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பர். இச்சிற்பத்தில்ர உமை கரண்டமகுடம் தரித்து ஒருகாலை மடித்து சிவபெருமான் மீது படுவதுபோல ஒய்யாரமாக வைத்துக்கொண்டும், ஒருகாலை தொங்கவிட்டுக்கொண்டும் அமர்ந்திருப்பதைக் காணலாம். இதுபோன்று, சிவனும் பார்வதியும் இனணந்து காணப்படுவது சிறப்பானதாகும்.

  இந்திய சிற்பத் தொகுப்புகளில் அயல்நாட்டவரை மிகவும் கவர்ந்த சிற்பங்களில் சண்டீஸ அனுக்கிரமூர்த்தியும் இடம்பெற்றிருப்பது சோழர்களின் சிற்பக்கலைக்கு கிடைத்த சிறப்பாகும். சிவனும் சக்தியும் சேர்ந்தவடிவம் என்பதையும், அம்மையப்பராகவே தோன்றி இணைந்து காட்சியளிப்பதும் இணைபிரியாத ஒற்றுமையை விளக்க அமைந்த சிற்பங்களாகும்.

  வலது படம் - செப்புப்படிமத்தில் அன்னை உமையவள் - (சிதம்பரம்) சோழர் காலம்

  இடது படம் - சண்டீஸ அனுக்கிரகமூர்த்தி - கங்கைகொண்டசோழபுரம் -முதலாம் ராசேந்திர சோழன்.

  {pagination-pagination}

  ராவணன் அனுக்கிரகத்தில் உமையன்னை

  ராவணன், சிவபெருமான் மீது மிகுந்த பற்றுகொண்ட தொண்டனாவான். இவன் இறைவனை பூசித்து சிறப்பு வரம் பெற்றவன். தனது வலிமையின் காரணத்தால் ஆணவம் கொண்டான். ஆணவத்தால் சிவனென்றும் பாராமல் தன்னைவிட வலிமைமிக்கவர்கள் யாரும் உண்டோ இவ்வுலகில் என்ற கர்வம் கொண்டான்.

  சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கும் கைலாய மலையை அடைந்தான். மலையை தன் புஜபலத்தால் தூக்கி எறிவேன் என்று கூறி சிவனும் அன்னை பார்வதியும் அமர்ந்துள்ள கயிலாயத்தை பெயர்த்தெடுக்க முற்பட்டான். இறைவன் அவனது ஆணவத்தை அடக்கி, தன்னை யார் என்று உணரச்செய்யும் பொருட்டு, தனது கட்டைவிரலால் கயிலாய மலைக்கு ஓர் அழுத்தம் கொடுத்தார். அந்த அழுத்தத்தினால், ராவணனால் அம்மலையை துளியும் அசைக்கக்கூட இயலவில்லை. தனது தவறை உணர்ந்து, தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று இறைவனை சரணடைந்தான்.

  இச்சிற்பத் தொகுப்பு, கோயில் சிற்பங்களில் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. மரத்தாலும் செய்யப்பட்ட இதுபோன்ற சிற்பத் தொகுப்பு, லண்டன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி, தமிழ்நாடு அரசு அகழ்வைப்பகத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மரத்தாலான ராவணன் சிற்பம், மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது.*3

  இடது படம் - ராவணன், மேரு மலையை தூக்க முயற்சிக்கும் காட்சி - புடைப்புச் சிற்பம் - தாராசுரம், தஞ்சை மாவட்டம்

  வலது படம் - அதே காட்சி. மரத்தால் ஆன மராட்டியர் கலைப்பாணி (சிதைந்த நிலை) – தருமபுரி அகழ்வைப்பகம்

  ராவணன், பூதகணங்களுடனும், வனவிலங்குகளுடனும், தேவர்களுடனும் சூழ்ந்திருக்கும் மேருமலையாகிய திருக்கயிலாயத்தை தூக்க முயற்சிக்கிறான். மேலே உமையன்னையும் சிவனும் அமர்ந்து இதனைக் காணுகின்றனர். சிவபெருமான் அவனுக்குப் பாடம்புகட்ட, தனது சுண்டு விரலால் அழுத்தம் தருகிறார். ராவணன் தனது தவறை உணர்கின்றான். அடுத்து ராவணன்ர இறைவனால் ஆட்கொள்ளும் காட்சி அனைத்தும் தத்ரூபமாக இச்சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளதுகொண்டு, இதனை சிறப்புக்குரிய சிற்பமாகக் கருதலாம். கோயிலை நுணுக்கமாகச் சுற்றிப்பார்த்தால்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை சிற்பமாக வடித்துள்ளதைக் கண்டுகளிக்கமுடியும். இச்சிற்பத்திலும் சிவனுடன் உமை அமர்ந்துள்ள நிலையில் காட்சியளிக்கிறார்.

  கயிலாயத்தை ராவணன் தூக்குவது போன்ற சிற்பங்களை எல்லோரா, துமர்லேனா குடைவரைகளிலும், தமிழகத்தில் தாராசுரம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும், மேலும் பிற கோயில்களிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளதை காணலாம்.  இச்சிற்பங்கள், கயிலாயத்தில் பார்வதி தேவி சிவனை அணைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, பூதகணங்களும். கின்னரர்களும், தேவேந்திரர்களும், ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் நின்றுகொண்டிருக்க, வித்யாதரர்கள் பறந்துகொண்டு இருப்பதுபோன்று, இருபது கைகளுடன் ராவணன் கீழே இருந்து கயிலாய மலையைத் தூக்குவதுபோல் அமைத்துள்ளனர்.

  {pagination-pagination}

  சிவன் ஜடாபரமும், தேவி கரண்டமகுடமும் அணிந்துள்ளனர். சிவனது காதில் மகரகுண்டலமும், பத்ரகுண்டலமும் உள்ளன. நின்ற கோலத்தில் விநாயகரையும், வணங்குகின்ற கோலத்தில் நந்திகேஸ்வரரையும் காட்டியுள்ளனர். நந்திகேஸ்வரர் கரங்களில் மான் மற்றும் மழு காட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இங்கு, புராணக் கதையையும், சிற்பச் செய்தியையும் முற்றிலும் புதியதொரு கோணத்தில் சிற்பமாக வடிவமைத்துள்ளனர். இங்கு, உமையன்னை அன்புடனும் நேசமுடனும் காணப்படுவதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

  (தொடரும்)

  சான்றெண் விளக்கம்

  1. பரிபாடல்.11.100,
  2. மு. நளினி, இரா. கலைக்கோவன், பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றய்வு மையம், திருச்சி, பக். 36-38.
  3. ச. செல்வராஜ், தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai