Enable Javscript for better performance
அத்தியாயம் 75 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் 75 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

  By த. பார்த்திபன்  |   Published on : 29th June 2018 11:47 AM  |   அ+அ அ-   |    |  

  1

  மந்திர வழிபாடு (தொடர்ச்சி…)

  பொதுப்பலியாடு முறை

  தீமை மாற்று மந்திரத்தின் அடிப்படையில் தீமைகளை மாற்றிவைக்க முடியும் என்ற நம்பிக்கையின் விளைவாக உருவான பலியாடு முறை குறித்து முன் அத்தியாயத்தில் விளக்கப்பெற்றது. பலியாடு எந்தவொரு உயிருள்ள அல்லது உயிரற்ற பொருளாக இருக்கலாம் என்பதையும், நோய், தீயஆவி, கண்ணேறு போன்றவை பலியாட்டுப் பொருளில் மாற்றி அமைக்கப்பட்டபின், அப்பொருள் பெரும்பாலும் அழிக்கப்படும் அல்லது தீண்டப்படாது ஒதுக்கப்படும் என்பதையும் நினைவுகொள்க. இவ்வாறு தனி மனிதனின் தீமைகளை மாற்றிவிட முடியும் எனில், ஒரு சமூகத்தின் தீமைகளையும் மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையில் உருவானதே பொதுப்பலியாடு முறையாகும். இச்சடங்கில், தீமையை மாற்றப் பயன்படும் பொருளானது “பொதுப்பலியாடு” (Public Scapegoat Method) என அழைக்கப்படுகிறது.

  பொதுப்பலியாட்டுக்கு, ஆ.சிவசுப்பிரமணி சிறந்ததொரு எடுத்துக்காட்டை அளிக்கிறார். இங்கு பொதுப்பலியாடாக இருப்பது, ‘வைக்கோல் அடைத்த துணிப்பொம்மை கொடும்பாவி’ ஆகும். கிராமத்தில் மழை இல்லையென்றால், ஊரிலுள்ள தீமைகளும் பாவங்களுமே அதற்குக் காரணமென்று கிராமவாசிகள் அதனைப்போக்க, பெரிய கொடும்பாவி ஒன்றை தயாரித்து தெருத்தெருவாக இழுத்துச் சென்று ஊர் மயானத்தில் அதனைக் கொளுத்துவர். இதுபொழுது, இறந்தவருக்கு இறுதிக்கடன் செய்பவர் மொட்டையடித்துக்கொள்வதுபோல், யாராவது ஒருவர் மொட்டையடித்துக்கொள்வதும் உண்டு என்றும், கொடும்பாவி கொளுத்துதலை போலி இறுதிச் சடங்கு என்றும், தீமைகளை மாற்றுவித்து அழிக்கப்படும் பொருளாக கொடும்பாவி விளங்குவதையும் காட்டுவார்.

  மந்திரத்தின் வகைகள் பலவகைப்பட்டதாக உள்ளன எனக் கண்டோம். உற்பத்தி அல்லது வளமை சார்ந்து மேற்கொள்ளும் மந்திரங்களில் ஒத்த என்ற பாவனை மந்திரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இத்தகைய சடங்கு செயல்பாடுகள், பழங்குடி மக்களிடையே உலகெங்கும் காணப்படுகிறது எனக் குறிப்பிடும் தாம்சன், “பாவனை அல்லது உணர்வுப்பூர்வமாக போலச் செய்தல் (mimesis or conscious imitation) என்பது, மனிதன் தனது வாலில்லாத குரங்கு மூதாதையரிடமிருந்து பெற்ற பண்பாகும். ஆனால், பாவனை அதாவது போலச் செய்தல் என்பது, உழைப்பு இயக்கத்துக்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பிறகோ உழைப்பு இயக்கத்தைச் செய்வதுபோல நடித்துக்காட்டும் வகையில் மனிதனால் பயன்படுத்தப்பட்டுள்ளது. யதார்த்த வாழ்க்கையில் அவனது செயல்திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் இந்தப் போலச் செய்தலின் நோக்கமாகும். யதார்த்த கூட்டு உழைப்பு இயக்கத்திலுள்ள குரலியக்கங்களும் உடல் அசைவுகளும் தனியாகப் பிரிக்கப்பட்டு, பாட்டும் நடனமும் இணைந்ததொரு சுயேச்சையான செயல்பாடாக ஒழுங்கமைக்கப்பட்டு சடங்காக உருவெடுக்கிறது” என விளக்குகிறார்.

  இதன் உளவியல் காரணத்தை தேடும்பொழுது, தாம்சன் “குறிப்பிட்ட குலத்துக்கு உரிய குலக்குறி தாவரமாக இருந்தால் அதைச் சேகரிப்பது போலவும் ஆடல் பாடலில் பாவனை செய்வர். அல்லது குலக்குறி விலங்காக இருந்தால் அதற்கே உரிய பழக்க வழக்கங்களைப் போலச் செய்து நடிப்பார்கள். சில சமயங்களில் அவற்றைப் பிடிப்பது போலவும், கொல்வது போலவும் நடிப்பார்கள். பின்னாளில் இந்தச் சடங்குகள், குலக்குறிகளில் குடிகொண்டிருப்பதாகக் கருதப்பட்ட தமது முன்னோர்களிடம், உயிருடன் இருக்கும் குல உறுப்பினர்களைப் பாதுகாக்க உதவும்படி வேண்டுகோள் விடுக்கும் சடங்குகளாக மாறின. குழந்தைகள் பருவமெய்தியதும் அவர்களுக்கு வயது வந்தவர்களின் தகுதியைக் கொடுப்பதற்காக நடத்தப்படும் பாவனைச் சடங்கொன்றில் குழந்தைகள் இறப்பது போலவும் பின்னர் மீண்டும் பிறப்பது போன்றும் நடித்துக் காட்டப்படுகிறது. குல உறுப்பினர்களின் குடியிருப்புப் பகுதியிலிருந்து சற்றுத் தள்ளியுள்ள ஒரு இடத்தில் இச்சடங்கு நடத்தப்படுவதற்கு முன், குடியிருப்புப் பகுதியிலிருந்து அழுகையும் கண்ணீருமாகக் குல உறுப்பினர்கள் இந்த இடத்துக்கு வருவர். சடங்கு முடிந்ததும் ஆனந்தமாகக் குடியிருப்புப் பகுதிக்குச் செல்வர். மக்களின் வாழ்க்கை முறை மேலும் உயர்ந்த காலகட்டங்களில், பல்வேறு இயற்கை நிகழ்ச்சிப் போக்குகளுடன் தொடர்புடைய பாவனை நடனங்கள் காணப்படுகின்றன. பயிர்கள் வளர்வதற்கு, கோடைக்காலத்தைக் கொண்டு வருவதற்கு, இயற்கைச் சீற்றங்களைத் தடுப்பதற்கு, தேய்பிறையை வளர்பிறையாக ஆக்குவதற்கு என நடனங்கள் நிகழ்த்தப்பட்டன” என்றும் காட்டுவார்.

  பாவனை மந்திரங்கள், சமூக வாழ்வியல், தொழில்முறை சார்ந்து பலவாறாக வளர்ந்தன. போலி தொழில்நுட்பம் என்று குறிக்கப்பட்ட இம் மந்திரம், மூன்று உட்கூறுகளைக் கொண்டிருந்தது. அவை - 1. விருப்பம், 2. செயல், 3. சொல். இவற்றுள், விருப்பம் என்பது அடைய வேண்டிய பயனைக் குறிக்கும். செயல் என்பது மந்திரச் சடங்கைக் குறிக்கும். சொல் என்பது மந்திரச் சொற்கள், மந்திரச் சூத்திரங்களை அல்லது கட்டளைக் குறிக்கும்.{pagination-pagination}

  வேட்டைச் சமூகத்தில் மந்திரம்

  விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மக்கள் வேட்டைக்குச் செல்லும் முன், வேட்டையாடும் விலங்கினைப் பிடிப்பது போலவும், கொல்வது போலவும் ஒரு கற்பனையான நிகழ்ச்சியினை நடனம் மூலம் நிகழ்த்திக் காட்டிச் செல்வர். இந்நிகழ்வை ஓவியமாகவும் தீட்டியுள்ள வைத்துள்ள சான்றுகளை நாம் அறிந்துள்ளோம். பிற்காலத்தில், இந்த ஓவியங்களை வணங்கி வழிபடுவதன் வாயிலாகவும் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கலாம். இதனை, “வேட்டை மந்திரம்” என்று குறிப்பர். வேட்டையில் விலங்குகள் கிடைக்க வேண்டும் என்ற விருப்பமும், அதனை அடைவதற்குச் செய்யும் செயலும் ஒத்திருப்பதன் முலம் அவ்விருப்பம் நிறைவேறும் என நம்பிக்கைக் கொள்வதால், இவ்வேட்டை மந்திரம் ஒத்த மந்திரக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைவதாகிறது.

  பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் காணப்படும் குகை ஓவியங்கள் போன்று, 30,000 - 17,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழமையான பழைய கற்கால ஓவியங்கள் இந்தியாவில் கிடைக்கவில்லை. பிம்பட்காவில் கிடைத்த மிகப்பழமையான குகை ஓவியங்களின் காலத்தை 10000 முதல் 3000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே, குறிப்பாக நுண்கற்கால, புதிய கற்காலப் பண்பாட்டுக்கு உரிய ஓவியங்களாகவே கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் கிடைத்துள்ள மிகப்பழமையான பாறை ஓவியங்கள் நுண்கற்காலத்தைச் சார்ந்தவையாக உள்ளன. வேட்டைக்காட்சிகள் கொண்ட பாறை ஓவியங்கள் இரும்புக் காலத்தைச் சார்ந்தவையாக உள்ளன. இந்த ஓவியங்கள் ஒத்த என்ற பாவனை மந்திரத்தின் அடிப்படையில் அமைந்தவையே. சான்றாக, கருக்கியூர் வேட்டைக்காட்சி ஓவியம் அமைக்கிறது.

  மேய்த்தல் சமூகத்தில் மந்திரம்

  மேய்த்தல் சமூகத்தில் மந்திரம் என்ற வகையில் சன்னியாசிக்கல் மற்றும் ரிக் வேள்வி வழிபாடுகள், முந்தைய சில யுத்தபூமி அத்தியாயங்களில் காணப்பட்டது. கால்நடைகளின் வளமைக்கும், பெருக்கத்துக்குமான இம்மந்திரங்கள், ஒத்த என்ற பாவனை மந்திரக் கோட்பாட்டை வெளிப்படுத்துவதே. இங்கு பலி விலங்கின் ரத்தம் உயிரின் குறியீடாகவும், நோய்களை போக்கும் மருந்தாகவும் பயன்படுவதும் நினைவுகொள்ளத்தக்கது.

  {pagination-pagination}

  வேளாண் சமூகத்தில் மந்திரம்

  உலகளாவிய நிலையில், புதிய கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் (இடம் சார்ந்து காலகட்டங்கள் மாறுபடினும்) வேளாண்மை முக்கிய இடத்தைப் பெற்றது. அதே சமயத்தில், இக்காலகட்டம் புதிய கண்டுபிடிப்புகளின் காலம் என தொல்லியலாளர்கள் அறிவிப்பர். கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை உள்பட தாவரவியல், மருத்துவம், வானவியல் முதலான அறிவுசார்ந்த துறைகள் பெருவளர்ச்சியுற்ற காலகட்டம் இதுவாகவே விளங்குகிறது. வேளாண்மை செழித்தபடியால், மனிதனுக்கு உணவுக்காக குறைவான நேரம் செலவுசெய்வது போதுமானதாக இருந்ததால், சிந்திப்பதற்கும், செயலாற்றுவதற்கும் அதிக நேரம் கிடைத்தது. இதன் காரணமாக அறிவு சார்ந்த துறைகள் பெருவளர்ச்சியுற்றன. மனித வாழ்வை எளிமையாக்கும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் விளைந்தன.

  வேட்டைச் சமூகத்திலும், மேய்த்தல் சமூகத்திலும் முளைத்து எழுந்திருந்த மந்திரங்கள், வேளாண்மைச் சமூகத்தில் பலதிறமாக வளர்ச்சியுற்றன. மக்களின் நம்பிக்கை சார்ந்து அவற்றின் பரிமாணங்களும் பலவகைப்பட்டதாக இருந்தன. விதைப்பதில் இருந்து அறுவடை செய்வது வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு மந்திரங்கள் எழுந்தன. இவை அனைத்துமே வேளாண்மையில் விளைச்சலை அதிகரிப்பது என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன.

  வேளாண்மைச் சடங்குகள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. ஒரு பருந்துப் பார்வையோடு இவற்றை தொகுக்கலாம்.

  1. விதைப்புக்கு முன், பொங்கலிட்டுப் பலி கொடுத்து பலிப் பொருள்களின் ரத்தத்தில் விதைகளை தேய்த்து விதைப்பது.

  ரத்தம், உயிர்ச் சக்தியின் அறிகுறி. ரத்தத்தில் விதை நனைக்கப்பட்டால் விதை நன்கு வளரும் என்பது நம்பிக்கை. தமிழர் மரபில் திருமுருகாற்றுப்படை விவரிக்கும் வெறியாடல், விதைப்புக்கு முந்தைய சடங்கு எனவும், பலியிட்ட மறியின் ரத்தத்தில் விதைகளை தேய்த்து விதைக்கின்றனர்.

  2. கோவில்களுக்கு தானியத்தைக் காணிக்கையாக்கி அதிலிருந்து கொஞ்சம் எடுத்துவந்து, விதை தானியத்தோடு கலந்து விதைப்பது.

  3. நெல் போன்ற நாற்றுவிடும் பயிர்களை, நாற்றுக்களை வழிபாடு செய்த பின்னறே நடவு செய்வது.

  4. அதிக பிள்ளைப்பேற்றை உடையவள் அல்லது இரட்டைக் குழந்தைகளைப் பெற்றவள் முதன் முதலில் வயலில் நாற்றுகளை நடுவது. இது, இப்பெண்ணின் வளமை அப்பயிருக்குக் கிடைக்க வேண்டும் என்பதன் நோக்கமாகும்.

  5. விளைநிலத்தில் மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் அவ்விளைநிலத்தின் செழிப்பை அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையும் பழங்குடி மக்களிடையே காணமுடிகிறது. மானுடச் செழிப்பை தரும் புணர்ச்சியின் வாயிலாக தாவரங்களின் செழிப்பை பெருகச் செய்வதே இதன் அடிப்படை நோக்கமாகும். இதற்குச் சான்றாக, மத்திய அமெரிக்காவின் பிப்பில்ஸ் என்ற மக்களிடையே உள்ள சடங்கை பிரேசர் காட்டுகிறார். “நிலத்தில் விதைக்கும் நாளுக்கு முந்தைய நான்கு நாள்கள் மனைவியரை விட்டுப் பிரிந்திருப்பர். விதைக்கும் நாளுக்கு முந்தைய இரவன்று முழுவீச்சுடன் புணர்ச்சியில் ஈடுபடுவர். நிலத்தில் விதைகள் விதைக்கப்பட்ட அடுத்த நிமிடமே புணர்ச்சி செய்வதற்கென்றே சிலரை நியமிப்பர். ஜாவாவின் சில பகுதிகளில் நெற்பயிரில் பால் பிடிக்கும் தம்பதியர், இரவில் விளைநிலத்துக்குச் சென்று உறவு கொள்வர். இதுவும், பயிர் செழுமையை பெருக்கிக்கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே”.

  இவ்வகைச் சடங்குகள், குறியீட்டுத்தன்மையைப் கொண்டு போலிப்பொருள் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. இவை அண்மைக்காலத்திலும் வழக்கில் இருந்ததை தருமபுரி மாவட்டத்தில் ஜருகு என்ற இடத்தில் கண்டதை இரா. பூங்குன்றன் காட்டுவார். செழிப்பை அடிப்படையாகக் கொண்ட இச்சடங்கு மூன்று நாள்கள் நடைபெறும் என்றும், அவ்விழாவில், “களிமண்ணால் செய்யப்பட்ட ஆண்-பெண் உருவங்கள் இரண்டு நாள்கள் தரையில் கிடத்தப்படும். விழாவின் இறுதிநாளன்று, ஒரு கிராமத்தில் இருந்து களிமண்ணால் ஆன ஆண்குறியைக் கொண்டுவருவர். மற்றொரு கிராமத்தில் இருந்து பெண்குறியைச் செய்துகொண்டு வருவர். இறுதியாக நடைபெறும் சடங்கில், ஆண்குறியை பெண்குறியில் நட்டுவைப்பர். கிடத்தப்பட்டிருக்கும் ஆண்-பெண் உருவங்களைப் புணரும்படி செய்வர். விழாவின் தொடக்க நாளன்று தானியங்கள் முளைவிட்டிருக்கும். களிமண்ணோடு ஒரு பிடி பெயர்த்துக்கொண்டு போய் தங்கள் வயலில் தூவுவர். அதனால் வயல் வளம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.” இதனை ஒட்டியே, பயிர் விளைச்சலைக் குறிக்க போகம் என்ற சொல் வழக்குப்பட்டுள்ளதாக மொழி நூலார் கருதுவர். போகம், புணர்ச்சியை குறிக்கும் சொல்லாகும்.

  {pagination-pagination}

  மானுட வளமை மந்திரச் சடங்குகள்

  வேளாண்மையில் மந்திரச் சடங்குகளைப் போலவே, மானுட வளமை குறித்த மந்திரச் சடங்குகள் உள்ளன.

  பெண்குறி வழிபாடாக உள்ள சக்கராயி, லஜ்ஜாதேவி போன்ற நிர்வாண / பெண்குறிகளை காட்டும் பெண் தெய்வங்களை வணங்குதல் இதன் ஒருவகையாகும். பெண் கருப்பையின் குறியீடாக உள்ள பூர்ணகும்பம் வணங்குவது மற்றொரு வகையாகும். கரகம், பூர்ணகும்பத்தின் குறியீடே. நீர் வடியும் மண்கலமும் நீர் வடியும் கும்பத்தின் குறியீடே. நீர் நிரம்பிய கரகம் பூசைகளிலும், திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் இடம்பெறுவது தமிழர் மரபாகும். ஈமச் சடங்கில் நீர் நிரம்பிய மண்கலத்தில் துளையிட்டு நீர் வடியச் செய்வதும் வளமையின்பார்ப்பட்டதே. குடும்ப உறுப்பினர் இறந்த பிறகும், செழிப்பு அவ்வீட்டில் நிலைத்திருக்கச் செய்யும் சடங்கே அது. இறப்பு என்பது தாயின் கருவறைக்கு மீண்டும் திரும்புதல் என்பர். இதன் காரணமாகவே, அஸ்தியை கும்பத்தில் (மண்கலத்தில்) சேகரிப்பதும் ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. இறந்தவர்களை புதைத்த தாழி, பேழை, கல்லறை, போன்ற ஈமச்சின்னங்களும் தாயின் கருப்பையின் குறியீடாகலாம். இதனாலேயே மூதாதையர் வழிபாடு வளமைச் சடங்காக உள்ளது.

  மூதாதையர் நினைவுச்சின்னமான நடுகற்களில் கெண்டி இடம்பெறுவது மதுக்குடத்தின் குறியீடு என்றும், பூர்ணகும்பத்தின் வளர்ச்சி அடைந்த நிலை என்றும் தொல்லியலாளர்கள் கருதுவர். கெண்டியின் புடைத்த நடுப்பாகம் பெண்ணின் கருப்பையின் குறியீடு என்றும், நீண்ட மூக்குப்பகுதி ஆண்குறியின் குறியீடாகும் என்றும் விளக்கப்படும். இதனால் மானுடச் செழிப்பின் மூலமாக விளங்கும் ஆண் - பெண் சேர்க்கையை கெண்டி குறியீடாக்குகிறது.

  மேலாக, லிங்க வழிபாடு மானுட வளமை வேண்டி வணங்கப்படும் குறியீட்டு வடிவமே. பாவனை மந்திரத்தின் வெளிப்பாடாக காணவேண்டிய வடிவமே.

  (தொடரும்)

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp