வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

உயர... உயர... உயர்வு..!

போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், பொருளாதாரத்துக்கும் அத்தியாவசியமானது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 6:43 am


போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், பொருளாதாரத்துக்கும் அத்தியாவசியமானது. தற்போது வான்வழிப் போக்குவரத்து மிகவும் நெரிசல் மிகுந்ததாகியுள்ளது. விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. அவர்களைக் கவர்ந்து வருகிறது. இதற்காக விசா பெறுவது உள்ளிட்ட பல விதிமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது.

2018 மே மாதத்தில் மட்டும் 12 விமான நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் 1.18 கோடி பேர் பயணித்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1.01 கோடியாக இருந்தது என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பிரதமரும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், தொழிலதிபர்களும், வசதி படைத்தவர்களும்தான் விமானப் பயணம் மேற்கொள்வர் என்ற நிலை தற்போது மாறிவிட்டது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பல்வேறு தனியார் விமான நிறுவனங்கள் குறைந்த கட்டணங்களை நிர்ணயித்து, பயணிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்து வருகினறன. 
இந்தியாவில் புது தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை என்று பெருநகரங்கள் மட்டுமல்லாமல், கோவை, சூரத், ஆமதாபாத், ராஞ்சி, பாட்னா, அமிருதசரஸ் என இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள 25 இரண்டாம் நிலை நகரங்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஓராண்டில் சுமார் 20% அளவுக்கு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், புது தில்லியில் 14.5 சதவிகிதமும், மும்பையில் 6.5 சதவிகித வளர்ச்சியுமே காணப்பட்டுள்ளது.
2017-18 ஆம் நிதியாண்டில், விமானங்களில் பயணித்தோர் எண்ணிக்கை சுமார் 30.8 கோடி. அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் பயணித்தோரின் எண்ணிக்கை சுமார் 26.5 கோடி. மேற்கூறிய ஓராண்டில், ராஞ்சி மற்றும் அமிருதசரஸ் விமான நிலையங்களில் இருந்து பயணித்தோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக, முறையே, 72% மற்றும் 64% அதிகரித்துள்ளது. 
சிறிய விமான நிலையங்களிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மக்களின் விமானங்களின் பயணம் செய்யும் அளவுக்கு அவர்களது வசதி பெருகியுள்ளது. அவர்களைக் கவர கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன என விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
பயணிகள் எண்ணிக்கை உயருவதற்கு மற்றொரு காரணம், அதிக அளவில் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் விமான சேவைகளை அரசு மற்றும் தனியார், பன்னாட்டு விமான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது என ஜெயந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். உடான் போன்ற திட்டங்கள் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று சுற்றுலா முகவர் நிறுவனங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. சில வழித்தடங்களில் ரயில் கட்டணங்களுக்கு இணையாக விமானக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதுவும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக 
அமைகிறது.
இந் நிலையில், குறைந்த கட்டணம், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, கூடுதல் சேவை ஆகிய காரணங்களால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 48 கோடியாக அதிகரிக்கும் என்றும், இது ஜப்பானில் பயணிப்போரைவிட அதிகம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
2016-17 நிதியாண்டில், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டில் பயணித்தோர் எண்ணிக்கை 7.39 சதவிகிதமும், வெளிநாடுகளுக்குப் பயணித்தோர் எண்ணிக்கை 11.86 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்து சந்தையின் மேம்பாட்டுக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் விமானப் போக்குவரத்தில் 3-ஆவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா, 2025-இல் பிரிட்டனை முந்திவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத் துறையில் கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி அதிகரித்திருந்தது. அடுத்த 10-15 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்தில் உலக அளவில் இந்தியா பிரதான இடத்தைப் பெறும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு. 
குறைந்த கட்டண விமான சேவை, அதிநவீன விமான நிலையங்கள், சிவில் விமானப் போக்குவரத்து துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பாடு மற்றும் பிராந்திய போக்குவரத்து சேவை அதிகரிப்பு ஆகிய இவையெல்லாம் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளன. 2018 மார்ச் இறுதி நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 550 வர்த்தக விமானங்கள் சேவையாற்றி வருகின்றன என்று விமானப் போக்குவரத்துத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
விமானப் போக்குவரத்துத் துறையில் 2000 முதல் 2017 வரை 160.80 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.11,000 கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய விமான நிலையங்கள் அமைக்க ரூ.15,000 கோடி முதலீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 183 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.12,600 கோடி) முதலீடு செய்ய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. உள்-பிராந்திய சேவைகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மத்திய நிதி அறிக்கையில், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கென ரூ.6,602.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஒதுக்கீடுகளின் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகமாகும். 
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.980 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரியுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 486 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு விமான ஓடுதள வசதி, விமானி பயிற்சி மையங்கள், பாதுகாப்புத் துறை விமான நிலையங்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 10 நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியாருக்கு சொந்தமான விமான நிலையம் உள்ளது. பாதுகாப்புத் துறைக்கென அரக்கோணம், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் விமான நிலையங்கள் உள்ளன.
"உடான்' திட்டத்தின்கீழ் பிராந்திய சேவைகளை அதிகப்படுத்த முனைப்புக் காட்டப்பட்டு வருகிறது. அதாவது, சிறு நகரங்களுக்கிடையே குறைந்த கட்டணத்தில் சேவையளிப்பதன் மூலம் அதிக பயணிகளை ஈர்க்க முடியும் என விமானப் போக்குவரத்துத் துறை எண்ணுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நெரிசலைப் போல, மதுரை விமான நிலையத்திலும் கூட்டம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.