வங்கி துறையில் மிக குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சேவை அளித்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா பிடிஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏடிஎம் பரிமாற்றம், ரொக்க டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி கட்டணம் வசூலித்து வருகிறது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி அத்தகைய கட்டணங்கள் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதர தனியார் துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ மட்டுமே சேவைகளுக்கு மிகவும் குறைவான கட்டணத்தை வசூலித்து வருகிறது.
பாதுகாப்பான வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு வங்கி அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.
இதைத் தவிர, நாடு முழுவதும் ஏடிஎம் மையங்களை நிறுவவும் அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வசதி மற்றும் பலனை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் வங்கி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
செலவிடப்படும் முழு தொகையில் ஒரு பகுதியையேனும் திரும்பெறும் வகையிலேயே வங்கி சேவைக்கு கட்டணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சேவையின் தரத்தை உயர்த்திடுவதையும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கி சேவையை விரிவுபடுத்துவதையும் முக்கிய நோக்கமாக் கொண்டே வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருப்பது மறுபடியும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவையைப் பொருத்தமட்டில் மிகவும் குறுகிய காலத்தில் இரு முறை கட்டண குறைப்பை எஸ்பிஐ அமல்படுத்தியுள்ளது. அதன்படி கடந்தாண்டு அக்டோபர் மற்றும் நடப்பாண்டு ஏப்ரலில் ரீடெயில் மற்றும் டிஜிட்டல் வங்கிக்கான சேவைக்கான கட்டண குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டன. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ரிவார்டு பாய்ண்ட்ஸ் எனப்படும் வெகுமதி புள்ளிகளையும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வழங்கி வருகிறது.
மொத்தமுள்ள சேமிப்பு கணக்குகளில் 60 சதவீதம் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவை.
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கட்டண சேவைகள் தவிர, ஏடிஎம்-இல் மாதத்துக்கு 5 முறை பணப் பரிமாற்ற சேவை, கிளைகளில் 2 முறை பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி போன்றவற்றை எஸ்பிஐ இலவசமாக வழங்கி வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









