Enable Javscript for better performance
அத்தியாயம் 78 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் 78 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

  By த. பார்த்திபன்  |   Published on : 17th August 2018 12:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  யுத்தபூமி அத்தியாயம் 77-ல் ரிக் வேதம் காட்டும் காவிட்டிப் போர்கள் பற்றிய முதல் பகுதி காணப்பட்டது. காவிட்டிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் துதிகளில், அழைத்தல் மற்றும் புகழ்பாடுதல் விளக்கப்பட்டது. இருந்தும், இது காவிட்டி நிகழ்வின் ஒரு பகுதியே. இங்கு அழைக்கப்படுவதும், புகழப்படும் இந்திரனையும், இந்திரன் போன்ற வீரர்களையும் என்க. துதியின் அடுத்த பகுதியாக, வேண்டுதல் அல்லது விருப்பத்தைக் கூறலைக் கொள்ளலாம். தொடர்ந்து எதிரியின் வலிமை அறிதல், சோமத்தை அருந்துதல் அல்லது போர்களும் சோமபானமும், போர் இசைமுழக்கம், போர், பகிர்தல் ஆகிய பகுதிகள் அமைகின்றன.

  காவிட்டியின் நிகழ்வுகள் ஒன்றையடுத்து ஒன்றாக இதே வரிசையில்தான் அமைந்திருந்தன என்பதற்கு எந்த இலக்கணமும் இல்லை. ரிக்கின் பத்து மண்டலங்களிலும் இச்செய்திகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. தொல்காப்பிய மற்றும் புறப்பொருள் வெண்பா மாலை உரைகள் வரிசைப்படுத்தும் வெட்சி, கரந்தை நிகழ்வுகளை முன்மாதிரியாகக் கொண்டு, ரிக் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் நூல்களின் வரிசையமைப்பும் பொருளும், இங்கு வகுக்கப்பட்ட ரிக்கின் வரிசை அமைப்பும் பொருளும் வெவ்வேறானவை. தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பா மாலை வரிசை அமைப்பு பல நிகழ்வுகளைக் கொண்ட மிக நீளமானது. வெட்சியும் கரந்தையும் வேறுவேறு நிகழ்வு வரிசையைக் கொண்டிருப்பவை. பார்க்க, பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2.

  ரிக்கில் ஆநிரைப் போர்கள் என்ற காவிட்டி மேலும் நுட்பமாகவும், விரிவாகவும் ஆராய்ந்து தொகுத்து நிகழ்வுகளை வரிசைப்படுத்த வேண்டியவை. இங்கு ஒரு அறிமுகம் என்ற வகையிலும், தமிழ்ச் சமூகம் மற்றும் ரிக் சமூகம் ஆகிய இரு மேய்த்தல் தொழில் சார்ந்த சமூகங்களிடையே உள்ள ஒன்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்ளவும், ஒன்றையொன்று புரிந்துகொள்ளவும் என்ற பார்வையில் இவை முன்வைக்கப்படுகின்றன.

  வேண்டுதல் அல்லது விருப்பத்தைக் கூறுதல்

  இந்திரனிடம் என்ன வேண்டினர் என்பதை, இருடி மைத்திராவருணி வசிஷ்டனின் பாடல் தெரிவிக்கிறது,

  ‘‘மனிதர்கள் போரிலே ஜயத்துக்குச் செலுத்தும் செயல்களை நடத்துங்கால் இந்திரனை அழைக்கின்றார்கள். சூரனும், மனிதர்களுக்கு நல்லதைச் செய்பவனும், ஆற்றலை விரும்புபவனுமான நீ, எங்களிடம் பசுக்கள் நிறைந்த கோசாலையை செலுத்தவும்;

  இந்திரனே! மகவானே! நீ உன்னுடைய நண்பர்களான மனிதர்களுக்கு ஆற்றலை அளிக்கவும். புருஹுதனே! மகவானே! நீ கெட்டியாய் மூடப்பட்டிருந்த புரங்களின் கதவுகளைத் திறந்தாய். பேரறிவுள்ள நீ எங்கோ மறைக்கப்பட்டிருக்கும் செல்வத்தை இப்பொழுது புலப்படுத்தவும்;

  இந்திரனே! எங்களைச் செய்வப்படுத்த துரிதமாய் எங்களுக்குச் செல்வத்தையளிக்கவும். நாங்கள் எங்கள் துதியால் உன் மனதைக் கவருவோமாக. பசுக்களும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த செல்வத்தை எங்களுக்கு அளிக்கவும்….’’ (ரிக். 7: 27, 1-2 & 5).

  ஆநிரைகளை விரும்பும் துதிகள் பலப்பலவாக உள்ளன. நிரை கவர்தல்கள் மூலம் செல்வத்தைப் (ஆநிரைகளை, குதிரை மந்தைகளை, பொன் போன்ற பிற செல்வங்களை) பெருக்கிக்கொள்ள ஓதப்படும் துதிகள் அவர்களது உள்ளக்கிடக்கைகளையும், அக்காலச் சமூகப் பொருளாதார நிலைகளையும் தெரிவிப்பவையாகவும் உள்ளன.

  ‘‘எந்தப் பகைக்கும் மனிதனின் கொடுமையும், எங்களிடம் சேராமலிருக்க இந்திராக்கினிகளே! (இந்திரனும் அக்னியும்) எங்களுக்கு சுகத்தை அளியுங்கள்;

  நாங்கள் பொன்னும் புரவிகளும், குதிரைகளுமுள்ள செல்வத்தை உங்களிடம் வேண்டுகிறோம். இத்திராக்கினிகளே! நாங்கள் அதை உங்களிடமிருந்து பெறுவோமாக’’;

  இருடி சப்தகு - ஆங்கிரசன் உள்ளக்கிடக்கையைக் கூறும்பொழுது,

  ‘‘வசுக்களின் வசுபதியே! செல்வத்தை விரும்பும் நாங்கள் உன்னுடைய வலது கையைப் பிடித்துக்கொள்கிறோம்…;

  இந்திரனே! குதிரைகளும், தேர்களும், வீரர்களும், நூறும் ஆயிரமுமுள்ள பசுக்கள் இருப்பதும், இனிய ஆட்களுள்ளதும், விப்பிரர்களும், தீரர்களும் நிறைந்தது, சக்தியுள்ளதும், அனைத்தையும் அனுபவிப்பதும், விரும்பவதுமான செல்வத்தை எங்களுக்களிக்கவும்’’ (ரிக்.10: 47, 1 & 5) என்பார்.

  எதிரிகளின் வலிமை அறிதல்

  காவிட்டிப் போரில் எதிரியின் வலிமையை அறிதல் போர் யுக்தியின் முதல் படியாகும். இதற்குச் சான்றாக இருடி வாமதேவர் - கெளதமன், தங்களின் எதிரிகளின் வலிமையை எடுத்துக் கூறி, இந்திரா வருணர்களை தங்களுக்குத் துணையிருக்க அழைக்கிறார். இதில் தங்களின் எதிரி தங்களால் தடுக்க முடியாதவன், கொள்ளையடிப்பவன், துன்புறுத்துபவன் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

  ‘‘உக்கிரர்களான இந்திரா வருணர்களே! நீங்கள் உங்களுடைய மிக்கப் பிரகாசமுள்ளதும், மிக்க உறுதியுள்ளதுமான வச்சிராயுதத்தை, எங்களால் தடுக்க முடியாதவனும், கொள்ளையடிப்பவனும், துன்புறுத்துபவனுமான இந்தச் சத்துருவின் மீது செலுத்துங்கள். அவனை வெல்ல எங்களுக்கு ஆற்றலை அளியுங்கள்’’. (ரிக். 4: 41, 4)

  போலவே, பசு செல்வங்களே தென்படாத இடத்தில் அவற்றைப் புலப்படுத்தவும் வேண்டப்படுகிறது. அதாவது பசுக்களைக் கவர வந்து, அவை தென்படா பொழுது பரத்வாஜனுடைய புதல்வன் இருடி கர்கன், இதனை இவ்வாறு கூறுகிறார்.

  ‘‘தேவர்களே! நாங்கள் பசுக்கள் சஞ்சரிக்காத இடத்துக்கு வந்திருக்கின்றோம். இப்பரந்த பூமி, கொலை பாதகர்கள் இன்புறும் ஸ்தானமாய் இருக்கிறது. பிரகஸ்பதியே! எங்களுக்குப் பசுக்களைத் தேடும் வழியைப் புலப்படுத்தவும், இந்திரனே! வழி தவறிய வழிபடுபவனுக்கு வழியைக்காட்டவும்’’. (ரிக். 6: 47, 20)

  இருடி பரத்வாஜன், இந்திராக்கினிகளை நோக்கிக் கூறும்பொழுது,

  ‘‘இந்திராக்கினிகளே! மனிதர்கள், கைகளில் விற்களை ஏந்தி அவற்றைப் பரத்துகிறார்கள். பசுக்களுக்காகப் போராடும் மகத்தான போரிலே எங்களைக் கைவிடாதீர்கள்’’. (ரிக். 6: 59, 7)

  சோமத்தை அருந்துதல் அல்லது போர்களும் சோமபானமும்

  ரிக் வேதம் காட்டும் மூவகைப் போர்களிலும் சோமபான முக்கியப் பங்கு பெறுகிறது. இந்திரன், அக்னி, ருத்திரர், அசுவினிகள் இன்ன பிற கடவுளர்களைப் போருக்கு அழைக்கும் யாவரும் சோமத்தை அவர்கள் பருக அளிக்கின்றனர். சோமத்தை அளித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றக் கேட்கின்றனர். சோமத்தைப் பருகி மதப்பட (மதம் கொள்ள) வேண்டுகின்றனர். சோமத்துடன் துதிகளையும் கூற வேண்டுகின்றனர்.

  ‘‘பலரால் அழைக்கப்படுபவனும் வெல்பவனுமான இந்திரனுக்கு சோமம் பொழியப்பட்டவுடன் பசுக்களுக்குத் தீனியைப் போன்று திருப்தி செய்யும் துதிகளைக் கூறுங்கள். (ரிக். 6:45, 22).

  சோமத்தை அளிப்பவன் பசுக்களைப் பெற, அசுவினிகளே! பொய்யற்றவர்களே! ருத்திரர்களே! நீங்கள் தலைவர்களால் பருகுவதற்குரிய சோமத்தைப் பருக வேள்விக்கு நேரான வழியில் செல்லுங்கள்’’. (ரிக் 2: 41, 7).

  இருடி பார்கவன் கூறும்பொழுது,

  ‘‘சோமனே! ஆற்றலை விரும்புபவனும், சுத்தப்படுத்துபவனுமான நீ, மகத்தான தாரையோடு இந்திரனுடைய உதிரத்தினுள் பெருகவும். எங்களுக்கு சோதியையும் புவியையும் மேகங்களைக் கறக்கும் மின்னலைப் போல் கறக்கவும், இப்பொழுது எங்களுக்கு யக்ஞத்தால் மிகுந்த உணவைக் கறக்கவும்;

  விசுவத்தின் அரசனான சோமன் பெருகுகிறான். ரிஷிகளைக் கடப்பவனும், சூரியனுடைய ரசிமியால் சுத்தப்படுபவனும், துதிகளின் தலைவனும், ஒப்பில்லாத கவியுமான சோமன் இந்திரனுடைய செயலை விம்புகிறான்;

  நீ சலத்தின் அங்கத்தின் மீது காளையைப்போல் முழங்கிக் கொண்டு, கோசத்துக்கு மந்தையிலே நுழையும் விருஷபனைப் போல் பாய்கிறாய், உன்னால் காக்கப்பட்டு நாங்கள் போரிலே வெற்றி அடைய நீ இந்திரனுக்கு மிக்க மதமளிப்பவனாய்ப் பெருகிறாய்’’. (இருடி கவி பார்கவன், ரிக்.9: 76, 3-5).

  போர்க்களத்தில் முரசும், துந்துபியும்

  காவிட்டிப் போர்களிலும் களத்தில் முரசும் துந்துபியும் இசைக்கப்பட்டதாக சில இடங்களில் ரிக் தெரிவிக்கிறது.

  ‘‘போர் முரசே! நீ உன்னுடைய முழகத்தால் சோதியையும், புவியையும் நிரப்பவும், தாவர சங்கமப் பொருட்கள் எல்லாம் உன் முழக்கத்தை உணர்க. இந்திரனோடும் தேவர்களோடும் சேர்ந்துள்ள முரசே, நீ, சத்துருக்களை வெகு தூரத்துக்குப்பால்  செலுத்தவும்; பகைப்படையை எதிர்த்து முழங்கவும், எங்கள் பலத்தை ஊக்கப்படுத்தவும். கயவர்களைக் கலக்கஞ் செய்யவும்; கர்ச்சிக்கவும்; எங்களைத் துன்புறுத்தி இன்புறுபவர்களை விலக்கவும், முரசே! இந்திரனுடைய (கை)கரமுட்டாய் இருக்கிறாய். எங்களைப் பலப்படுத்தவும்’’. (ரிக். 6: 47: 29-30).

  காவிட்டிகள் - போர்கள்

  காவிட்டி என்பது ஆநிரை கவர்தல் அல்லது கொள்ளையிடல் மற்றும் ஆநிரை மீட்டல் அல்லது கவரப்பட்ட நிரைகளை விடுவித்து மீண்டும் அடைதல் என்ற இருவகைப்பட்ட போர்களையுமே குறிக்கும் சொல் என்பது முன்னரே குறிக்கப்பட்டது. முதலில் நிரை கவரும் காவிட்டி ரிக் காட்சிகள் சில காண்போம்.

  நிரை கவர்தல்

  இருடி சம்யுவின் பாடலொன்று -

  குவித்சன் என்பவனுடைய மாடுகள் நிறைந்த கொட்டில்களை கவரச் செய்ததை,

  ‘‘தஸ்யுக்களைக் கொல்லும் இந்திரன், குவித்சனுடைய மாடுகள் நிறைந்த கொட்டில்களுக்குச் செல்லுகிறான். அவன் அவற்றை எங்களுக்குத் தன் வீரச் செயல்களால் புலப்படுத்துகிறான்’’. (ரிக். 6: 45, 24) என்று காட்டுகிறது.

  இருடி அசிதன் அல்லது தேவலன் – காசியபன் பாவமான சோமனை குறித்துச் சொல்லும்பொழுது, பணிகளிடமிருந்து வென்ற பசுக்கள் பற்றிய செய்தி இடம்பெறுகிறது. இது நிரை கவர்ந்த செயலையே சுட்டி நிற்கிறது.

  ‘‘சோமனே! நீ பணிகளிடமிருந்து வென்ற பசுச்செல்வத்தை ஏந்துகிறாய். நீ வேள்வியை நோக்கி மிக்க முழங்குகிறாய்’’. (ரிக். 9: 22, 7).

  பவமான சோமனை நோக்கி பல இருடிகளால் பாடப்பட்டுத் தொகுக்கப்பட்ட பாடலொன்றில் ருத்ச ஆங்கிரசனின் வரிகள்,

  ‘‘புகழுக்குரிய உன்னுடைய புகழான இடத்திலே நீ இந்த சுத்தப்படுத்தப்பட்ட தாரையோடு பெருகவும். பகையை அழிப்பவனான சோமன், நாங்கள் வெற்றியடைய எங்களுக்கு அறுபதினாயிரம் செல்வங்களைப் பழுத்த பழமுள்ள மரத்தைக் குலுக்கும் ஒருவனைப்போல் குலுக்கினான்’’. (ரிக்.9: 97, 53).

  இதில் சொல்லப்படும் புகழான இடத்தில் என்பது, செல்வம் பெற நடந்த போர் நடந்த இடமாகவும், அது இப்போரில் வெற்றிபெற்றதால் புகழடைந்த சோமனுக்கு புகழ் அளித்த இடம் என்றும் பொருள் கொள்ளலாம். அப்பகுதி ஆற்றின் ஆழமற்றப் பகுதி என லுட்வின் சுட்டுவார். எனில், புகழ்பெற்ற அந்த ஆற்றின் ஆழமற்றப் பகுதியில் சோமனுக்கு புகழ் வழங்கிய அப்போரின் விளைவாக 60,000 செல்வங்கள் அல்லது பசுக்கள் பெறப்பட்டன. அது, பழுத்த பழமுள்ள மரத்தைக் குலுக்கிப் பெற்றதுபோல் என வர்ணிக்கப்படுகிறது. 60,000 எண்ணிக்கை என்பது மிகுதியான எண்ணிக்கை என்பதைக் குறிக்கும் ஒரு எண்ணாக இருக்க வேண்டும்.

  பட்டியல் 1

  பட்டியல் 2

  மொத்தம்

  தொல்காப்பிய வெட்சி / கரந்தை துறைகள் (வெட்சி 14, கரந்தை 21 என 35). இதில் இரண்டு துறைகள் பற்றி விவரம் அறியமுடியவில்லை.

  புறப்பொருள் வெண்பா மாலை வெட்சி / கரந்தை துறைகள் (வெட்சி 19, கரந்தை 13 என 32).

  (காவிட்டியில் நிரைமீடல் மற்றும் பிற பகுதிகள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்).

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai